Showing posts with label kajaprusta. Show all posts
Showing posts with label kajaprusta. Show all posts

Monday, October 18, 2021

புதுக்கோட்டையில் புதியவகைக் கோவில்கள்

 

கரு.இராசேந்திரன்

மேலப்பனையூர்


தமிழகக்கோயில் கட்டடக் கலையில் நாகரம், திராவிடம், வேசரம் என்ற 3 வடிவங்களைப் பற்றி சிற்பநூல்கள் பேசுகின்றன. சதுர, செவ்வகவடிவத்தை நாகரம் என்றும் எட்டுப்பட்டை, ஆறுப்பட்டை வடிவத்தை திராவிடம் என்றும் வட்ட, நீள்வட்ட, அரைவட்ட வடிவத்தை வேசரம் என்றும் அவை கூறுகின்றன. இவ்வடிவமானது விமானத்தின் உபானம் முதல் ஸ்தூபி வரையிலான முழுவிமானமாகவோ அல்லது சிகரம் மட்டும் இம்மூன்று வடிவங்களில் ஒன்றாக இருந்தால் அவ்வடிவத்துக்கேற்ற பெயரைக் கொண்டு அழைக்கப்படும்.

உதாரணத்துக்கு தஞ்சைப் பெரியக்கோயில் எட்டுப்பட்டை சிகரத்தை உடையதால் திராவிட விமானம் என்றும், கொடும்பாளூர் மூவர்கோயில் விமானங்கள் சதுரசிகரத்தைப் பெற்றிருப்பதால் நாகர விமானம் என்றும் நார்த்தாமலை விஜயாலயசோழீச்சுரம் வட்டசிகரத்தை உடையதால் வேசரவிமானம் என்றும் அழைக்கப்படும்.


இவ்வனைத்து வடிவங்களையும் சோதித்துப் பார்த்த இடமாக மாமல்லபுரம் உள்ளது. குறிப்பாக ஐந்துரதத்தில் திரௌபதி, பீமரதங்கள் நாகர வடிவத்திலும், அர்சுன, தர்மராஜரதங்கள் திராவிட வடிவத்திலும் நகுலசகாதேவரதம் வேசரவடிவத்திலும் அமைந்துள்ளன.

நகுலசகாதேவரதமானது ஒருசதுரத்தின் பின்புறம் அரைவட்டத்தை இணைத்து உருவானதாகும். இதுயானையின் பின்புறம் போன்று உள்ளதால் இதனை கஜப்ருஷ்ட வடிவம் என்றும் கூறுவர்.  ஐந்துரதசிற்பி அருகிலேயே யானை ஒன்றையும் வடித்து இரண்டையும் ஒன்று போல் காட்டியிருப்பான்.

பின்னர் தொண்டை மண்டலத்தில் இவ்வடிவம் பரவலாகக்கடைப் பிடிக்கப்பட்டது. திருத்தணி வீராட்டானேச்வரர் கோயில் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். இவ்வடிவத்தின் தொடக்கத்தை வடமேற்கு இந்தியாவில் உருவான பௌத்த சைத்தியங்களில் காணலாம். பின்னர் உருவான அஜந்தா, எல்லோரா, போன்ற சைத்தியக் குடைவரைகளும் இவ்வடிவத்திலேயே காணப்படுகின்றன. அங்கெல்லாம் இதற்கு தேவை இருந்தது, எப்படி என்றால் வட்ட வடிவ  ஸ்தூபத்தை சுற்றிவர அதன் சுற்றுப்பாதையும் அவ்வடிவத்திலேயே அமைய முன்புறம் நீள்சதுர மண்டபமும் இணந்து உருவானதே இவ்வடிவமாகும்.

பல்லவர்களுக்கு இணையான மேலைச்சாளுக்கியர்களும் இவ்வடிவத்தைக் கையாண்டுள்ளனர். ஐஹோலேவில் உள்ள துர்க்கைக் கோயில் இவ்வடிவத்திலேயேக் காணப்படுகிறது.

மாமல்லபுரம், பட்டடக்கல்லைப் போன்றே புதுக்கோட்டைப் பகுதியும் கோயில் கட்டடக்கலையின் பரிசோதனைக் களமாக இருந்துள்ளது. கருங்கல்லில் காளியாப்பட்டி, ஏனாதி, பனங்குடி போன்ற இடங்களில் சிறுசிறுவிமாங்கள் உருவானதுபோல அஷ்டப்பரிவாரம் கொண்ட கோயில்கள் இங்கு குடைவரையிலிருந்து உருவாவதைக் கண்டுணரலாம். இப்பகுதியில் சாந்தார விமானம் கட்டும் முயற்சி முதலில் தோல்வியடடைந்து. பின்னர் வெற்றி பெற்ற கதையை நார்த்தாமலை விஜயாலயச்சோழீச்சுரம் கூறும்.

இவ்வகையில் தூங்கானை மாடம் என்னும் அமைப்பிலான வேசரவிமானங்களும் இங்கு 3-இடங்களில் காணப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் இரும்பாநாடு கோவில், ஒக்கூர் கோவில், அறந்தாங்கி வட்டம் சிலட்டூர் ஈஸ்வரன்கோவில் ஆகியவைகளே அம்மூன்று கோயில்களாகும்.

இவைமூன்றும் கருவரை பிரஸ்தரம் வரை கல்லால் கட்டப்பட்டு மேற்பகுதி செங்கல்லால் கட்டப்பட்டுள்ளன. முதல் கோயிலின் செங்கல் கட்டுமானம் முழுதும் அழிந்துபோய் தற்போது கற்கட்டுமானம் மட்டுமே உள்ளது. இரண்டாவது கோயிலின் பழைய கட்டுமானம் சேதமுற்றுக் காணப்பட்டாலும் அது நகுல சகாதேவ ரத்த்தைப் போன்று இரண்டு தள கஜப்ருஷ்ட விமானம்தான் என்பதை குறித்து நிற்கிறது. மூன்றாவது விமானம் முழுதும் புதுப்பிக்கப்பட்டுவிட்டதால் அதன் உண்மை வடிவத்தை அறிய இயலவில்லை.

      இரும்பாநாடு ஈஸ்வரன் கோவிலில் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும் ஒக்கூரில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும் காணப்படுவதால் இக்கோவில்கள் முதலாம் குலோத்துங்கன் காலத்திற்கும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம்.

      இரும்பாநாடு, ஒக்கூர் சிலட்டூர் ஈஸ்வரன்கோவில்கள் ஆகிய கோவில்களின் விமான வகை புதுக்கோட்டைக்கே பெருமை சேர்க்கக்கூடிய கட்டட அமைப்பைக் கொண்ட கோவில்கள் என்றால் அதுமிகையாகாது. இப்பகுதி கட்டடக்கலையின் சோதனைக்களம் என்பதை இவை மீண்டும் நிரூபிக்கின்றன.


தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...