Monday, November 4, 2019

செல்லுக்குடி வணிகக்குழு கல்வெட்டில் உயிரினப்பல்வகைமை



                 
   லகம் முழுவதும் மனித செயற்பாடுகளில் உயிரினங்களின் பங்களிப்பு என்பது தவிர்க்க இயலாத ஒன்று , உணவு , மருந்து , உடை , இருப்பிடம் , இடபெயர்ச்சி என மனித பயன்பாட்டில் தாவர மற்றும் விலங்குகளின் பங்களிப்பு மிகுதியாகவும், இன்றியமையாததாகவும்  உள்ளது. மேலும் இத்துடன் நுண்ணுயிரிகளின் பங்களிப்பும் தற்போது மிக முக்கிய இடத்தை தொட்டு வருகிறது.
இத்தகைய உயிரினப்பல்வகைமை பண்டைய காலங்களில் எத்தகைய நிலையிலிருந்தது என்பதை ஓலைச்சுவடிகள் , ஓவியங்கள் , உலோக பட்டயங்கள் , கல்வெட்டுகள் 1 , இலக்கிய சான்றுகள் , செவிவழி கதைகள் , பாரம்பரிய மருத்துவ முறைகள் உள்ளிட்டவைகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
இத்தகைய ஆவணங்களில் சொல்லப்படும் தகவல்களே பழங்கால உயிரினப்பரவல் பற்றிய  சான்றுகளாக உள்ளன.
இதன் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் வணிகக்குழுக்கள் வாணிபம் செய்த ஊர்களில் வழிபாட்டுத்தலங்கள் அமைத்துக்கொடுத்தல் ,சீரமைத்துக்கொடுத்தல்,  நீர்ப்பாசன அமைப்புகளை ஏற்படுத்துதல், சாலை அமைத்தல் நலத்திட்டங்களை செய்துள்ளனர். இவற்றை  கல்வெட்டுகளில் மூலம் பதிவு செய்துள்ளனர். மேலும் தமது பகுதியின் வளத்தை மெய்க்கீர்த்திகளாக2 பொறித்துள்ளனர்.மெய்க்கீர்த்திகளில் உயிரினப்பல்வகைமை பற்றியத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதே வகையிலமைந்த புதுக்கோட்டை மாவட்டம், செல்லுகுடி வணிகக்குழு கல்வெட்டு3, எமது குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் உயிரினப்பல்வகைமை பற்றிய தகவல்கள் அடங்கியுள்ளது. அவற்றை உலகம் முழுவதும் ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட வணிக்கக்குழு கல்வெட்டுகளோடு ஒப்பு நோக்கி இக்கட்டுரையை சமர்பிக்கிறோம்.

உலகலாவிய வணிக சான்றுகளில் இந்தியாவின் உயிரினப்பல்வகைமை: 

முசிறிஸ் மற்றும் அலெக்சாண்ட்ரியாவுக்கு இடையே நடைபெற்ற வணிகம் தொடர்பான புதிய செய்தி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வியன்னா அருங்காட்சியக பேபிரஸிசில் ( தொல் எழுத்து வடிவில் பொ.கா இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது ) வெளிப்பட்டுள்ளது.
 முசிறியில் முடிவான கடன் ஒப்பந்தம் மூலமாக அலெக்சாண்ட்ரியா வணிகர் ஒருவர் முசிறியிலிருந்து தந்தம் மற்றும் துணிக்கட்டுகளை இறக்குமதி செய்வதை பதிவுசெய்கிறது (Sidebothem 1991:30).

இலக்கியங்களில் வணிகச்சான்றுகளும் உயிரினப்பல்வகைமையும் :

அழகான கப்பல்கள் பெரியாறு ஆற்றின் வெண் நுரைகளை அலைக்களித்துக்கொண்டு பெரும் சப்தத்துடன் முசிறிக்குப் பொன்னுடன் வந்து மிளகுடன் திரும்பிச் செல்லும் என்று அகநானூற்றின் (149, வரிகள் 9 - 12 ) பாடல் தெரிவிக்கிறது.
 சங்ககால கடைவீதிகள் மலை, நிலம், நீரிலிருந்து கிடைத்த பொருட்களை சிறு, பெரு வணிகர்கள் விற்க, அங்காடியின் நான்கு தெருக்களிலும் கூட்டம் அலைமோதியது. மதுரைக் கடைவீதியில் ஆண்களுக்கு இணையாக மகளிரும் கடை வைத்து வணிகம் செய்ததை  காழ் சாய்த்து நொடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர் ஒள்ளிழை மகளிர் பள்ளி அயர - மதுரைக்காஞ்சி. பதிவு செய்கிறது.

பூம்புகார் நகர வணிகத்தை பகர்வனர் திரிதரு நகர வீதியாக – என்கிறது சிலப்பதிகாரம்.  இங்கே பட்டு (Bombyx mori – cocoon ), மயிர், பருத்தியால்(Gossypium arboretum L. ) செய்த உடைவகைகள் கடைகளை நிறைத்திருந்தன. மயிரால் செய்யப்பட்ட உடைகள், நறுமணப் பொருட்கள் (Spices), மரம் கொல் தச்சர், கொல்லர் இருந்தனர்.  இந்த சான்றுகளின் வழியாக தமிழகத்தின் விளைபொருட்கள் பற்றிய விரிவான அறிவை பெற இயல்கிறது.

சங்க கால சிறு வணிகத்தில் பெண்களும் உயிரினப்பல்வகைமையும்:
பஞ்சு போன்ற புறவிதழ் உடைய குருக்கத்தி (Hiptage benghalensis
(LKurz
) மலர்களுடன் சண்பக மலர்களை (Magnolia champaca .L) இணைத்துக் கட்டியும் சேர்த்துப் பரப்பியும் வைத்த மூங்கில் (Bambusa bamboo) தட்டு. புதிதாய்ப் பூத்த மலர்கள் என்பதால், வண்டுகள் ரீங்காரமிட்டுத் தேனெடுத்தன. இந்த வண்டு (Apis florae) சூழ் மலர்த்தட்டைச் சுமந்தவளோ உழவர்குடியின் இளமகள். அவள் மலர்களின் பெயர் சொல்லி, ‘குருக்கத்தியோடு பித்திகை (Jasminum angustifolium Willd). விரவுமலர் கொள்ளீரோ  (நற்றிணை – பா.97 ) என்று பூ விற்கும் பாவையாய் முல்லை நிலத்தில் வீதியுலா  வருகிறாள்.
பெண்களை மீன் விற்பனையாளர்களாகவும் அகப் பாடல் ஒன்று,   நாண் கொள் நுண்கோல்  - அகநானூறு ( மருதம்  216)  காட்டுகிறது.

இடைக்கால வணிகக்குழு கல்வெட்டு சான்றுகளில் உயிரினப்பல்வகைமை : திருக்கொடுங்குன்றமென்றும் அறியப்படும் சிவகங்கை மாவட்டம் பிரான்மலையின் அடிவாரத்தில் உள்ள அழகிய திருச்சிற்றம்பலமுடைய நாயனார் கோயில் திருக்காவணத்தில் கூடிய பதினெண் விஷயத்தார் கோயில் திருப்பணிக்காகத் தங்கள் வணிகப் பொருட்களின் சுமைக்கேற்பக் காசு அளிக்க ஒப்புதல் அளித்து  ஒரு கல்வெட்டு 4 பொறிக்கப்பட்டுள்ளது. அதில்  மிளகு (Piper nigrum L.,) மஞ்சள் (Curcuma longa. L), சுக்கு (Zingiber officinale. Rose, ) வெங்காயம் (Allium cepa. L), கடுகு ( Brassica jucea .L ), சீரகம் (Cuminum cyminum.L), பரும்புடவை (Gossypium arboream thread) , மெழுகு (Honey comb wax), எள்(Sesamum indicum), பாக்கு (Areca catechu) என்பன பொதியாகவும்4, தலைச்சுமையாகவும், சிறு மூட்டைகளாகவும் அங்காடிகளுக்குச் செல்ல உப்பு, நெல்(Oryza sativa), அரிசி                   (Oryza sativa), பயறு(Vigna radiate L.), அவரை(Lablab purpureas), துவரை (Cajanus cajan), ஆமணக்குக் கொட்டை(Ricinus communis, பருத்தி நூல்                                                                                  (Gossypium arboream thread), இரும்பு4 (Iron) ஆகியன வண்டிகளிலும் ஏற்றி அனுப்பப்பட்டன. பொதியாக கொண்டு செல்லப்பட்ட விளை பொருட்களுள் சந்தனம்(Santalum album wood) குறிப்பிடத்தக்கது. தலைச்சுமையாக இறங்கிய பொருட்களில் அகில் (Aquilaria agallacha) , கற்பூரத் தைலம் (Turpentine oil) ஆகியன இருந்தன. சவரி முடியும் விற்பனைக்குத் தலைச்சுமையாக வந்ததைக் கல்வெட்டுப் பதிவு செய்துள்ளது. தேன் குடத்திலிட்டு விற்கப்பட்டது.  மாடு (Bostaurus indicus) , யானை (Elephas maximus indicus), குதிரை (Equus ferus caballusL.,) ஆகிய விலங்குகளும், விற்பனை செய்து வாங்கப்பட்டுள்ளமையை இக்கல்வெட்டு 4 பதிவு செய்துள்ளது.

தென்னிந்திய வணிகக்குழுக்களின் கல்வெட்டுகள் :
                         வணிகக்குழுக்களின் கல்வெட்டுகளைப்பொறுத்தவரை இந்திய மாநிலங்களான   தமிழகத்தில் 118 , கர்நாடகாவில்  132 ,ஆந்திராவில்  35, மகராஷ்டிராவில் 2 கேரளத்தில்  8 எண்ணிக்கையிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா (சுமத்ரா), தாய்லாந்து, மியான்மர் ஆகியவற்றில் நான்கும், இலங்கையில் 15 எண்ணிக்கையிலும் என  இதுவரை 314 வணிகக்குழுக்களின்  கல்வெட்டுகள்5  அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் புதுக்கோட்டை6 மாவட்டத்தை பொறுத்தவரை 10 வணிகக்குழு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுகளில் வணிகக்குழுக்களின் முக்கியத்துவம் :
மன்னருக்கு இணையான உரிமைகளுடன் வணிகர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு அந்நாட்டிலுள்ள மன்னர்களோடு இணக்கமான உறவுகளை கொண்டிருந்தனர். இத்தகைய வணிக குழுக்களுக்கு குதிரையில் செல்லும் உரிமை, பல்லக்கில் செல்லும் உரிமை வழங்கப்பட்டன. பணபகுதி எனும் பெயரில்  கோயிலுக்கும் , குளம் வெட்டுதல், உள்ளிட்ட நற்காரியங்களுக்கும், நிதி வழங்கும் அமைப்பை ஏற்படுத்தி,  கோயில் நிர்வாக அமைப்பிற்குரிய, ஒத்தாசைகளை வழங்கிவந்துள்ளதன் மூலம் இவர்கள் வணிகம் கடந்து, சமூகப்பணிகளில் அக்கறை5 கொண்டவர்களாக இருந்துள்ளனர்.


செல்லுகுடி வணிகக்குழு கல்வெட்டும் காலமும் :

இந்த நான்முக வணிகக்குழு கல்வெட்டில் 83 வரிகளுள்ளன இக்கல்வெட்டின்  முதல் மூன்று பக்கங்களும் ஓரளவு படிக்கும் நிலையில் உள்ளன , நான்காவது பக்கத்தில் கல்வெட்டு செய்தியானது பல வரிகள் முழுவதுமாக சிதைந்துள்ளபோதும்  இராசேந்திர சோழர்  காலத்தில் அவரது ஆளுகையின் கீழ் இயங்கிய பதிநெண்கொடி வீரக்கொடியார்  வலங்கை பிரிவைச்சேர்ந்த வல்லபர் என்பவரால் இந்த கல்வெட்டு சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு சில இடங்கள் தெளிவாக உள்ளது. மேலும் நான்முக கல்வெட்டின் உச்சிப்பகுதியில் சங்கு (Turbinella pyrum), செங்கோல், அரிவாள், குத்து விளக்கு கோட்டுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன, குறியீட்டின் மேல்புறம் தொடங்கி குறியீட்டின் இடப்புறம் வரை  “பழியிலி கள்ளிடைக்கொடி தலை” என்ற கல்வெட்டு பொறிப்பு உள்ளது. இது இராஜேந்திர சோழர் வலங்கை தலைமையின்  சிறப்பு குறியீடாக கருதலாம்.  கல்வெட்டில் காலம் குறிப்பிடப்படவில்லை   என்றாலும் முதலாம் இராசேந்திரன் சோழன் பெயருடன் இந்த வணிகக்குழு கல்வெட்டு பொறிக்கப்படிருப்பதன் மூலமும் , எழுத்தமைதியின் அடிப்படையிலும், வணிகக்குழுவின் மெய்கீர்த்தியின் அடிப்படையிலும் பதினொன்றாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு என உறுதியாக சொல்ல முடிகிறது.
செல்லுகுடி வணிகக்குழு கல்வெட்டு காட்டும் படிநிலை நிர்வாகம்   :             மங்கள வரிகளைத்தொடர்ந்து தமது வியாபார தளங்களின் வளத்தை கூறுவதாக கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது அதில்  நிலாவைதொடும் அளவிலான   மாட வீதிகளைக்கொண்ட ( துறைமுக நகரங்கள் ) பதிநெட்டு பட்டணமும் , முப்பத்திரண்டு வேளாபுரமும் (இரண்டாம் நிலை வணிக நிறுவனங்கள் அடங்கிய பாதுகாப்பான நகரங்கள்  அதனைத்தொடர்ந்து வணிகர்களுக்கு பொருட்களை சேமித்து வைப்பதற்கான அறுபத்துநான்கு கடிகைத்தாவளமும்,  இருந்ததாக  அறிய முடிகிறது.

செல்லுகுடி கல்வெட்டில் வரும் அங்கத்தினர்:      
                                                                          தாவளத்தில் செட்டி சீர் புத்திரன், கவறையும் (வணிகர் ), காசி யவன் விடுத்த காமுண்ட சுவாமியும்5-3 ( நிலக்கிழார் - கர்னாடகத்தவர் ),  உருத்திரந் விடுத்த ஓலை வாரியநு ( கணக்கு எழுதுபவர் ),  சீரிய செண்டாவனும் இருந்தனர் என பொறிக்கப்பட்டுள்ளது 
“கண்டிகை முகந்து விரையுமுறையிட பதினெண் கொடியார் பழ வீர  சிங்கநு, பாவாடை வீரந் கடிபுரத்து முனை கயுங்” என்று பாதுகாப்பு பணியிலும் குழுவின் மிக உயர்ந்த பொறுப்பிலிருந்த சிங்கன், பாவாடை வீரன் கடி புரத்து  முனை வீரர் பற்றியும் செய்தி பகிரப்பட்டுள்ளது. சிங்கன் என்ற பெயர் அரிதாகவே வணிக கல்வெட்டுகளில் காண முடியும்  இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது.

செல்லுகுடி வணிகக்குழு கல்வெட்டில் உயிரினப்பல்வகைமை :

பலா(Artocarpus heterophyllus Lam.)  மரங்களும் , மாமரங்களும் ( Mangifera indica)   வாழையும் ( Musa  paradisiacal) , பாக்கு மரங்களும்( Areca Catechu ) , முல்லை மலர் (Jasminum auriculatum) கொடிகளும் , குயிலும் (Cuculus micropterus
Gould,
1837), கிளியும் ( Psittacula krameri) குழுமியிருப்பதாகவும் , துன்பங்கள் ஏதுமின்றி , ஒன்றாக கூடி , அவை மகிழ்வுடன் இருந்ததையும் அங்கே ஐந்நூற்றுவர் செங்கோலை முன்னிறுத்தி நேர்மையுடன் நிர்வாகம் செய்ததாகவும் அதை
 “முன்னிடத் தெங்கும் பலாவும், தேமாஞ்சோலையு(ம்) வாழையுங் கமுகும் வளர்கொடி முல்லையும், பூவையுங் கிள்(ளை)யோடு  குழுமி, வாட்டமிந்றி கூட்டம் பெருக, அறவளரக் கலிமெலிய திசையனைத்து செவிடு விட செங்கோலே முந்நாகச்சமையயிநிதாக  நடாத்துகிந்ற தேசித்திசை விளங்கு திசையாயிரத்தைஞ்ஞூற்றுவர்”  என்றும், வணிகக்குழுவின் சின்னம் பொறிக்கப்பட்ட பகுதியில் எழுதப்பட்டுள்ள கள்ளிடைக்கொடி தலை என்பதில் பாலை நிலத்தாவரமான கள்ளி (Euphorbia antignorum linn)-யை , பாலை நிலத்தின்  குறியீடாக வைத்து அதன் தலைவன் என பொருள்கொள்ளும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டின் நான்காவது பக்கத்திலுள்ள கல்வெட்டு வைக்கப்பட்டதற்கான செய்திகளடங்கிய பகுதி முழுமையாக சிதைந்து விட்டது, என்றாலும் நெல் வழங்கப்பட்ட செய்தியுடன் வலங்கை வல்லபர் செல்விக் குடிக்கு “ என்ற சொல்லாடலுடன்  கல்வெட்டு முடிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுச்செய்தி மூலமாக இராசேந்திர சோழர் காலத்தில் பதினெண் கொடி வீரகொடி அமைப்பில் வலங்கை பிரிவைச்சேர்ந்த வல்லபர் என்ற குழுவின் தலைவர் செல்லுக்குடிக்கு வழங்கிய நெல்  (Oryza sativa L.) கொடையானது  படி என்ற அளவிலும்  மற்றும் அதன் எண்ணிக்கையை 50 என்றும் குறிப்பிட்டுள்ளதையும் பொருத்தி புரிந்து கொள்ள முடிகிறது. இத்துடன் “ நடாத்த (அளவு குறித்த இடம் தெளிவாக இல்லை) பெறுவதாகவும் ” என்ற பதம் மக்களிடம் பரிமாற்றம் செய்யும் பொருளுக்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட விகித்தாச்சாரத்தில் பொது காரியங்களுக்கு  வழங்கப்பட்டுள்ளதை இந்த கல்வெட்டு செய்தி மூலம் அறிய முடிகிறது. 

முடிவுரை :
சங்க காலம் தொட்டே இலக்கியங்களும் இன்னும் பிற தரவுகளும்1 அந்நாளைய சுற்று சூழல் காலநிலை இயற்கை சீற்றங்கள் வாழ்வியல் முறைகள் , உயிரினங்களை வெளிக்கொணர்ந்து வருகின்றன. இந்த வணிகக்குழு கல்வெட்டு திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வாழ்ந்த பகுதியின் உயிரினப்பரவலை நமக்கு சான்று பகிர்கிறது . இக்கல்வெட்டில் 1.பலா(Artocarpus heterophyllus Lam.)  ,2. மா ( Mangifera indica)   3.வாழை ( Musa  paradisiacal) ,4. பாக்கு ( Areca Catechu ) , 5. முல்லை மலர் (Jasminum auriculatum) ,6. நெல் (Oryza sativa L.) 7. கள்ளி (Euphorbia antignorum linn) என 7 வகையான தாவரங்கள் மற்றும் , 1.குயில் (Cuculus micropterus Gould, 1837), 2. கிளி ( Psittacula krameri)    ஆகிய விலங்குகள் எழுத்து பொறிப்பாகவும், 3.சங்கு (Turbinella pyrum) கோட்டுருவ மாகவும், 4. சிங்கன் (சிங்கம்  - Panthera leo ) மனித பெயராகவும் என  4  வகையான  விலங்கின உயிரினப்பரவலை வெளிப்படுத்துகிறது.

அடிக்குறிப்புகள்  
1.        SOURCES FOR A HISTORY OF PLANT IN INDIA  I. EPHIGRAPHY , B. G. L. Swamy Department of botany, presidency college , madras 5 , vol. 8  Nos. 1 & 2 , Page no. 61
2.        பத்மம் (பேராசிரியர் பத்மநாதன் பாராட்டு மலர் ) Editors Prof.V.Kanagaratnam - Peradeniya, Dr.S.Rajagopal-chennai & CO., இலங்கை வணிகக்குழுக்கல்வெட்டுக்கள் ஒரு மீள் பார்வை க.எண்: 17 – பேராசிரியர். எ.சுப்புராயலு-பக்கங்கள்   146 - 161
4.         பிரான்மலைக் கல்வெட்டு (A.R.E. 154 of 1903; S.I.I. VIII, 442)
5.         இந்தியப்பெருங்கடலிலும் தென் கிழக்கு ஆசியாவிலும் தென்னிந்திய வணிகச் சங்கங்கள் –நோபுரு கராஷிமா , பக்கம் – 158  & 161&169
6.         5.A General History of the Pudukkottai State -  S. RadhakrishnaS. Radhakrishna Aiyar Sri   Brihadamba State Press, 1916 -  Pudukkottai (Princely State)

Friday, May 31, 2019

பூலாங்குறிச்சி அருகே வழிபாட்டிலுள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி கிராமத்திலுள்ள வனத்தில், கல்வட்ட அமைப்புக்குள்ளாக வித்தியாசமான முறையில், கொம்படி ஆலயம் ஒன்று அமைந்திருப்பதாக அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அளித்த தகவலைத்தொடர்ந்து புதுகோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின்  உறுப்பினர்கள் இயற்கை ஆர்வலர் சீ.அ.மணிகண்டன், ஆசிரியர் சோலச்சி திருப்பதி ஆகியோருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் இப்பகுதி பழங்கால வனச்சூழல் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு உயிரினப்பரவலை கொண்ட பகுதியாக இருக்கிறது.
இதே போன்ற சூழல் மாவட்டம் முழுவதும் ஒரு காலத்தில் இருந்திருப்பதை புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் தெளிவாக நமக்கு வெளிப்படுத்துகிறது.
சரி விசயத்துக்கு வருவோம் ,
 ஆய்வின் மூலம் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் ஏழு கல்வட்டங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் இரண்டு கல்வட்டங்கள் மட்டும் வழிபாட்டிலுள்ளதை காண முடிந்தது.
அமைவிடம் :
மலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு மொக்காண்டி கொம்படி ஆலயம் பெருங்கற்கால நினைவுச்சின்னமான கல்வட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டு வழிபாட்டிலுள்ளது.  முக்கிய வழிபாட்டு பகுதியிலிருந்த கல்வட்டத்திலிருந்த கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு அதிலிருந்த கற்பலகைகள் கோயிலுக்கு நேரெதிர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


அதன் அருகாமையில் இருக்கும் இரு கல் வட்டங்கள் முழுமையாக சிதைக்கபடாமல் கல்லறை அமைப்புகளுடன் உள்ளது. இதன் மையப்பகுதியில் மரங்கள் மற்றும் கொடிகள் மிகுந்த அடர்த்தியாக காணப்படுகிறது. மேலும்  இப்பகுதியும் துணை வழிபாட்டு அமைப்புகளாக இருக்கிறது.கோயிலின் வடபுறம் மற்றும் தெற்கு புறங்களில் ஐந்து கல்வட்டங்கள் காணப்படுகிறது. இவைகள் ஐந்தும் வழிபாட்டில் இல்லை 
கோவில் கட்டுமானத்திற்கு முந்தைய வழிபாட்டுத்தலம் :
 இத்தகைய வழிபாட்டு முறை கோயில் கட்டுமான அமைப்புகளுக்கும் உருவ வழிபாட்டுக்கும் முந்தையது என மூத்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும் வட மாவட்டங்களைப்போல தென்மாவட்டங்களில் பெருங்கற்கால சின்னங்கள் வழிபாட்டில் காணப்படுவதில்லை ஆனால் கொம்படி வேல் வழிபாடும், சுடுமண் சிற்ப வழிபாடும் மிகுதியாக உள்ளது, ஆனால் நெடுங்கல் வழிபாடு , கல் திட்டை வழிபாடு, உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் அற்றுப்போய் கோயில் கட்டுமானங்களாக மாறி விட்ட நிலையில் இக்கோவிலில் மட்டும் கல் வட்டம் , கல் திட்டை வழிபாட்டிலுள்ள நிகழ்கால சான்றாக உள்ளது சிறப்பானது.


கல்பதுக்கை குறித்த இலக்கிய பார்வை :

நல்லிசை வலித்த நாணுடை மனத்தர் , கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர் படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை ’’ என்று அகநானூறு பாடல் எண் 231 லும், ‘‘வெந்நுனை அம்பின் விசையிட வீழ்ந்தோர் , எண்ணுவரம் பறிய உவலிடு பதுக்கைச் சுரங்கெழு கவலை’’ என்று பாடல் எண் 109 லும் பாடற் பகுதிகள் இப்பதுக்கைகளைப் பற்றி அறிவிக்கின்றன.

‘‘தாம் வசித்த கற்களைவிட்டுத் தெய்வங்கள் நீங்கி விட்டமையால் அம்பலங்கள் பாழடைந்து கிடக்கின்றன’’ என்கிறது புறநானூறு 52 வது பாடல், பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங்கவலை என்கிறது ஐங்குறு நூறு , இவ்வாறு சங்க காலம் வரை இந்த பெருங்கற்கால பண்பாடு நீடித்து நிலைத்து இருந்ததை இந்த இலக்கிய சான்றுகளின் வழியாக அறிய முடிகிறது. கல் பதுக்கைகளில் வைக்கப்படுபவர்கள் வீரத்தினாலும் , தனது தலைமைப்பண்பாலும் உயர் நிலையில் இருந்தோருக்கு செய்யப்படும் மரியாதையாக இந்த பெருங்கற்கால சின்னங்கள் இருந்துள்ளதையும் அதுவே பின்னாளில் வழிபாட்டு முறையானதையும்  உணர முடிகிறது.
கல்வட்டங்களின் வடிவம் 

ஏழு கல்வட்டங்கள் முழுமையாகவும், பகுதியளவு சிதைந்த நிலையில் கல்வட்டங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கல்வட்டங்களில் இரும்புத்தாது கற்களான லேட்டரைட் எனப்படும் செம்புராங்கற்கள் கொண்டு வட்ட வடிவில் அடுக்கப்பட்டுள்ளன.
கல்வட்டத்தின் மையத்தை விட்டு சற்று விலகலாக கிழக்குப்புற விளிம்பு பகுதியில் கருங்கல்லினாலான நான்கு பலகைக்கற்களை இணைத்து சதுரவடிவிலான கல்லறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


ஒரு சில இடங்களில் செம்புராங்கற்களுக்கு பதிலாக கல் வட்டங்களை அமைக்க இப்பகுதியில் எளிதாக கிடைக்கும் கருங்கல் பலகைக் கற்களை பயன்படுத்தி யுள்ளனர்
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவைகளில் கோயிலின் வடபுறம் உள்ள கல் வட்டமே 24 அடி விட்டமுடையதாகும் இதே அளவை ஒத்த கல்வட்டங்கள் இரண்டும் .ஏனைய நான்கும் 14 அடி விட்டமுடைய கல்வட்டங்களாக உள்ளன. கல்லறையின் மேற்பகுதி மூடப்படாமல் உள்ளது. இதன் உயரம் 3 அடி வரை உள்ளது. இது கல்வட்டத்திலுள்ள செம்புறாங்ககற்களை விடவும் சற்று கூடுதல் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. 


இதனை கல்திட்டை போன்ற கற்பதுக்கைகள் என வரலாற்று ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். கல் வட்டத்தின் உட்பகுதிகளில் சிறிய கற்கள் குவியலாக நிரப்பப்பட்டுள்ளது. சில கல் வட்டங்கள் கல் நிரப்பப்படாமல் உள்ளது.




வழிபடும் முத்தரையர்கள் :

இந்த கல் வட்டங்கள் ஒட்டைப்பிச்சான் வகையறா எனப்படும் முத்தரையர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை வழிபடுபவர்களாக அதே இனத்தைச் சேர்ந்த குப்பை கொட்டியான் வகையறா மற்றும்  சிவகங்கை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் பல நூறு ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மொக்காண்டி என்பவர் இந்த குறிப்பிட்ட மக்களின் மூதாதையராக இருக்க வாய்ப்பு உள்ளது. 
தொல் மரபணு ஆய்வு :
இத்தகைய தகவல்களை அறிவியல் முறைப்படி உறுதி செய்திட இப்பகுதியில் இருக்கும் கல்வட்டங்களை தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்து கிடைக்கும் கரிம சான்றுகள் , மரபணு கூறுகள் ஆகியவற்றை ஆய்வுகுட்படுத்துவதன் மூலம் , இலக்கியங்களில் சொல்லப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையையும், வழிபடுபவர்களுடைய பண்பாட்டு தொடர்பையும் உலகறியச்செய்ய முடியும். 

கல்வட்டங்களின் காலம் :
உலகம் முழுவதும் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படும் மெகாலித்திக் காலத்தில் ஆப்பிரிக்கா , ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே மாதிரியான பண்பாடு இருந்துள்ளது இதனை பெருங்கற்கால பண்பாடு என தொல்லியலாளர்கள் அழைக்கின்றனர். குறிப்பாக கல்வட்டம், கல் திட்டை, கல் பதுக்கை , நெடுங்கல் , கற்குவை உள்ளிட்ட அமைப்புகள் பரவலாக காணப்படுகின்றன. 


இந்த அமைப்புகளில் புதைக்கப்படுபவர்கள் பெரும்பாலும்  முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் ,  வீரர்கள் , வேட்டை, களவு மீட்டல் , போர் உள்ளிட்ட புறத்திணை காரணங்களால் இறந்தவர்களாகவே கருத்தப்பட்டு அவர்களின்  நினைவாக பெரிய கற்களை கொண்டு அமைக்கப்பட்டமையால் பெருங்கற்கால சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன.
 இது இரும்பு உளி உள்ளிட்டகருவிகளின் துணையோடு பாறைகளை உடைத்து பயன்படுத்தியமையால் இது இரும்புக்காலத்தில் இருந்த மற்றொரு பண்பாடு என்றும் நோக்கப்படுகிறது .

 உலக அளவில் பெருங்கற்கால சின்னங்களின் காலம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திலுள்ள கல் வட்டங்களின் வயது கி.மு 2500 லிருந்து 1500 வரையிலும் இது வடகிழக்கு பிரான்ஸ் பகுதியில் கி.மு 5000 எனவும், கணிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பேராசிரியர் கே.ராஜன் தலைமையில் நடந்த ஈரோடு மாவட்டம் கொடுமணல் ஆய்வு முடிவுகளின் படி கி.மு 540 லிருந்து காலக்கணிப்பு முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் இவைகளில் எழுத்து பொறிப்புகளுடன் கிடைத்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுத்துவடிவம் இருந்துள்ளதை இந்த அகழ்வாய்வு வெளிப்படுத்தியது.
இந்தியாவில் இரும்புக்காலம் என்பது கி.மு 1100 லிருந்து கி.மு 350 என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் கே.பி.ராவ் தலைமையில் நடந்த அகழ்வாய்வின் போது கிடைத்த கத்தி , மட்பாண்டங்கள் உள்ளிட்டவற்றை காலக்கணிப்பு செய்தததில் கிடைத்த முடிவுகளின் படி இரும்புக்காலம் கி.மு. 2400 முதல் அதாவது  இன்றிலிருந்து 3400 வருடங்களுக்கு முன்னதாக தொடங்குவதாக ஆய்வு முடிவு  வெளிவந்துள்ளது.
 புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா சத்திரம் , ஆரணிப்பட்டி , ராஜகுளத்தூர் , செங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்வட்டத்துடன் கூடிய கல்லறைகள் , கல் பதுக்கைகள் , கல் திட்டைகள் அடையாளம் காணப்பட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு செங்களூர் கல்வட்டதிலுள்ள கல் பதுக்கையை ஆய்வு செய்ததில் கிடைத்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் மணிகளும் கிடைத்துள்ளன. அவற்றை காலக்கணிப்பு செய்ததது பற்றிய எவ்வித குறிப்புகளும் கிடைக்கவில்லை ஆனாலும் இவற்றின் காலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரை பழமையானது என கணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியிடப்பட்ட அறிவியல் பூர்வ காலக்கணிப்புகளின்படி  தற்போது நம்மால் அடையாளம் காணப்பட்ட கல்வட்டத்தின் 3000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதலாம்

ஊடகங்களில் கல் வட்டம் 
https://timesofindia.indiatimes.com

https://www.deccanchronicle.com/nation/current-affairs

https://www.nakkheeran.in/special-articles

https://www.dinamani.com/tamilnadu

http://www.dinakaran.com/News

https://makkalkural.net/news












தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....