Tuesday, September 26, 2017

புதுக்கோட்டை அருகே அம்பலத்திடல் பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிர் நிலை கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வில்வன்னி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள அமபலத்திடல் பகுதியில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர்  மணிகண்டன், தலைவர் கரு. ராசேந்திரன், உறுப்பினர்கள்  கஸ்தூரிரங்கன், புதுகை செல்வா, சந்திரசேகர்,பாரதிராஜா, ஆகியோர் பாலகிருஸ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மதியழகன், மகாராஜா, பத்திரிக்கையாளர்கள் பகத்சிங், கண்ணன் முத்துப்பழம்பதி ஆகியோருடன் அம்பலத்திடலில் இரண்டாம் கட்ட    கள ஆய்வை மேற்கொண்டனர். அப்போது தாழிகள் கருப்பு சிவப்பு பனையோடுகள் விரவிக்கிடக்கும் அதே பகுதியில் இருக்கும் சுண்ணாம்பு திட்டையில்  சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு மனித வழிபாட்டுத்தலங்களாக கருதப்படும்  புதிர் நிலைகள்  அமைந்துள்ளதை கண்டறிந்தனர்.
 இது குறித்து மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறும் போது.
அம்பலத்திடல் பகுதியில் மனித இனம் வாழ்ந்ததற்காண ஏராளமான வரலாற்று சான்றுகள் புதையுண்டுள்ளது. அதில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த புதிர்நிலை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இவ்விடத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் முக்கிய சான்றாக உள்ளது..








உலகளாவிய புதிர் நிலைகள்
கிரீட் தீவில் கிடைத்த ஃபைலோஸ் என்னும் பெயர் சூட்டப்பட்ட கி.மு. ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான களிமண்ணால் செய்யப்பட்ட புதிர்நிலைகள், சார்டீனியத்தீவுப் பிரதேசத்தில் கி.மு. 200 ம் ஆண்டைச் சேர்ந்த லுசன்னா என்ற இடத்திலுள்ள  புதிர்நிலைகள் மிக முக்கியமானதாக உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிக அளவிலான புதிர்நிலைகள் ஸ்காண்டிநேவிய நாடுகளில் காணப்படுகின்றன.


தமிழகத்தில் புதிர் நிலைகள்
தருமபுரி மாவட்டம் கம்பைய நல்லூர்,  காவிரி நுழையும் பகுதியான  பெரியகோட்டை பகுதியில்  செவ்வகம் வடிவிலான புதிர்நிலையும், கிருஷ்ணகிரி மாவட்டம் பைரேகவுணி யில் சுருள் வளைய வடிவ புதிர்நிலையும் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் குழுவினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது,  திருப்பூர் கிடிமேடு பகுதியில் புதிர்நிலை ஒன்றை தொல்லியல் ஆய்வாளர் ரவிக்குமார் குழுவினர் தலைமையிலான திருப்பூர் வீர ராஜேந்திரன் வரலாற்று பேரவையினர் அடையாளப்படுத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி திருச்சி ,திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் புதிர் நிலைகள் உள்ளன. 
அம்பலத்திடலில் புதிர்நிலை
புதிர் நிலைகளைப் பொறுத்த வரையில் மனித நடமாட்டம் குறைவான இடங்களிலோ அல்லது தொடர் வழிபாட்டில் உள்ள இடங்களிலோ இருந்தால் முழுமையானதாக காணப்படும்
முற்கால வழிபாட்டு தலமான புதிர்நிலை அம்பலத்திடலில் அடையாளம் காணப்பட்டுள்ளதன்  மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் புதிர் நிலையாக உள்ளது .  இது  சுண்ணாம்பு திட்டை மீது இருபுறங்களில் முழுமையாக சிதைந்தநிலையில் 20 அடி   நீள அகலத்துடன் சதுர வடிவில் , மேடு பள்ளத்துடன் கூடிய புதிர் பாதைகளோடு  நேர்க்கோடுகளாக அமைந்துள்ளன.
இதே இடத்தில்  அடையாளம் காணப்பட்ட  பானை குறியீடுகளை ஒப்புநோக்கும் போது  இங்குள்ள பழங்கால அமைப்புகள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருத வேண்டியுள்ளது என்கிறார்.
மேலும் அமைப்பின் தலைவர் கரு.ராஜேந்திரன் கூறுகையில் அம்பலத்திடல் பகுதியில் மத்திய, மாநில தொல்லியல் துறை இந்தப் பகுதியை ஆய்வு மேற்கொண்டு இங்கு புதைந்துள்ள வரலாற்று சான்றுகளை ஆவணப்படுத்த வேண்டும். இன்னும் காலம் கடத்தினால் தடயமே இல்லாமல் அழிந்து போக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இங்கே கீழடிக்கு இணையான சான்றுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது என்றார்.


               
இணையதொடர்புகள் :

1 comment:

  1. மல்லரடிபட்டி என்பதனை மலையடிபட்டி என்று சொல்லல் ஆய்வுக்கு உரியது. https://www.facebook.com/sangathtamilmallar/posts/647677275948547

    ReplyDelete

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....