Showing posts with label gandarvakottai history. Show all posts
Showing posts with label gandarvakottai history. Show all posts

Saturday, September 13, 2025

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டுமென்ற உத்தரவுடன் தொண்டைமான் கல்வெட்டு – கந்தர்வகோட்டை அருகே கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை எல்லையில் , புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட  சம்பட்டிப்பட்டி  சிற்றூர் எல்லையில்  கல் பலகை நட்டிருப்பதாக        குரும்பூண்டியைச்சேர்ந்த சமூக ஆர்வலர்  மூ.சேகர்   அளித்த தகவலின் பேரில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் ஆ. மணிகண்டன்  கல்வெட்டை  ஆய்வு செய்ததில் திருமலை ராய தொண்டைமான் பெயரில் ,   1758  ஆம் ஆண்டு   பிரம குளத்தில் பயிருக்கு மட்டும் நீர்ப்பாய்ச்சும்  பாசன உரிமையுடன் , பிரமன் வயல் நிலத்தை  சறுவமானியமாக  கொடுத்த தகவலடங்கிய  கல்வெட்டு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இக்கல்வெட்டு குறித்து ஆ. மணிகண்டன் கூறியதாவது ,

கந்தர்வகோட்டை எல்லையிலுள்ள கொத்தகம் அருகே, புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட,  சம்பட்டிப்பட்டி  சிற்றூர் எல்லையிலுள்ள , எல்லைக்கல் வயலில் வாமன கோட்டுருவமும் , எல்லைக்கல்லிற்கும் வட மேற்கிலுள்ள புதரில் கல்வெட்டு பலகைக்கல் நட்டுவிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டின் காலம் :

சாலிவாகன சகாப்தம் 1679  ,  கலியுகம் 4858 என்றும்,  வெகுதானிய வருடம்  ஆவணி மாதம் மூன்றாம் திகதி  என குறிப்பிடப்பட்டுள்ளது . இதற்கு இணையான பொது  ஆண்டாக 1758 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி என கணிக்கலாம் . இந்த காலக்கட்டத்தில் விசைய ராகுநாதராயத்தொண்டைமானர் ஆட்சி பொ. ஆ 1730 முதல் 1789 வரை  நிலவியது.

கல்வெட்டில் உள்ள தகவல் :

ஸ்வஸ்தி ஸ்ரீ  என்ற மங்கள சொல்லுடன்  சாலிவாகன ஆண்டு மற்றும்  கலியாண்டுடன் வெகுதானிய வருடம் ஆவணி மாதம் 3 ஆம் நாள் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகம் குறித்த தகவலாக  ராசராச வளநாடு , ராசேந்திர சோழ  வள நாடு , பன்றி சூழ் நாடு,  அன்பில் எனப்படும் அம்புக்கோவில்  தெற்கிலூரில்  காணியுடையார் மக்களில் திருமலைராய தொண்டைமானார்  அவர்களின் பஞ்ச நத்தத்திலிருக்கும்  என்ற சொற்றொடரில்  உள்ள தகவல் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் இவ்வூரில்   இருக்கின்ற  பகவாந் ராயர்   மற்றும் ராசிவராயர்  ஆகியோருக்கு,  சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையில் அமைந்துள்ள பிரமன்  வயலை சறுவ மானியமாக வழங்கிய மன்னரின் உத்தரவு   தாமிரத்தில் எழுதி சாசனமாக்கப்பட்டதையும் , வழங்கப்பட்ட நிலத்தின் நான்கு புற எல்லைகளாக  கிழக்கு  எல்லையாக கீழக் காட்டுக்கு மேற்கு எனவும் , தென் புறத்தில் புளியடிக்கு வடக்கு எனவும் , மேற்கு பாக்கெல்லையாக மொந்தைக்கு கிழக்கு எனவும்  வட பாக்கெல்லையாக கொத்தகத்து வயலுக்கு தெற்கு எனவும் வரையறுக்கப்பட்டு  இந்த பெரு நான்கெல்லைக்குட்பட்ட நஞ்சையும் , புஞ்சையும் ,  பிரம குளத்தின் நீரை பயிருக்காக மட்டும் பாய்ச்ச வேண்டும்  உத்தரவுடன், இந்த சாசனத்திற்கு இடையூறு செய்வோர் பல தோஷத்திற்கு ஆளாவர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள  கல்வெட்டுப்பகுதி  முழுமையாக வாசிக்க இயலாத நிலையில் உள்ளது . இறுதியாக  தொண்டைமான் மன்னர்  சார்பாக பழனியப்ப வாத்தியார் என்பாரின் ஒப்பத்துடன்  சறுவ மானியம் வழங்கப்பட்டதை  கல்வெட்டு  மூலம் அறிய முடிகிறது .

 

வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட  எல்லைக்கல்

தற்போது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த வாமன கோட்டுருவம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இது கல்வெட்டிலுள்ள எல்லையை குறிப்பதற்காக நடபட்டதை உறுதி செய்கிறது . இது தொண்டைமான் மன்னர்களின் தனித்துவ குறியீடாகும், தொண்டைமான் செப்பு பட்டயங்களில் வாமன கோட்டுருவம் வடிக்கப்பட்டுள்ளதை இதனுடன் ஒப்புநோக்கலாம்.

 

சறுவ மானியம் வழங்கியது யார் ?

திருமலை ராய தொண்டைமான்  (பொ. ஆ. 1729 )மறைவுக்குப்  பிறகு பொ.ஆ. 1758 ஆம்  இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.  தொண்டைமான் மன்னர்களில் 1730 ஆண்டு முடி சூட்டிக்கொண்ட விசைய ராகுநாத ராய தொண்டைமான் பொ. ஆ. 1730 ஆம் ஆண்டு தொடங்கி பொ. ஆ. 1790 வரை ஆட்சி புரிகிறார் என்பதால் இக்காலத்தில்  ,தனது தந்தையாரின் நினைவாக இந்த இந்த சறுவ மானியத்தை வழங்கியிருப்பதோடு தனது பெயரை இக்கல்வெட்டில் குறிப்பிடவில்லை என்பது நோக்கத்தக்கது  மேலும்  இந்த சறுவமானியத்தை திருமலை ராய தொண்டைமானுக்காக பழனியப்ப வாத்தியார் என்பவர் ஒப்பமிட்டு வழங்கியிருப்பது  குறிப்பிடத்தக்கது.  என்றார் .








 

Wednesday, April 5, 2017

1100 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் செழிக்க குமிழி அமைத்துக்கொடுத்த தமிழன் – நொடியூர் மருதன் ஏரியில் கல்வெட்டு கண்டுபிடிப்பு




புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள நொடியூர் கிராமத்தில் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தலைவர் ராஜேந்திரன்,  நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பள்ளி ஆசிரியர் ஆசிரியர் கு.சோமசுந்தரம் , கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பாலமுருகன்,சுதிவர்மன்,ஹரிகர சுதன்,சரவணன் உள்ளூர் வழிகாட்டிகளாக செல்லையா,  நாகராஜன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது

கீழ் செங்கிளி நாடும் வளமும்
நொடியூர் பட்டிணம் என்றழைக்கப்பட்ட இவ்வூர் கீழ் செங்கிளி நாடு என்ற துணை நிர்வாக மண்டலமாக  17 ஆம் நூற்றாண்டு வரை செழிப்போடு விளங்கியுள்ளதை நொடியூரில் உள்ள சிவன் கோவில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அக்கல்வெட்டுகளில் நீர் பாசனம், கோயில் பராமரிப்புக்காக வரி செலுத்துதல்,சுங்க வரி வசூலித்தல், இங்கு அமைந்திருந்த திருஞான சம்பந்தர் மட பராமரிப்பு  உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கின்றன.
 அது மட்டுமின்றி தஞ்சைக்கு அருகேயுள்ள உடையார் கோயில் சிவாலயத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (18ஆம் ஆட்சியாண்டு, கி.பி.1196) கல் எங்கிருந்து கொணரப்பெற்றது என்பதனை, நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்தும் சிலை கொண்டு வந்து... என்ற கல்வெட்டுக்குறிப்பின் மூலம் சோழர் ஆட்சிக்காலத்தில் இந்த ஆட்சிப்பகுதி மிக முக்கிய பகுதியாக விளங்கியதை அறியலாம்

புதிய கல்வெட்டுச்செய்தியும்  ஆண்டும் 
“ஷஸ்வத்தி ஸ்ரீ கோவி ராஜகேசரி பன்மர்க்குயாண்டு (பத்தா)வது கீழ்செங்கிளி நாட்டு மங்கலத்து. விலக்க ஏரன் இரணசிங்க முத்தரையன் சேவித்த குமிழி “
கோவி ராஜகேசரி என்றழைக்கப்பட்ட ஆதித்தனின் பத்தாவது ஆட்சியாண்டில் கீழ்செங்கிளி நாட்டை சேர்ந்த மங்கலத்து விலக்க ஏரன் இரண சிங்க முத்தரையன் என்பவர் இந்த குமிழியை அமைத்து கொடுத்ததாக இக்கல்வெட்டில் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

 இக்கல்வெட்டின் எழுத்தமைதி மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதித்த சோழரின் கல்வெட்டு களோடு ஒப்புநோக்கும் போது  இது 1100 ஆண்டுகள் பழமையானது என்பதை அறிய முடிகிறது .

நொடியூர் மருதனேரி பெயரும் நிலவகைப்பாட்டு  தொடர்பும்
கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட மருதனேரியானது சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு காடுகளை அழித்து உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால்தான் மருதநிலம் என்கிற வகைப்பாட்டில் வயலும் வயலைச்சேர்ந்த இடமாகவும் அமைந்துள்ளது. என்பதால் இது முழுக்க பாசனத்திற்கான ஏரியாக அப்போதே வகைபிரித்து நிர்வகிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது

குமிழி அமைத்தலும்  ஏரியும் :

ஏரிகளில் இருந்து பாசனத்துக்கு நீரை வெளியேற்ற அன்றே சிறந்த முறையில் மதகுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மதகுகளுக்கு பல பெயர்கள் இடப்பட்டிருந்தன. சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை முதலியன அப்பெயர்கள். தற்காலத் திருகு அடைப்பான் போன்று நீர் வெளியேரும் அளவை சிறுகச் சிறுக குறைக்கவோ அதிகரிக்கவோ கூடிய குமிழிகளும்  அன்றே இருந்தன.
தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்குப் பருவக்காற்றால் வருடத்திற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே மழை பெறுகின்றன. அதனைக் கொண்டுதான் வருடம் முழுவதற்குமான நீர்த்தேவையைச் சமாளித்துக் கொள்ளவேண்டும் என்பதை  நன்கு உணர்ந்து கொண்ட பழந்தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஏரி/குளங்களை உருவாக்கி, அந்த இரண்டு மாத மழை நீரையும் முழுமையாகச் சேகரித்துப் பயன்படுத்திக் கொண்டனர். அவற்றிற்கு சான்றாக இருப்பத்துதான் இந்த மருதன் ஏரிக்குமிழியாகும்.

ராஜகேசரி ஆதித்தனும் இரணசிங்க முத்தரையனும்

ஸ்ரீ கோவி ராஜகேசரி என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்களான ஆதித்தன் , கண்டராதித்தன் , இராஜராஜன் ஆகியோரில் ஆதித்தன் பல்லவர் களான நிருபத்துங்கன் , மகன்  அபராசிதன் , பாட்டன் பிருதிவீபதி யுடன் போர் உறவுகொண்டு  பாண்டியன் இரண்டாம் வரகுணன் என்பானை திருப்புறம்பியம்(கும்பகோணம் அருகே) எனுமிடத்தில் தோற்கடித்ததாக சான்றுகள் பகிரப்படும் நிலையில்,  இப்போரில் பிருதிவீபதி இறந்த போதும் பல்லவர்களுக்கு வெற்றிகிடைக்க ஆதித்தன் காரணமாக அமைந்தான். இதன் பின்னர் கி.பி.882 ல் நிருபதுங்கன் இறந்தவுடன் ஆதித்தன் செங்கற்பட்டு வரை தனது எல்லையை  விரிவாக்கம்  செய்ததோடு அதே காலக்கட்டத்தில் பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியாளர்களான  முத்தரையர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களை தமது நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்திக்கொண்டதை இரண சிங்க முத்தரையன் இந்த ஏரியை உருவாக்கி குமிழி அமைத்திருக்கும் இக்கல்வெட்டு   முத்தரையர் மற்றும் ஆதித்தனிடையே இருந்த உறவுக்கு வரலாற்று சான்றாக அமைகிறது.

ஏரன் விலக்கன் இரணசிங்க முத்தரையன் யார்?

பெரம்பலூர் மாவட்டம்,உடையார் பாளையம் வட்டம்,செட்டித் திருக்கோணம் இரணேஸ்வரர் கோயிலின் கருவறை
முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டில்
கங்கை நாடாழ்வாந் சேதநன் பட...கக்கு வைசத பகை திருந்த வேண்டுமென்று எல்லாரு சொல்ல சம்மதித்து திருக்குற்றத்து மாதேவர் “இரணசிங்க ஈஸ்வரமுடையாருக்கு” விளக்கு முப்பத்திரண்டும் சீராளந் துறந்த என்று செய்தி பகிரப்படுவதன் மூலம் இப்பெயர் கொண்ட ஆட்சியாளர் ஒருவர் இருந்திருப்பதும் அவரது இயற்பெயரான இரணசிங்கன் என்ற அடைமொழியுடன்  இறைவன் அழைக்கப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது.
பல்லவர்களில் புகழ் பெற்றவர்கள் சிங்க என்ற பெயர்ச்சொல்லுடன் பெயர் சூட்டிக்கொள்வதை அறிகிறோம் அதன் வழியில் இரண சிங்க முத்தரையன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என யூகிக்க வேண்டியுள்ளது .  இப்பெயருடன்   ஏரன் விலக்கன் என்கிற அடைமொழியோடு அழைத்துக்கொண்டதன் மூலம்  அவன் தன்னை ஒரு உழவன் என்பதில் பெருமை கொண்டு உழுபணிக்கு உதவியாக இருக்கும் ஏர் என்கிற கருவியின் பெயர்ச்சொல்லை அடிப்படையாகக்கொண்டு அப்பணியை செய்கிறவன் , அதன் தலைவன் என்கிற வகையில் தம்மை ஏரன் என்று அழைத்திருக்க வேண்டும் என்று கருதலாம். விலக்கன் என்பதற்கு சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதை தொடர் ஆய்வின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி இலங்கையுடனான முத்தரையர்களின் தொடர்பு பற்றியும்   மதத்துடனான தொடர்பு பற்றியும் புதிய ஆய்வுகளுக்கு இந்தபெயர்  வழிவகுக்கும் என நம்பமுடிகிறது என்பதோடு .
இந்தக்குமிழிகல்வெட்டு பழங்கால பாசன முறைக்கு சான்றாக அமைந்திருப்பதாகவும் கந்தர்வகோட்டை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் மூத்தக்கல்வெட்டு என்றும் கூறினார்.

தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...