புதுக்கோட்டை
மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியின் வரலாற்றை தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் இது
சார்ந்த களப்பயணத்தின் போது பதிவு
செய்யப்படாத வரலாற்று சான்றுகளை தொகுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக தற்போது
பத்தாம் பத்தாம் நூற்றாண்டில் இயங்கிய சமணப்பள்ளி அடையாளம் காணப்பட்டுள்ளது.
அக்னி ஆறும் சமணமும்
அக்கினி
ஆறு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரிய குளத்தில் தொடங்கி திருமணஞ்சேரி வரையிலும் அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கொள்ளுக்காடு
மற்றும் கீழத்தோட்டம் வழியாக 78 கிலோ மீட்டர் வரை
பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது ,
அக்கினி
ஆறானது மிகப்பழமையான ஆறாக கருதப்படுகிறது. மேலும் இது கடந்த காலங்களில் அஞ்ஞான விமோச்சனி என்ற பெயரில்
அழைக்கப்பட்டு வந்திருப்பதும் , அஞ்ஞானத்திற்கு இணையாக வழங்கப்படும் அக்கியானி
என்ற சொல் மருவி அக்னி ஆறு என்று பெயராக மாற்றம் பெற்றிருக்கும் என அனுமானிக்க
முடிகிறது.
இந்த
ஆற்றின் பெயரே சமணக்கொள்கையை தங்கியிருப்பதாக கருத முடிகிறது. மேலும் இக்கருத்தை உறுதி செய்யும் வகையில் அக்கினி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வாழமங்கலம்
, மங்கத்தேவன் பட்டி , மோசகுடி , கோவில் வீரக்குடி , செம்பாட்டூர், புத்தாம்பூர் ,
உள்ளிட்ட ஊர்களில் சமணத்தீர்த்தங்கரர் சிற்பங்கள் அடையாளங்காணப்பட்டிருப்பதும்
தற்போது கீழ வாண்டான் விடுதியிலும் சமணப்பள்ளி அடையாளப்படுத்தபட்டிருப்பதன் மூலம்
இந்த ஆற்றங்கரையில் சமணம் பரவி இருந்தது சார்ந்து புதிய வரலாற்று ஆய்வுகளுக்கு
வழிவகுக்கும் என நம்பலாம்.
சமணப்பள்ளி அமைவிடம்
கீழ
வாண்டான் விடுதி மற்றும் மேல வாண்டான் விடுதி எல்லைப்பகுதியில் அக்கினி ஆற்றின்
தென் புறத்தில் அமைந்துள்ள சிவனார் திடல்
என்று அப்பகுதியினரால் அழைக்கப்படும் இடத்தில் சுமார் 97 சென்ட் பரப்பளவில் 200 அடி நீள
அகலத்துடன் செங்கல் கட்டுமான மேடு காணப்படுகிறது. ஒரு இடத்தில் “ ப ” வடிவ அறையின்
அடிமானச்சுவரின் மேற்பகுதி 3 அடி 9
அங்குலத்துடன் உள்ளது , கீழ்ப்புறத்தின்
இரண்டு சுவர்களும் 2 அடி 6
அங்குலம் கொண்டவையாக உள்ளன , இந்த அறையின் உட்கூட்டுப்பரப்பளவு 9 அடி 5 அங்குலத்துடன்
உள்ளது . புதிதாக அடையாளம் காணப்பட்ட இரண்டு சிற்பங்களும் இவ்விடத்தில்
இருந்துள்ளதன் மூலம் இந்த செங்கல் கட்டுமானம் சமணப்பள்ளிதான் என உறுதி செய்ய
முடிகிறது.
சமணப்பள்ளி கட்டுமானம்
கீழ வாண்டான் விடுதி மகாவீரர்
கீழ
வாண்டான்விடுதியில் தற்போது சிவனார் என்ற பெயரில் வழிபாட்டிலுள்ள சிற்பம் ஐந்து அடி உயரம் மூன்று
அடி அகலம் கொண்டதாக உள்ளது. இது வர்த்தமானர்
எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது
தீர்த்தங்கரரான மகாவீரர் திருமேனி என
அடையாளங்காணப்பட்டுள்ளது.
இச்சிற்பம் திகம்பரராக, தியான கோலத்துடன், சுருள் முடி தலையுடனும், திறந்த கண்கள்,
நுனியில் சிறிது சேதமடைந்த மூக்கு , நீண்ட துளையுடைய காதுகள் , புன்முறுவலுடன்
கூடிய உதடுகள் , விரிந்த மார்புடன் அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது .
தலையின்
பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம்
, சகல பாசானம் எனும் முக்குடையும் , பின்புலத்தில் குங்கிலிய மரமும் சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா
இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது, இச்சிற்பம்
மகாவீரர் என்பதை உறுதிப்படுத்தும்
அடையாளமான சிங்க முத்திரை கட்டுமானத்தில் மறைந்துள்ளதாக அறிய முடிகிறது .
கீழவாண்டான் விடுதி மிகச்சிறிய தீர்த்தங்கரர்
சிற்பம்
அடையாளங்காணப்பட்ட
மற்றொரு சமண தீர்த்தங்கரர் சிற்பம்
மிகச்சிறிய அளவில் 17 சென்டிமீட்டர் உயரம்
கொண்டதாகவும் , தலை சிதைந்த நிலையில்,
தாமரை மேல் அமர்ந்த தியான நிலையிலுள்ளது,
எனவே ஆறாவது தீர்த்தங்கரரான பத்ம பிரபராக இருக்கலாம் என கருத முடிகிறது.
எனினும் சமணப்பள்ளிகளில் மகாவீரர் மற்றும் ஆதிநாதரின் சிற்ப தொகுதிகளே
வழிபாட்டிலிருந்துள்ளதாலும், தென் கயிலையில் தாமரை மீது அமர்ந்த நிலையில்
ஆதிநாதர் தவமிருந்ததாக சொல்லப்படும் சான்றுகள் மூலம்
முதலாம் தீர்த்தங்கரரான ஆதிநாதர் சிற்பமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
சிற்பத்தின்
வலப்புறம் அமைந்துள்ள இயக்கியர் சிற்பம் 3 சென்டிமீட்டர் அளவில் மிக நுணுக்கமான
முறையில் மண்டியிட்டவாறு சாமரம் வீசுவதாக வடிக்கப்பட்டுள்ளது. இடப்புறம் உள்ள இயக்கியரின்
சிற்பம் சிதைந்துள்ளது.
தாமரை
மலரின் காம்பிலிருந்து இரண்டு புறமும் கீழ்ப்புறமாக சுருண்ட கொடி அமைப்புகள்
காட்டப்பட்டுள்ளது. இதில் மண்டியிட்டு கை
கூப்பிய நிலையில் தனித்தனியாக நான்கு மனித
உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
திருடர்களிடம் தப்பிய சிற்பம்
சிவனார் மேடு என்ற இடத்தில் இருந்த ஐந்தடி உயரமுள்ள
தீர்த்தங்கரர் சிற்பம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே மாட்டு வண்டி மூலம் கடத்திச்
சென்றுகொண்டிருந்த சிலை திருடர்களுக்கு திடீரென்று
உடல்நலக்குறைவாலும், மாடுகள் மயக்கமடைந்ததாலும்,உயிர் பயத்தால் கடத்தி வந்தவர்கள் , தீர்த்தங்கரர் சிற்பத்தை ஆத்தங்கரை விடுதி வயல்
வெளியில் தூக்கி வீசிவிட்டு சென்றுவிட அதனை ஆத்தங்கரைவிடுதி அம்பலக்காரர் தனது
பாதுகாப்பில் வைத்திருந்தாகவும் . இதையறிந்த நம்பிராஜனின் குடும்பத்தினர் தாங்கள்
வழிபட்டு வந்த சாமியை எங்களுக்கு
தாருங்கள் என்று கேட்டு பெற்று வந்து அதனை சிறு கோயிலாக எழுப்பி வழிபட்டு
வருவதாகவும் வழிபட்டு வருபவர்கள் கூறுகின்றனர், இது போன்ற நம்பிக்கை கதைகளே பல
சிற்பங்களுக்கு காவலாக இருந்து வருகிறது .
உங்கள் குழுவினரின் வரலாற்றுத் தேடல் அமைதியாக பல வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்.
ReplyDeleteநான் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக கண்டறிந்த இவ்விடத்தை மறுஆய்வு செய்ததற்கு நன்றி, த. தங்கதுரை
ReplyDeleteIPS யை ஆய்ந்து பார்க்கவும் அப்பகுதியில் ஒரு சமணப்பள்ளி இருந்ததற்கான கொல்வெட்டும் ஒன்று உள்ளது.
DeleteVery much thrilled to know such news. Like to come and see.
ReplyDelete