புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மருதம்பட்டி
ஊராட்சி எல்லைக்குட்பட்ட ஆதனப்பட்டி வயல்வெளியில் கல்வெட்டு காணப்படுவதாக
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர் கீரனூர் பா.முருகபிரசாத் அளித்த
தகவலைத்தொடர்ந்து, புதுக்கோட்டை தொல்லியல்
ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் மேற்கொண்ட
கள ஆய்வில் பதிமூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய நான்முக சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து புதுக்கோட்டை
தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை
ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,
தேவதானம் வழங்கப்பட்ட
நிலங்களை அடையாளப்படுத்துவதற்காக வைணவத்திற்கு சங்கு, சக்கரம் பொறித்த திருவாழிக்கல்லும், சமணப்பள்ளிக்கு முக்குடைக்கல்லும், புத்த சமயத்தை குறிக்க தர்மசக்கரமும், சைவக்கோயிலுக்குரிய நிலங்களில் திரிசூலக்கற்களும் நடப்படுவது வழக்கம், கொடை வழங்கப்படும் நிலங்களுக்கு வரிநீக்கப்பட்ட இறையிலி தேவதானமாக நிலங்கள்
வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் வருவாய் கோவிலின் தினசரி வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆதனப்பட்டி சூலக்கல் :
வயல்வெளியில்
சாய்ந்த நிலையில் நான்கு பக்கங்களிலும்
சூலக்குறிகளுடன் உள்ளது. ஒரு பக்கத்தில் சூலக்குறியுடன் காளையின் வரைகோட்டுருவம்
காட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு
பதிமூன்றாம் நூற்றாண்டில் திருநாமத்துக்காணியாக நிலதானம் வழங்கப்பட்டதை குறிக்கிறது.
கல்வெட்டு கூறும் செய்தி :
கல்வெட்டு மூன்று பக்கங்களில் 23 வரிகளில்
பொறிக்கப்பட்டிருந்தாலும் இரண்டாம், மூன்றாம் பக்கத்தில் வரிகளில் சிதைந்து காணப்படுகிறது. இக்கல்வெட்டு "ஸ்வஸ்தி ஶ்ரீ கீழைக்குறிச்சி உடையார் அழகிய சோமீசுரமுடைய நாயனார்க்கு என்னி வயப்புறங்களில், ஆதனூரங்குளமும் வயலும், பெருநான்கெல்லைக்கு உட்பட்ட புஞ்சையும் மற்றும்
எப்பேர்ப்பட்டனவு திருநாமத்துக் காணியாக்குடுத்தேன் (செயந்தஞ்ஞாலை) சோளக் (க)டம்பார்வீரன்
எழுத்(து)" என பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு விளக்கம்:
ஆதனூர் குளமும், வயலும் அதிலிருக்கும்
மரம், பயிர் வகைகள், கிணறு, கட்டுமானம் உட்பட எப்பேர்ப்பட்டனவும், அது கீழக்குறிச்சி அழகிய சோமீசுரமுடைய
நாயனார் சிவன் கோவிலுக்கு சொந்தமானதாக்கி இறைவனின் பெயரால் திருநாமத்துக் காணியாக சோளக்கடம்பார்வீரன் என்பாரால்
வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு மூலம் அறிய
முடிகிறது.
மாறாத பெயர்கள்:
கல்வெட்டிலுள்ள
நிலவியல் பகுதியிலேயே இந்த வயல்
திருநாமத்துக்காணியாக கொடுக்கப்பட்டுள்ளது
என்பதை உறுதிப்படுத்த முடிகிறது, அதுமட்டுமின்றி 700 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதனூரங்குளம் மற்றும் ஆதனவயல் என்ற பெயர் மாறாமல் அதே
பெயருடன் இன்றளவும் வழக்கத்தில்
இருப்பது பண்பாட்டு தொடர்ச்சியை
காட்டுகிறது. என்றார்
இந்தக்கள ஆய்வின் போது புதுக்கோட்டை தொல்லியல்
ஆய்வுக்கழகத்தின் உறுப்பினர் பா.முருகபிரசாத் ,மருதம்பட்டி ஊராட்சி ஆதனப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த மேனாள்
ஊராட்சி மன்றத் தலைவர் கே.நாகராஜன்,தொல்லியல் ஆர்வலர் சாகுல்ஹமீது மற்றும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முருகேசன், பெருமாள்,ரவி, சிங்காரம் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.