Friday, May 31, 2019

பூலாங்குறிச்சி அருகே வழிபாட்டிலுள்ள பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி கிராமத்திலுள்ள வனத்தில், கல்வட்ட அமைப்புக்குள்ளாக வித்தியாசமான முறையில், கொம்படி ஆலயம் ஒன்று அமைந்திருப்பதாக அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அளித்த தகவலைத்தொடர்ந்து புதுகோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின்  உறுப்பினர்கள் இயற்கை ஆர்வலர் சீ.அ.மணிகண்டன், ஆசிரியர் சோலச்சி திருப்பதி ஆகியோருடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் இப்பகுதி பழங்கால வனச்சூழல் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு உயிரினப்பரவலை கொண்ட பகுதியாக இருக்கிறது.
இதே போன்ற சூழல் மாவட்டம் முழுவதும் ஒரு காலத்தில் இருந்திருப்பதை புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் தெளிவாக நமக்கு வெளிப்படுத்துகிறது.
சரி விசயத்துக்கு வருவோம் ,
 ஆய்வின் மூலம் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் ஏழு கல்வட்டங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் இரண்டு கல்வட்டங்கள் மட்டும் வழிபாட்டிலுள்ளதை காண முடிந்தது.
அமைவிடம் :
மலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு மொக்காண்டி கொம்படி ஆலயம் பெருங்கற்கால நினைவுச்சின்னமான கல்வட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டு வழிபாட்டிலுள்ளது.  முக்கிய வழிபாட்டு பகுதியிலிருந்த கல்வட்டத்திலிருந்த கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு அதிலிருந்த கற்பலகைகள் கோயிலுக்கு நேரெதிர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


அதன் அருகாமையில் இருக்கும் இரு கல் வட்டங்கள் முழுமையாக சிதைக்கபடாமல் கல்லறை அமைப்புகளுடன் உள்ளது. இதன் மையப்பகுதியில் மரங்கள் மற்றும் கொடிகள் மிகுந்த அடர்த்தியாக காணப்படுகிறது. மேலும்  இப்பகுதியும் துணை வழிபாட்டு அமைப்புகளாக இருக்கிறது.கோயிலின் வடபுறம் மற்றும் தெற்கு புறங்களில் ஐந்து கல்வட்டங்கள் காணப்படுகிறது. இவைகள் ஐந்தும் வழிபாட்டில் இல்லை 
கோவில் கட்டுமானத்திற்கு முந்தைய வழிபாட்டுத்தலம் :
 இத்தகைய வழிபாட்டு முறை கோயில் கட்டுமான அமைப்புகளுக்கும் உருவ வழிபாட்டுக்கும் முந்தையது என மூத்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும் வட மாவட்டங்களைப்போல தென்மாவட்டங்களில் பெருங்கற்கால சின்னங்கள் வழிபாட்டில் காணப்படுவதில்லை ஆனால் கொம்படி வேல் வழிபாடும், சுடுமண் சிற்ப வழிபாடும் மிகுதியாக உள்ளது, ஆனால் நெடுங்கல் வழிபாடு , கல் திட்டை வழிபாடு, உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் அற்றுப்போய் கோயில் கட்டுமானங்களாக மாறி விட்ட நிலையில் இக்கோவிலில் மட்டும் கல் வட்டம் , கல் திட்டை வழிபாட்டிலுள்ள நிகழ்கால சான்றாக உள்ளது சிறப்பானது.


கல்பதுக்கை குறித்த இலக்கிய பார்வை :

நல்லிசை வலித்த நாணுடை மனத்தர் , கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர் படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை ’’ என்று அகநானூறு பாடல் எண் 231 லும், ‘‘வெந்நுனை அம்பின் விசையிட வீழ்ந்தோர் , எண்ணுவரம் பறிய உவலிடு பதுக்கைச் சுரங்கெழு கவலை’’ என்று பாடல் எண் 109 லும் பாடற் பகுதிகள் இப்பதுக்கைகளைப் பற்றி அறிவிக்கின்றன.

‘‘தாம் வசித்த கற்களைவிட்டுத் தெய்வங்கள் நீங்கி விட்டமையால் அம்பலங்கள் பாழடைந்து கிடக்கின்றன’’ என்கிறது புறநானூறு 52 வது பாடல், பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங்கவலை என்கிறது ஐங்குறு நூறு , இவ்வாறு சங்க காலம் வரை இந்த பெருங்கற்கால பண்பாடு நீடித்து நிலைத்து இருந்ததை இந்த இலக்கிய சான்றுகளின் வழியாக அறிய முடிகிறது. கல் பதுக்கைகளில் வைக்கப்படுபவர்கள் வீரத்தினாலும் , தனது தலைமைப்பண்பாலும் உயர் நிலையில் இருந்தோருக்கு செய்யப்படும் மரியாதையாக இந்த பெருங்கற்கால சின்னங்கள் இருந்துள்ளதையும் அதுவே பின்னாளில் வழிபாட்டு முறையானதையும்  உணர முடிகிறது.
கல்வட்டங்களின் வடிவம் 

ஏழு கல்வட்டங்கள் முழுமையாகவும், பகுதியளவு சிதைந்த நிலையில் கல்வட்டங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கல்வட்டங்களில் இரும்புத்தாது கற்களான லேட்டரைட் எனப்படும் செம்புராங்கற்கள் கொண்டு வட்ட வடிவில் அடுக்கப்பட்டுள்ளன.
கல்வட்டத்தின் மையத்தை விட்டு சற்று விலகலாக கிழக்குப்புற விளிம்பு பகுதியில் கருங்கல்லினாலான நான்கு பலகைக்கற்களை இணைத்து சதுரவடிவிலான கல்லறை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


ஒரு சில இடங்களில் செம்புராங்கற்களுக்கு பதிலாக கல் வட்டங்களை அமைக்க இப்பகுதியில் எளிதாக கிடைக்கும் கருங்கல் பலகைக் கற்களை பயன்படுத்தி யுள்ளனர்
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவைகளில் கோயிலின் வடபுறம் உள்ள கல் வட்டமே 24 அடி விட்டமுடையதாகும் இதே அளவை ஒத்த கல்வட்டங்கள் இரண்டும் .ஏனைய நான்கும் 14 அடி விட்டமுடைய கல்வட்டங்களாக உள்ளன. கல்லறையின் மேற்பகுதி மூடப்படாமல் உள்ளது. இதன் உயரம் 3 அடி வரை உள்ளது. இது கல்வட்டத்திலுள்ள செம்புறாங்ககற்களை விடவும் சற்று கூடுதல் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. 


இதனை கல்திட்டை போன்ற கற்பதுக்கைகள் என வரலாற்று ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். கல் வட்டத்தின் உட்பகுதிகளில் சிறிய கற்கள் குவியலாக நிரப்பப்பட்டுள்ளது. சில கல் வட்டங்கள் கல் நிரப்பப்படாமல் உள்ளது.




வழிபடும் முத்தரையர்கள் :

இந்த கல் வட்டங்கள் ஒட்டைப்பிச்சான் வகையறா எனப்படும் முத்தரையர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை வழிபடுபவர்களாக அதே இனத்தைச் சேர்ந்த குப்பை கொட்டியான் வகையறா மற்றும்  சிவகங்கை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் பல நூறு ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மொக்காண்டி என்பவர் இந்த குறிப்பிட்ட மக்களின் மூதாதையராக இருக்க வாய்ப்பு உள்ளது. 
தொல் மரபணு ஆய்வு :
இத்தகைய தகவல்களை அறிவியல் முறைப்படி உறுதி செய்திட இப்பகுதியில் இருக்கும் கல்வட்டங்களை தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்து கிடைக்கும் கரிம சான்றுகள் , மரபணு கூறுகள் ஆகியவற்றை ஆய்வுகுட்படுத்துவதன் மூலம் , இலக்கியங்களில் சொல்லப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையையும், வழிபடுபவர்களுடைய பண்பாட்டு தொடர்பையும் உலகறியச்செய்ய முடியும். 

கல்வட்டங்களின் காலம் :
உலகம் முழுவதும் பெருங்கற்காலம் என்று அழைக்கப்படும் மெகாலித்திக் காலத்தில் ஆப்பிரிக்கா , ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே மாதிரியான பண்பாடு இருந்துள்ளது இதனை பெருங்கற்கால பண்பாடு என தொல்லியலாளர்கள் அழைக்கின்றனர். குறிப்பாக கல்வட்டம், கல் திட்டை, கல் பதுக்கை , நெடுங்கல் , கற்குவை உள்ளிட்ட அமைப்புகள் பரவலாக காணப்படுகின்றன. 


இந்த அமைப்புகளில் புதைக்கப்படுபவர்கள் பெரும்பாலும்  முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் ,  வீரர்கள் , வேட்டை, களவு மீட்டல் , போர் உள்ளிட்ட புறத்திணை காரணங்களால் இறந்தவர்களாகவே கருத்தப்பட்டு அவர்களின்  நினைவாக பெரிய கற்களை கொண்டு அமைக்கப்பட்டமையால் பெருங்கற்கால சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன.
 இது இரும்பு உளி உள்ளிட்டகருவிகளின் துணையோடு பாறைகளை உடைத்து பயன்படுத்தியமையால் இது இரும்புக்காலத்தில் இருந்த மற்றொரு பண்பாடு என்றும் நோக்கப்படுகிறது .

 உலக அளவில் பெருங்கற்கால சின்னங்களின் காலம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திலுள்ள கல் வட்டங்களின் வயது கி.மு 2500 லிருந்து 1500 வரையிலும் இது வடகிழக்கு பிரான்ஸ் பகுதியில் கி.மு 5000 எனவும், கணிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பேராசிரியர் கே.ராஜன் தலைமையில் நடந்த ஈரோடு மாவட்டம் கொடுமணல் ஆய்வு முடிவுகளின் படி கி.மு 540 லிருந்து காலக்கணிப்பு முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் இவைகளில் எழுத்து பொறிப்புகளுடன் கிடைத்திருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுத்துவடிவம் இருந்துள்ளதை இந்த அகழ்வாய்வு வெளிப்படுத்தியது.
இந்தியாவில் இரும்புக்காலம் என்பது கி.மு 1100 லிருந்து கி.மு 350 என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் கே.பி.ராவ் தலைமையில் நடந்த அகழ்வாய்வின் போது கிடைத்த கத்தி , மட்பாண்டங்கள் உள்ளிட்டவற்றை காலக்கணிப்பு செய்தததில் கிடைத்த முடிவுகளின் படி இரும்புக்காலம் கி.மு. 2400 முதல் அதாவது  இன்றிலிருந்து 3400 வருடங்களுக்கு முன்னதாக தொடங்குவதாக ஆய்வு முடிவு  வெளிவந்துள்ளது.
 புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா சத்திரம் , ஆரணிப்பட்டி , ராஜகுளத்தூர் , செங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்வட்டத்துடன் கூடிய கல்லறைகள் , கல் பதுக்கைகள் , கல் திட்டைகள் அடையாளம் காணப்பட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு செங்களூர் கல்வட்டதிலுள்ள கல் பதுக்கையை ஆய்வு செய்ததில் கிடைத்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் மணிகளும் கிடைத்துள்ளன. அவற்றை காலக்கணிப்பு செய்ததது பற்றிய எவ்வித குறிப்புகளும் கிடைக்கவில்லை ஆனாலும் இவற்றின் காலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரை பழமையானது என கணிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியிடப்பட்ட அறிவியல் பூர்வ காலக்கணிப்புகளின்படி  தற்போது நம்மால் அடையாளம் காணப்பட்ட கல்வட்டத்தின் 3000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதலாம்

ஊடகங்களில் கல் வட்டம் 
https://timesofindia.indiatimes.com

https://www.deccanchronicle.com/nation/current-affairs

https://www.nakkheeran.in/special-articles

https://www.dinamani.com/tamilnadu

http://www.dinakaran.com/News

https://makkalkural.net/news












Wednesday, May 22, 2019

பொற்பனைக்கோட்டை –ஓர் சங்க கால கோட்டை


புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வேப்பங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைத்துள்ளது பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 10 கிலோ தொலைவில் அமைந்துள்ளது


  பொற்பனைக்கோட்டையின் அமைப்பு




வட்ட வடிவில் உள்ள கோட்டையின் சுற்றளவு 1.63 கிலோ மீட்டருடனும் , 50 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகவும் உள்ளது. கோட்டை நான்கு புற வாயில்கள் கொண்டதாகவும் தற்போதைய நிலையில் உள்ளது. கோட்டையின் வடக்குப்புற மண் சுவரின் அடிமானம் சுமார் 50 அடி அகலமுடனும் , 40 அடி உயரத்துடனும் சாய்வாக அமைந்துள்ளது, கோட்டையின் மேற்புறத்தில் பத்து அடி அகலத்துடன் மண் மற்றும் செம்புராங்கல் கொண்ட சுற்றுப்பாதை அமைப்பு உள்ளது. இதன் வெளிப்புறத்தில் நான்கு அடி கால அகலத்தில் சங்க செங் கல்கட்டுமானத்துடன் கூடிய கோட்டைச்சுவர் மற்றும் குறிப்பிட்ட இடைவெளிகளில் அம்பு எய்யும் அறைகள் (கொத்தளங்கள்) தொடர்ச்சியாக காணப்படுகிறது. சாதாரண மண் மேடல்ல கோட்டைதான் என்பதை தொல்லியல் ரீதியில் அடையாளப்படுத்த மிக முக்கியமான சான்றாகும்.

  பொற்பனைக்கோட்டை சங்க கால கோட்டைகளுக்கான நிகழ்காலச் சான்று
சங்ககால இலக்கியங்களில் சொல்லப்பட்ட மாடமாளிகைகளும் கோட்டை கொத்தளங்களும் முழுவதும் அழிந்துவிட்டதாக கடந்த பத்தாண்டுகள் வரை அனைத்து ஆய்வாளர்களும் நம்பி வந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்றளவும் கோட்டைச்சுவர் அழியாமலும் , அதில் பயன்படுத்தப்பட்ட களிமண் சங்ககால செங்கல் கட்டுமானம் கோட்டைச்சுவரின் நான்கு அடி அகலமுள்ள சுற்று சுவர் மற்றும் கோட்டை கொத்தளத்தின் ப வடிவ கட்டுமானத்தின் அடிக்கட்டுமானம் இன்றளவும் சிதையாமலும் உள்ளது. மேலும் கோட்டையைச் சுற்றிலும் சுமார் 15 ஆழமான, சுமார் 40 அடி அகலத்துடன் அகண்ட அகழியும் ஒரு சில இடங்களில் முழுமையாக மண் மூடி விட்டாலும் மேற்கு மற்றும் வடக்குப்பகுதிகளில் முழுமையாக காண முடிகிறது. இதன் மூலம் தமிழர்களின் மேம்பட்ட வாழ்க்கை முறையை எடுத்துக்கூறும் இலங்கியங்களில் உள்ளவாறு “உயர்வகலம் திண்மை அருமையிந் நான்கும் அமைவரண் என்றுரைக்கும் நூல்” என திருக்குறளின் 743 பாடல் இயம்புவதற்கிணங்கவும் , சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ள கோட்டையின் உள்ளேயும் வெளியேயும் அமைந்திருந்த கருவிகள் , படைக் கலக்கொட்டில்கள் , அரண்மனை, உள்ளிட்ட அம்சங்களைக்கொண்ட மிக முக்கிய சான்றாக இக்கோட்டை உள்ளது.

  சங்ககால இலக்கியங்களில் செங்கல் 

சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின் என்கிறது பெரும்பாணாற்றுப்படை (405) இங்கே சுடுமண் என்பது சுட்ட மண்ணாலான செங்கலை குறிக்கிறது. இட்டிகை நெடுஞ்சுவர் என அகநானூறு ( 167 : 13) பகிர்கிறது இங்கே இட்டிகை எனப்படுவது செங்கலாகும்


கோட்டையிலிருந்த படைக்கலக் கொட்டில் பற்றிய இலக்கிய சான்றுகளும் பொற்பனைக் கோட்டையும்

 படைக்கலக்கொட்டில் என்ற பகுதி ஆயுதங்கள் செய்யும் தொழிற்சாலைகளும் , போர்க்கருவிகளை சேமிக்கும் கிடங்காகவும் பயன்பட்ட கோட்டையின் ஒரு கட்டுமானப்பகுதியாகும். இப்பணியைச்செய்த கொல்லர்கள் பற்றி புறநானூறு (312 : 3) பாடல் “வேல்வடித்துக்கொடுத்தல் கொல்லற்குக் கடனே” என்கிறது. புறநானூறு பாடலில் (95) ல் அவ்வையார் தொண்டைமானிடம் வள்ளல் அதியமான் போர்த்திறம் பற்றி கூறுவதாக எழுதிய பாடலில் “இங்கே படைக்கருவிகள் மயில் தோகை அணியப்பட்டு மாலை சூட்டப்பட்டு திரண்ட காம்பும் , அழகுபட அமைத்து நெய் பூசப்பெற்றுக்காவலுடன் உள்ளன ஆனால் அதியமானின் படைக்கலங்களோ பகைவரைக்குத்தி நுனி முரிந்து செப்பஞ்செய்யக்கொல்லன் உலைக்கூடத்தே கிடக்கின்றன, இதன் வழியாக அவனது வேல் கூர்மையானது என்கிறார். இதில் கூறப்பட்ட படைக்கலக்கொட்டிலும் கொல்லன் உலைக்கூடமும் ஒன்றென கருத முடிகிறது. சங்க கால நடுகற்கள் தமிழகத்தில் இதுவரை சங்க காலத்தைச் சேர்ந்த 5 நடுகற்களே கிடைத்துள்ளன அவற்றில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் தலைவர் முனைவர். கா.ராஜன் தலைமையில் இயங்கிய ஆய்வாளர்கள்,திரு.வி.பி.யதீஸ் குமார் மற்றும் திரு.சி.செல்வ குமார் ஆகியோரடங்கிய குழுவின் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட புலிமான் கோம்பை நடுகற்கள் மூன்றும் (தேனி),தமிழ்நாடு தொல்லியல் துறையால் 2006 ஆம் பதிப்பிக்கப்பட்ட ஐ.மகாதேவன் அவர்களின் தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனும் புத்தகத்தில் வெளிவந்த தாதப்பட்டி இரண்டாம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று (திண்டுக்கல்) அதற்கடுத்த படியாக தஞ்சை தமிழ் பலகலைக்கழக பேராசிரியர் முனைவர் சு.ராஜவேலு ஆய்வு மாணவர்கள் த.தங்கதுரை , சா.பாண்டியன்,ஆ.மோசஸ் குழு வினரால் அடையாளங் காணப்பட்ட பொற்பனைக் கோட்டை நடுகல்(புதுக்கோட்டை) ஒன்றும் உள்ளது.


  பொற்பனைக்கோட்டை நடுகல்

1.கோவென்கட்டிற் நெதிர –
2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்
3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு
4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்

 என்று வாசிக்கப்பட்டுள்ள பொற்பனைக்கோட்டையில் கிடைத்த நடுகல் முக்கோண வடிவத்தில் உள்ளது. இதில் 5 வரிகள் இடம்பெறுகின்றன. கோ வென்கட்டி என்பவர் காலத்தில் பொன்கொங்கர் விண்ணக்கொன் பசுக்கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” இறந்துபட்ட மைக்காக இந்த நடுகல் நட்டுவிக்கப்பட்டதை குறிப்பதாக 2013 ல் வெளிவந்துள்ள ஆவணம் இதழில் கண்டுபிடிப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொற்பனைக்கோட்டைப் இரும்பு உருக்காலைகள் - செந்நாக்குழி

செந்நாக்குழி என்று அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்புகள் சிவந்த அல்லது செம்மை என்ற நெருப்பின்நிற பண்பைக்குறிக்கும் சொல்லான “செந்” என்ற ஒற்றுடன் “நா” என்கிற நெருப்பு சுவாலையை குறிக்கும் பெயர்ச்சொல்லும் குழி எனும் இடப்பெயருடன் இணைந்து “செந்+நா+குழி = “செந்நாக்குழி” என்று அழைக்கப்பட்டு வந்திருப்பதன்மூலம் இது சங்க காலத்தை சேர்ந்த தொல் பழங்கால உருக்கு ஆலையாக இயங்கியதையும் , தமிழர்களின் பண்பாட்டு வழக்கப்படி அவ்விடத்தில் நடக்கும் தொழிலையோ , அல்லது வேறு சில காரணப்பெயர்களிலேயோ இடங்களின் பெயர்கள் வழக்கிலிருப்பதை நாம் காண முடிகிறது. இதே போன்றதொரு காரணப்பெயரோடு செந்நாக்குழி என்று அழைக்கப்பட்டு வருகிறது கிடைக்கப்பட்ட தகவல்களும் , தரவுகளும் , பெயர்களும் சங்ககாலம் தொட்டே இவ்விடத்தில் இரும்பு உருக்கு ஆலை இயங்கியதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. அருகாமையில் காணப்படும் பொற்பனைக்கோட்டையிலுள்ள குளத்திற்கு நீராவிக்குளம் என்றும், இந்த பாறை அமைப்பிற்கு மிக அருகிலுள்ள குளத்திற்கு பனி நாளம் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது, மேற்கண்ட குளத்தின் பெயர்கள் இந்தப்பகுதியின் தொன்மையை உணர்த்துகிறது மேலும் செந்நாக்குழியும் சங்க கால வழக்கில் உருக்கு உலையை இந்நாள் வரை மரபொழியாமல் இருந்திருப்பதையும் உணரமுடிகிறது.



  உலக அளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள உலோகப்பிரிப்பு அமைப்புகள் கி.மு 483 ச்சார்ந்த வெள்ளித்தாதுவை பிரிக்கும் பழங்கால தொழிற்சாலை பழங்கால கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அருகே அட்டிகா என்னுமிடத்தில் அமைந்துள்ளதை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமின்றி ஆர்மேனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால உலோகத்தாது பிரிக்கும் அமைப்பு கி.மு 300 எனக்கணிக்கப்பட்டுள்ளது பாலஸ்தீனத்தில் கி.மு 1200 எனவும் இதுவே மத்திய கிழக்கு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உலோகப்பிரிப்பு அமைப்புகளில் பழமையானதாகவும்தொல்லியலா ளர்கள் கருதுகிறார்கள்.

  தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக பிரிப்பு மற்றும் உருக்கு ஆலைகள்
 ஆச்சநல்லூர் , ஆழ்வார் திருநகரி, கொடுமணல், உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலோக உருக்கு அமைப்புகள் பெரும்பாலும் மண் மற்றும் செங்கல் கட்டுமான அமைப்புகளாகவே உள்ளன. தமிழகத்தில் செம்புராங்கற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் உருக்கு உலையாக இது உள்ளது. இதற்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருக்கு உலைகள் தனியான கட்டுமான அமைப்பிலோ அல்லது மட்பாண்ட கலன்களிலேயே இருந்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலையானது பாறையை துளையிட்டு உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் இது சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் சின்னமாக இதனை கருதலாம்.
  இரும்பு உருக்கு உலை தடயங்கள் 
திருவரங்குளம் பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரை உள்ள கோயிற்காடுகள் மற்றும் இரும்புக்கழிவுகளுடன் கூடிய மேடான சில பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகளின் மண்ணாலான உலைகள் பகுதியளவு சிதைந்த நிலையிலும் , இரும்புக்கழிவுகளை பிரித்தெடுக்க பயன்படுத்தப்பட்ட கலன்கள் பல இடங்களிலும் , இரும்பு வார்ப்புக்கு பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண்ணாலான உருக்கு குழாய்கள் உருக்குடன் உறைந்த நிலையிலும் , தனியாகவும், பகுதியளவு சிதைந்த நிலையிலும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. .
வலு சேர்க்கும் பிற்கால வரலாற்று சான்றுகள் 
புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட கே.ஆர் வெங்கட்ராம அய்யர் அவர்களால் தொகுக்கப்பட்டு 1938 ல் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் புத்தகத்தில் “13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் திருவரங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருக்குத்தொழிற்சாலைகள் இயங்கிவந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி 1813 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புள்ளிவிவரக் குறிப்பேட்டில் இரும்புத் தொழிற்சாலைகள் இயங்கிய இடங்களுக்கு பல வழித்தடங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. இதற்கு முன்னதாகப் சமஸ்தானத்தால் 1811-ல் பெறப்பட்ட பெய்லி அறிக்கையின்படி ஒரு ஆண்டிற்கு ரூபாய் 1300 மதிப்புள்ள இரும்பு உருக்கு தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதே அறிக்கையின் மூலம் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இரும்பு உருக்கும் ஆலைகள் இயங்கிவந்ததற்கான தரவுகளை அறியலாம்.

 மேற்கோள்கள் :
 1.ஆவணம் இதழ் - 24 , பக்கம் 18, சு.ராஜவேலு த.தங்கதுரை,சா.பாண்டியன்
 2. METALLURGY OF ANCIENT ARMENIA IN CULTURAL AND HISTORICAL CONTEXT ARAM GEVORGYAN, ARSEN BOBOKHYAN Dr. Hist, Institute o f Archaeology and Ethnography, National Academy of Sciences o f Republic Armenia, argev@mail. m arsenbobokhyan@yahoo. com
3. ADICHANALLUR: A PREHISTORIC MINING SITE B SASISEKARAN*, S SUNDARARAJAN*, D VENKATA RAO*, B RAGHUNATHA RAO+ , S BADRINARAYANAN++, S RAJAVEL+++

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....