Showing posts with label ambukoil. Show all posts
Showing posts with label ambukoil. Show all posts

Saturday, September 13, 2025

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டுமென்ற உத்தரவுடன் தொண்டைமான் கல்வெட்டு – கந்தர்வகோட்டை அருகே கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை எல்லையில் , புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட  சம்பட்டிப்பட்டி  சிற்றூர் எல்லையில்  கல் பலகை நட்டிருப்பதாக        குரும்பூண்டியைச்சேர்ந்த சமூக ஆர்வலர்  மூ.சேகர்   அளித்த தகவலின் பேரில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் ஆ. மணிகண்டன்  கல்வெட்டை  ஆய்வு செய்ததில் திருமலை ராய தொண்டைமான் பெயரில் ,   1758  ஆம் ஆண்டு   பிரம குளத்தில் பயிருக்கு மட்டும் நீர்ப்பாய்ச்சும்  பாசன உரிமையுடன் , பிரமன் வயல் நிலத்தை  சறுவமானியமாக  கொடுத்த தகவலடங்கிய  கல்வெட்டு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இக்கல்வெட்டு குறித்து ஆ. மணிகண்டன் கூறியதாவது ,

கந்தர்வகோட்டை எல்லையிலுள்ள கொத்தகம் அருகே, புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட,  சம்பட்டிப்பட்டி  சிற்றூர் எல்லையிலுள்ள , எல்லைக்கல் வயலில் வாமன கோட்டுருவமும் , எல்லைக்கல்லிற்கும் வட மேற்கிலுள்ள புதரில் கல்வெட்டு பலகைக்கல் நட்டுவிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டின் காலம் :

சாலிவாகன சகாப்தம் 1679  ,  கலியுகம் 4858 என்றும்,  வெகுதானிய வருடம்  ஆவணி மாதம் மூன்றாம் திகதி  என குறிப்பிடப்பட்டுள்ளது . இதற்கு இணையான பொது  ஆண்டாக 1758 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி என கணிக்கலாம் . இந்த காலக்கட்டத்தில் விசைய ராகுநாதராயத்தொண்டைமானர் ஆட்சி பொ. ஆ 1730 முதல் 1789 வரை  நிலவியது.

கல்வெட்டில் உள்ள தகவல் :

ஸ்வஸ்தி ஸ்ரீ  என்ற மங்கள சொல்லுடன்  சாலிவாகன ஆண்டு மற்றும்  கலியாண்டுடன் வெகுதானிய வருடம் ஆவணி மாதம் 3 ஆம் நாள் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகம் குறித்த தகவலாக  ராசராச வளநாடு , ராசேந்திர சோழ  வள நாடு , பன்றி சூழ் நாடு,  அன்பில் எனப்படும் அம்புக்கோவில்  தெற்கிலூரில்  காணியுடையார் மக்களில் திருமலைராய தொண்டைமானார்  அவர்களின் பஞ்ச நத்தத்திலிருக்கும்  என்ற சொற்றொடரில்  உள்ள தகவல் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் இவ்வூரில்   இருக்கின்ற  பகவாந் ராயர்   மற்றும் ராசிவராயர்  ஆகியோருக்கு,  சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையில் அமைந்துள்ள பிரமன்  வயலை சறுவ மானியமாக வழங்கிய மன்னரின் உத்தரவு   தாமிரத்தில் எழுதி சாசனமாக்கப்பட்டதையும் , வழங்கப்பட்ட நிலத்தின் நான்கு புற எல்லைகளாக  கிழக்கு  எல்லையாக கீழக் காட்டுக்கு மேற்கு எனவும் , தென் புறத்தில் புளியடிக்கு வடக்கு எனவும் , மேற்கு பாக்கெல்லையாக மொந்தைக்கு கிழக்கு எனவும்  வட பாக்கெல்லையாக கொத்தகத்து வயலுக்கு தெற்கு எனவும் வரையறுக்கப்பட்டு  இந்த பெரு நான்கெல்லைக்குட்பட்ட நஞ்சையும் , புஞ்சையும் ,  பிரம குளத்தின் நீரை பயிருக்காக மட்டும் பாய்ச்ச வேண்டும்  உத்தரவுடன், இந்த சாசனத்திற்கு இடையூறு செய்வோர் பல தோஷத்திற்கு ஆளாவர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள  கல்வெட்டுப்பகுதி  முழுமையாக வாசிக்க இயலாத நிலையில் உள்ளது . இறுதியாக  தொண்டைமான் மன்னர்  சார்பாக பழனியப்ப வாத்தியார் என்பாரின் ஒப்பத்துடன்  சறுவ மானியம் வழங்கப்பட்டதை  கல்வெட்டு  மூலம் அறிய முடிகிறது .

 

வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட  எல்லைக்கல்

தற்போது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த வாமன கோட்டுருவம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இது கல்வெட்டிலுள்ள எல்லையை குறிப்பதற்காக நடபட்டதை உறுதி செய்கிறது . இது தொண்டைமான் மன்னர்களின் தனித்துவ குறியீடாகும், தொண்டைமான் செப்பு பட்டயங்களில் வாமன கோட்டுருவம் வடிக்கப்பட்டுள்ளதை இதனுடன் ஒப்புநோக்கலாம்.

 

சறுவ மானியம் வழங்கியது யார் ?

திருமலை ராய தொண்டைமான்  (பொ. ஆ. 1729 )மறைவுக்குப்  பிறகு பொ.ஆ. 1758 ஆம்  இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.  தொண்டைமான் மன்னர்களில் 1730 ஆண்டு முடி சூட்டிக்கொண்ட விசைய ராகுநாத ராய தொண்டைமான் பொ. ஆ. 1730 ஆம் ஆண்டு தொடங்கி பொ. ஆ. 1790 வரை ஆட்சி புரிகிறார் என்பதால் இக்காலத்தில்  ,தனது தந்தையாரின் நினைவாக இந்த இந்த சறுவ மானியத்தை வழங்கியிருப்பதோடு தனது பெயரை இக்கல்வெட்டில் குறிப்பிடவில்லை என்பது நோக்கத்தக்கது  மேலும்  இந்த சறுவமானியத்தை திருமலை ராய தொண்டைமானுக்காக பழனியப்ப வாத்தியார் என்பவர் ஒப்பமிட்டு வழங்கியிருப்பது  குறிப்பிடத்தக்கது.  என்றார் .








 

தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...