Showing posts with label pudukkottai history. Show all posts
Showing posts with label pudukkottai history. Show all posts

Sunday, September 5, 2021

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீர் பாசன பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த பொற்கொல்லர் புதுக்கோட்டை மேலூர் கண்மாயில் கல்வெட்டு கண்டுபிடிப்பு



         புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்கா சத்தியமங்கலம் அருகேயுள்ள மேலூர் பாசன கண்மாயில் குமிழிக்காலில் எழுத்துப் பொறிப்பு இருப்பதாக கீரனூர் சேர்ந்த வேளாண் பொறியாளர் என்.நாராயணமூர்த்தி கொடுத்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கல்வெட்டை படியெடுத்து வாசித்துள்ளார். இதில் தட்டான் திறமன் என்பவர் நீர்ப்பாசனக்கண்மாய்க்கு பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கல்வெட்டு ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

 தமிழகத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக்குளங்கள், கண்மாய்கள்,ஏரிகள் உள்ளன. அவற்றில் சுமார் 250 குமிழிக்கல்வெட்டுகளே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

              பல்வேறு மாவட்டங்களில் நீர்ப்பாசன அமைப்புகள் பற்றிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதிகமான குமிழிக்கல்வெட்டுகள் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்,திருச்சிராப்பள்ளி பகுதிகளைச் சேர்ந்தவையாக உள்ளன.

 குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 42 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலனவை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராசேந்திரன் அவர்களால் கண்டுபிடித்து பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

        இத்தகைய கல்வெட்டுகள் பழங்கால பாசனமுறையில் தமிழர்கள் கொண்டிருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப்பங்கீட்டில் பின்பற்றப்பட்ட சமூக நடைமுறைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன.

 

குமிழிக்கல்வெட்டுகள்

 புதுக்கோட்டையின் கவிநாடு கண்மாயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோமாறன் சடையன் என்கிற முதலாம் வரகுணபாண்டியன் என்பவரால் அமைக்கப்பட்ட குமிழி கல்வெட்டு காணப்படுகிறது.

 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் நொடியூரில் உள்ள கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த முதலாம் ஆதித்தன் சோழன் ஆட்சிக்காலத்தில் மங்கல நல்லூர் என்றழைக்கப்பட்ட தற்போதைய மங்கனூரைச்சேர்ந்த இரணசிங்க முத்தரையன் என்பவர் மருதனேரிக்கு குமிழி அமைத்துகொடுத்த கல்வெட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளோம்.

 கம்மாளர்களின் சிறப்பு

பழங்கால அறிவியல் , எண்கணிதம், வானியல் நகர்வுகள் அடிப்படையில் நன்கு தேர்ந்த கட்டுமான அறிவை பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர். செப்பு , இரும்பு , தங்கம், மரம் , கல் என ஐந்து தொழில்நுட்பத்திலும் திறம்பட இயங்கிய கன்னார் , கொல்லர், தட்டார், தச்சர், கற்தச்சர் என  ஐந்தொழிலை அடிப்படையாக கொண்டவர்களாக சங்க. இலக்கியங்களிலும் பழங்கால சான்றுகள் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது.

பழங்கால உலோக அறிவியலில் கோலோச்சிய கம்மாளர் இனத்தவருள் ஒரு பிரிவினரான. பொற்கொல்லர்கள் கல்வெட்டுகளில் தட்டான் என்று அழைக்கப்படுகின்றனர்.

 திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குண்டூர் பெருங்குளத்தில் முதலாம் ஆதித்த சோழன் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குண்டூர் பெருந்தட்டான் மாறன் குவாவன் என்பவர் குமிழி அமைத்துக் கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

 தட்டான் என அழைக்கப்படுவோர் சோழர் காலத்தில் பொன்னிலும் வெள்ளியிலும் மணிகளை இழைத்து உருவாக்கிய நுண்கலைஞர்கள் ஆவர். மன்னர் குடும்பத்திற்கான தட்டார்கள் பெருந்தட்டான் என அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு சான்றாக திருவையாற்றில் உள்ள முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டு உலகமகாதேவி ஈசுவரம் கோயில் பணிக்கெனச் சக்கடி சமுதையனான செம்பியன் மாதேவிப் பெருந்தட்டான் அதாவது செம்பியன் மாதேவியருக்கான ஆபரணங்கள் செய்வதை தனிப்பணியாகக் கொண்டவருக்கு தட்டாரக்காணி வழங்கப்பட்டதையும். திரிபுவனியில் உள்ள முதலாம் இராசாதிராசனின் கல்வெட்டு தட்டாரக் காணியாக இரண்டு வேலி நிலத்தினை அரங்கன் கோமாரனான இராசராசப் பெருந்தட்டான் என்பவருக்கு வழங்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

 

மேலும் தட்டார்களுக்கென தட்டிறை, தட்டோலை, தட்டார் பாட்டம் உள்ளிட்ட வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. உருக்குலைகளுக்கு வரி விதிப்பு செய்த தகவலை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில் கல்வெட்டு  தெரிவிக்கிறது.

 மேலூர் பெருமடைக்கால் புதிய கல்வெட்டு

 புதுக்கோட்டை மாவட்டம் மேலூர் மேலி(ழி)க்கண்மாயின் பெரிய குழுமிக்கருப்பர் கொம்படி ஆலயத்தின் அருகேயுள்ள குமிழிக்கால் கல்வெட்டில், "ஸ்வஸ்தி ஶ்ரீ சிறுவாயி ஞாட்டு மேலூர்த்தட்டான் திறமன் திருவிளப்படிக்கு நட்டுவித்த பெருமடைக்கால்" அதாவது

சிறு வாயில் நாட்டு மேலூர் தட்டான் திறமன் என்பவர் இறைவனின் எண்ணப்படி (திரு உளப்படிக்கு) பெருமடைக்கால் நட்டுவித்தாக செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய  கல்வெட்டு பராந்தகன் காலத்தைய எழுத்தமைதியோடு காணப்படுவதால் ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக கணிக்கலாம். இந்தக்கல்வெட்டின் மூலமாக பொதுமக்களும் தொழில் புரிவோரும் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும் பயிர்த்தொழிலையும் அதற்கு தேவையான பாசன ஏற்பாடுகளையும் இறைத்தொண்டாக நினைத்து செயற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

    




தமிழகத்தில்  சோழ, பாண்டியர், வணிக குழுக்கள், உள்ளூர் நிர்வாக அமைப்புகள், உள்ளிட்டோருடன் பொதுப்பணியில் நாட்டமுடைய செல்வந்தர்களும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் புதிய குளங்களை அமைப்பதிலும் பாசன         கட்டமைப்புகளை    ஏற்படுத்துவதிலும்  சீரமைப்பதிலும் பெரும்பங்காற்றி இருக்கின்றனர் என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு திகழும் என்றார்.

   மேலும் இக்கல்வெட்டு வாசிப்பை உறுதி செய்த மூத்த கல்வெட்டறிஞர் முனைவர் சு.ராஜகோபால் ,  படியெடுக்கும் போது உதவி புரிந்த முருக பிரசாத் ,ராகுல் பிரசாத், தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் உறுப்பினர் பீர்முகமது ஆகியோருக்கு  நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 

Sunday, August 23, 2020

மங்களாகோவில் கிராமத்தில் அக்னி ஆற்றுக்கு வடபுறமுள்ள விவசாய நிலத்தில் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு .

 

மங்களாகோவில் மகாவீரர் சிற்பம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம் ,  மங்களாகோவில் கிராமத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பிள்ளையார் குள கரைக்கு அருகேயுள்ள விவசாய நிலத்தில் சமண சிற்பம் கண்டுபிக்கப்பட்டுள்ளது.  இச்சிற்பம் அவ்வூர் மக்களால் அய்யனார், காளி என்று பலவாறாக அழைக்கப்பட்டு வந்துள்ளது. இச்சிற்பம் குறித்து ஆய்வு செய்ய உள்ளூர் தொழிற்சங்க நிர்வாகி உ. அரசப்பன் அளித்த தகவலைத்தொடர்ந்து நமது கள ஆய்வில் கீழ்க்கண்ட தகவலை வெளிப்படுத்தியுள்ளோம்.

சமணர் சிற்பம் ஒன்றரை அடி அகலத்துடனும், மூன்றரை அடி உயரத்துடனும் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது   தீர்த்தங்கரரான  மகாவீரர் திகம்பரராக, தியான கோலத்துடன்,  நீண்ட துளையுடைய காதுகள், தலைப்பகுதி முகம் தெளிவற்று  தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.  விரிந்த மார்புடன் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தில் ஒருசில இடங்களில் சிதைவுற்றுள்ளது .

 தலையின்  பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையம் தெளிவற்று சிதைந்தும்,  மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம் , சகல பாசானம் எனும்   முக்குடை சிதைந்துள்ளதால் தெளிவற்று இரண்டு குடைபோல தோற்றமளிக்கிறது, பின்புலத்தில்  குங்கிலிய மரமும்  சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது,  இதன் உருவமைப்பு ஒப்பீட்டின்படி பதினொன்றாம்  நூற்றாண்டைச்சேர்ந்த சிற்பமாக கருதலாம்.  

அக்னி ஆறும் சமணமும்

அக்கினி ஆறு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரிய குளத்தில்  தொடங்கி கந்தர்வகோட்டை ஆத்தங்கரைவிடுதி ,  கறம்பக்குடி, திருமணஞ்சேரி வரையிலும் அதன் தொடர்ச்சியாக  தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கொள்ளுக்காடு மற்றும் கீழத்தோட்டம் வழியாக 78 கிலோ மீட்டர் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது ,

அக்கினி ஆறானது மிகப்பழமையானதாகும், இது  அஞ்ஞான விமோச்சனி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருப்பதும், ஆற்றின் பெயரும் சமணக்கொள்கையோடு  தொடர்புடன் இருப்பதையும், சமண சமயம் செழித்திருந்த ஆற்றுப்படுகையாக இருந்திருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.  

மேலும் இக்கருத்தை உறுதி செய்யும் வகையில் கந்தர்வகோட்டை கீழ வாண்டான் விடுதி சிவனார் திடல் என்ற சமணர் திடலில் செங்கல் கட்டுமானத்தால் உருவாக்கப்பட்ட சமணப்பள்ளியும் கையடக்க சமணர் சிற்பமும் , நான்கரை அடி உயரமுடைய சமணர் சிற்பமும் அடையாளப்படுத்தினோம், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மங்களாகோவில் சமணர் சிற்பமும் அவ்விடத்திற்கு மிக அருகில் உள்ளது. அதுமட்டுமின்றி  அக்கினி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வாழமங்கலம் , மங்கத்தேவன் பட்டி , மோசகுடி , கோவில் வீரக்குடி , செம்பாட்டூர், புத்தாம்பூர், வைத்துக்கோவில், பெருங்களூர்  உள்ளிட்ட ஊர்களில் சமணத்தீர்த்தங்கரர் சிற்பங்கள் சமணப்பள்ளிகள் அடையாளங்காணப்பட்டிருப்பதும் வலுசேர்க்கும் சான்றுகளாக உள்ளது. 

இந்த களப்பணியின் போது வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ராஜேஷ், தி.மாதரசு, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி  க.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

தற்போது மகாவீரர் சிற்பம் கந்தர்வகோட்டை வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு கந்தர்வகோட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்படுள்ளது.




 

 

 

 

Saturday, November 19, 2016

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் இணைந்து உலக மரபு வார விழாவை நார்த்தாமலையில் கொண்டாடியது

உலகின் பல்வேறு இடங்களிலும் உலக மரபு வாரம் நவம்பர் 19  முதல் நவம்பர்  25  வரை  பண்பாடு மற்றும் மரபுகளின் மீது ஈடுபாடு கொண்டவர்களால் கொண்டாடப்படுகிறது. 












இந்நிகழ்வு  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் இணைந்து இவ்விழாவை  நார்த்தாமலை கடம்பர் கோவில் அருகே கொண்டாடியது. இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் மேலைப்பனையூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் .புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனத்தலைவர் வெ.ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் , மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவ மாணவிகள் , ராமநாதபுரம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


இந்தியப்பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமையை இளந்தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் ஆர்வலர்களின் கூட்டுமுயற்சியோடு இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இதில்  மாணவர்களுக்கு தமிழர் வரலாறு, தொழிநுட்பம், நீர்பாசன முறைகள், கலை மற்றும் வழிபாடு உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்து உரையாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நார்த்தாமலை விசையாலய சோழீஸ்வரத்தில் கல்வெட்டு படியெடுப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன் வழங்கினார். இறுதியாக  மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மஸ்தான் பகுருதீன் நன்றி கூறினார்.





புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் இணைந்து உலக மரபு வார விழாவை நார்த்தாமலையில் கொண்டாடியது

உலகின் பல்வேறு இடங்களிலும் உலக மரபு வாரம் நவம்பர் 19  முதல் நவம்பர்  25  வரை  பண்பாடு மற்றும் மரபுகளின் மீது ஈடுபாடு கொண்டவர்களால் கொண்டாடப்படுகிறது. 












இந்நிகழ்வு  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் மற்றும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையம் இணைந்து இவ்விழாவை  நார்த்தாமலை கடம்பர் கோவில் அருகே கொண்டாடியது. இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் மேலைப்பனையூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் .புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனத்தலைவர் வெ.ராஜகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் மு.முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் , மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவ மாணவிகள் , ராமநாதபுரம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


இந்தியப்பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமையை இளந்தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் புதுக்கோட்டை , ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் ஆர்வலர்களின் கூட்டுமுயற்சியோடு இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இதில்  மாணவர்களுக்கு தமிழர் வரலாறு, தொழிநுட்பம், நீர்பாசன முறைகள், கலை மற்றும் வழிபாடு உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்து உரையாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நார்த்தாமலை விசையாலய சோழீஸ்வரத்தில் கல்வெட்டு படியெடுப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன் வழங்கினார். இறுதியாக  மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மஸ்தான் பகுருதீன் நன்றி கூறினார்.





Friday, August 26, 2016

வாழமங்கலம் பாடிகாவல் கல்வெட்டு - பத்திரிக்கை செய்திகள்

தீக்கதிர்  - ஆசிரியம் கல்வெட்டு 




                                                  தி இந்து  - ஆசிரியம் கல்வெட்டு 


                                                      டெக்கான்  - ஆசிரியம் கல்வெட்டு 


                                                        தினகரன்  - ஆசிரியம் கல்வெட்டு 
                                                     

                                                      தமிழ் இந்து - ஆசிரியம் கல்வெட்டு 



                                                      தினமணி - ஆசிரியம் கல்வெட்டு 

தினமலர் - ஆசிரியம் கல்வெட்டு 

                                               தினத்தந்தி - ஆசிரியம் கல்வெட்டு 





தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...