மல்லங்குடி சிவன்கோவின் கல்வெட்டு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் பலகைக்கல்லில் முழுமையாகவும் தெளிவாகவும் உள்ளது.
இரண்டே கால் அடிஉயரத்துடனும் ஒன்னே கால் அடி அகலத்துடனும் சாய்ந்த நிலையில் அடிப்பகுதி மண்ணில் புதைந்து
காணப்படுகிறது. கல்வெட்டின் மேல்புறத்தில் தோரணவாயில் காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொறிக்கப்பட்டுள்ள
கல்வெட்டானது 14 வரிகளுடன் உள்ளது.
கல்வெட்டின் காலம் :
புதுக்கோட்டை
மாவட்டம் திருமயம் வட்டம் பேரையூர் கிராம ஊராட்சிக்குட் பட்ட மல்லங்குடி உமையாண்டி
ஊரணிக்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகில்
நடப்பட்டுள்ள கல்வெட்டில் காலக்குறிப்புகள் ஏதுமில்லை என்பதால் எழுத்தமைதியின்
அடிப்படையில் பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொறிக்கப்பட்டிருப்பதாக கணிக்க
முடிகிறது.
கல்வெட்டுச் செய்தி :
இதில்
“ சுபமஸ்து மலையாலங்குடியில் உடையார் ஒருபூவுகந்தருளிய
நாயனார் திருவோலக்க மண்டபம் கல்வாயி நாட்டுக் குல சேகரபுரத்துக்குக்
கழனிவாசலுடையான் திருக்கொடுங்குன்ற முடையான் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தன்மம்
சுபமஸ்து” என்று திருவோலக்க மண்டபம் அமைத்துக்கொடுக்கப்பட்ட செய்தியை பகிர்கிறது.
ஒரு பூவுகந்தருளிய நாயனார்:
ஒரு
பூவுகந்தருளிய நாயனார் என்ற பெயரால் வழங்கப்பட்ட சிவாலய கட்டுமானத்தின் பகுதிகளை
காண முடியவில்லை அதுமட்டுமின்றி வழிபாட்டிலிருந்த எவ்வித சான்றுகளும்
காணப்படவில்லை , என்றாலும் உமையாண்டி ஊரணி பிள்ளையார் என்ற சிற்பமும் , வேல்களும்
இக்கல்வெட்டு காணப்படும் இடத்தில் உள்ளது.
திருவோலக்க மண்டபம் :
திருவோலக்க மண்டபம் குறித்து கூறும் திருவாசக (திருவா.21,
6)
பாடல் வரிகள் “ஏசா
நிற்பர் என்னை உனக்கு , அடியான் என்று பிறரெல்லாம், பேசா நிற்பர் யான்தானும்,
பேணா நிற்பேன் நின்னருளே , தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோலக்கம் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய்
இனித்தான் இரங்காயே.”
என்கிறது
அதாவது திருவோலக்கம் என்ற பதம் இறைவனாரின்
திருச்சபை என்ற பொருளுடன் வழங்கப்பட்டுள்ளது. இது கொலு மண்டபம், தர்பார் என்று பரவலாக
அறியப்பட்டாலும், முற்கால வழிபாட்டு மரபில் அத்தாணியிருப்பு மற்றும்
திருவோலக்க மண்டபம் என்றே
அழைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இறைவனாரின் திருவுருவம் பக்தர்களின் வழிபாட்டிற்காக , வைக்கப்படும் மண்டபம் என்பதால் திருச்சபை
எனப்படும் திருவோலக்க மண்டபம் என்றே வழங்கப்படிருப்பதை இந்த கல்வெட்டு உறுதி
செய்கிறது. என்றாலும் இவ்விடத்தில் எவ்வித கட்டுமானங்களையும் காணமுடியவில்லை.
குலசேகரபுரம் எனும் இளையாத்தக்குடி நகரத்தார்களின்
அறப்பணி
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வணிகத்தை
பிரதானமாகக்கொண்டவர்கள், இவர்கள் வணிகத்திற்காக பல நாடுகளிலும் , பல ஊர்களிலும் தங்களது வசிப்பிடங்களை மாற்றி வசித்து
வந்தாலும் தங்களது ஊர்ப்பெயரோடு கூடிய பெருந்தெரு எனப்பெயரிட்டு அழைத்து வந்துள்ளதையும், பல இடங்களில் கோயில்
திருப்பணிகள், குளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகள் செய்துள்ளதை பல்வேறு கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
மலையாலங்குடி ஒரு பூவுகந்தருளிய நாயனார்
என்றழைக்கப்பட்ட சிவாலயத்தில் திருவோலக்க
(திருக்காட்சி) மண்டபத்தை குலசேகரபுரம் என்று அழைக்கப்பட்ட இளையாத்தக்குடி
ஊரவரான கழனிவாசலுடையான் என்ற மூதாதையர் பெயரையும்,
திருக்கொடுங்குன்ற முடையான் என்ற வசிப்பிடத்தையும் பெயரோடு தாங்கிய , அழகிய
திருச்சிற்றம்பலமுடையான் என்பார் அமைத்துக்கொடுத்திருப்பதை இக்கல்வெட்டு கூறுகிறது.
இதில் குறிப்பிடப்பட்டிருப்பவர் ஒருவரா ? அல்லது மூவரா என்ற ஒரு சிறு ஐயமும் எழுகிறது. அது என்னவெனில் குலசேகரபுரத்து கழனிவாசலுடையான் ,திருக்கொடுங்குன்றமுடையான் திருச்சிற்றம்பலமுடையான் என வருவதால் தனித்தனி பெயராக இருக்கலாம் என்று இக்கட்டுரை ஆசிரியர் கருதுகிறார். எனினும் மூத்த கல்வெட்டு அறிஞர் சு.இராஜகோபால் அவர்கள் இது ஒருவருடைய பெயரே என்றும் மேற்சொன்ன விளக்கத்தையும் கட்டுரை ஆசிரியருக்கு தந்துள்ளார்.
ஒன்பது சிவாலயங்கலும் நகரத்தாரும்
இளையாத்தக்குடி, மாத்தூர் , வைரவன்கோயில் , நேமம், இலுப்பைக்குடி, ,சூரக்குடி, வேலங்குடி , இரணியூர், பிள்ளையார்பட்டி ஆகிய
ஊர்களிலுள்ள சிவன் கோவில்களை அடிப்படையாகக்கொண்டு ஒன்பது குழுக்களாக அறியப்படும்
நகரத்தார்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று, தங்கி வணிகம் செய்தாலும், தங்களை
தங்களது ஊர் பெயர்களோடே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதை பல்வேறு சான்றுகள் மூலம்
அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வகையில் தாம் இளையாத்தக்குடியிலிருந்த
கழனிவாசல், திருக்கொடுங் குன்றம் எனும் பிரான்மலை , திருசிற்றம்பலம் ஆகிய தமது மூதாததையர்
வாழ்ந்த ஊர்பெயர்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதற்கான சான்றாக இக்கல்வெட்டு அமைகிறது.
இந்த கல்வெட்டு கண்டுபிடிப்பில் களப்பணியாற்றிய தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரெங்கன் ,உறுப்பினர் ம.மு.கண்ணன் ஆகியோருக்கு நன்றி
களப்பணியில் பங்கேற்று உதவிய மல்லாங்குடியைச்சேர்ந்த பெரியவர்கள் நடராஜன் ,சுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள்
உதயகுமார், தினேஷ்குமார், ராகுல், பிச்சைமுத்து , சந்தோஷ் குமார் ,ரூபினி, ஷாலினி ஆகியோருக்கும்
பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்
கூடுதல் செய்தி : இந்த கல்வெட்டினை முழுமையாக வாசித்துவிட்டு அதிலுள்ள குறைகளை சுட்டி உதவிட தொல்லியல் அறிஞர் முனைவர்.சு.ராஜகோபால் அய்யாவிடம் கேட்டிருந்தோம் , அப்போது திருவோலக்க, திருவேலுக்கு என்று வாசித்திருந்தேன். ஏனென்றால் துணை எழுத்து முழுமையாக இல்லை , அத்துடன் கோயிலில் இரும்பாலான வேல் கம்புகளும் அதிகமாக நடபட்டிருந்தது. மண்டபத்தின் அறிகுறிகளும் இல்லை என்பதால் இந்த வேல்களுக்கு ஒரு மண்டபம் அமைத்துக்கொடுத்திருக்க இயலுமோ என்று நினைத்திருந்த நிலையில் , துணை எழுத்து மறைந்திருக்கலாம் என்பதைக்கூறி தனது அனுபவ அறிவை எனக்கு தந்து உதவினார்கள். அய்யாவிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி
எங்கள் தலைவர் அய்யா கரு.ராஜேந்திரன் அவர்களின் நகரத்தார் வரலாறு குறித்த தொடர் அனுபவப்பகிர்வும் இதற்கு பயனாக அமைந்தது.
கண்டுபிடிப்பு செய்தி பகிர்வு
ஆ.மணிகண்டன்
ஆய்வாளர் - தொல்லறிவியல் துறை
நிறுவனர் - தொல்லியல் ஆய்வுக்கழகம்
புதுக்கோட்டை
kindly note the photograph from file