Thursday, December 14, 2017

சோழர்கள் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் உரிமை இருந்ததை வெளிப்படுத்தும் – ஆசிரியம் கல்வெட்டு கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் , அன்னவாசல் அருகே,  சிறுசுனை கிராமத்தில் பதிமூன்றாம்  நூற்றாண்டில் உள்ளூர்  நிர்வாகத்திடம்  வரி வசூலிக்கும் உரிமை இருந்ததை வெளிப்படுத்தும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சிறுசுனை கிராமத்திலுள்ள சிதிலமடைந்த கோயிலில் கள ஆய்வு செய்ய வேண்டுமென எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்புமன்ற ஒருங்கிணைப்பாளரும், தொல்லியல் ஆய்வுக்கழக மரபுநடை ஒருங்கிணைப்பாளருமான கஸ்தூரிரங்கன் மற்றும் பள்ளியின் மன்ற மாணவர்கள் அயன்ராஜ் , ஐஸ்வர்யா, நிகல்யா அளித்த தகவலையடுத்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகதலைவர்  கரு.ராசேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வின் மூலம் புதிய வரலாற்று செய்தியை வெளிப்படுத்தியுள்ளோம்.

சிதைந்து போன சிறுசுனையூர்  ஆரண்ய விடங்கர் சிவன் கோவில்
கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ள இடத்தில்  13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன்கோவில்  சிதைந்த நிலையில்  கிடக்கிறது எனினும் இவ்விடத்தில் சிவன் கோவில் இருந்ததை உறுதி படுத்தும் விதமாக சிறுசுனையூர்  குளத்தின்  அருகே,    கி.பி 1243 ஆம் ஆண்டில்  விளக்கு எரிக்க பெரியபிள்ளை மருந்தாழ்வான் என்பவர் பக்கல் கொண்ட இருநூறு காசு கொடுத்த கல்வெட்டும், கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையின்  நாற்கல நெல் வழங்கிய செய்தியடங்கிய  கல்வெட்டும் கரு.ராஜேந்திரன் குழுவினரால் ஏற்கனவே கண்டுபிடித்து வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடத்தில்  சதுர ஆவுடை, பகுதியளவு சிதைந்த நந்தி, மயில்வாகனத்துடன் கூடிய முருகன் சிலை  உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.  
இவை  கிராம மக்களால் பாதுகாப்பாக  வைக்கப்பட்டுள்ளது. அதே சிதைவுகளிடையேதான்   இந்த புரவரி கல்வெட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உள்ளூர் நிர்வாகத்திடம் இருந்த புரவரி உரிமை
அரசிறை எனப்படும் காணிக்கடன் நீக்கப்பட்ட ஊர்களில் அவ்வூரின் நன்செய் புன்செய் முதலிய நிலங்களின் விளைச்சல் வருவாய்க்கு ஏற்றவாறு உள்ளூர் நிர்வாகத்தணிக்கையின் அடிப்படையில், வசூலிக்கப்படும் வரியே  “புரவரி”யாக பெறப்பட்டுள்ளது. இதனை வசூலிக்கும் அதிகாரமும் தணிக்கை செய்யும் அதிகாரமும் பெற்ற அதிகாரி சீகரணத்தார் என அழைக்கப்பட்டுள்ளனர்.
சோழர் ஆட்சியில் இவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பிரகடனப்படுத்தி , ஊர் குடிமக்களின்  நிர்வாகத்தலைமை  இடமாக விளங்கிய கோயிலில்  இந்த ஆசிரியம் கல்வெட்டு நடப்பட்டுள்ளது.
கல்வெட்டுச் செய்தி
மங்கல வரியுடன் சிறுசுனையூரான விருதராஜ பயங்கர  சதுர்வேதி மங்கலம் புரவரி  சிகரணத்தார்  ஆசிரியம்என்பதாகும் , இக்கல்வெட்டிலுள்ள செய்தியின்  மூலம் சிறுசுனையூர் என்ற இவ்வூர் விருதராஜ பயங்கரன்  என்ற பெயருடன் விளங்கிய முதலாம்  குலோத்துங்கனின் பெயரால்  அழைக்கப்பட்டிருப்பதும், விருத ராஜ பயங்கர சதுர்வேதி மங்கலம் என்ற பெயருடன்  சிறு ஊர்களின் தலைமை இடமாக விளங்கியிருப்பதும்,  இவ்வூரின்  “புரவரியை”  “சிகரணத்தார்”  என்று அக்காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த  கிராம நிர்வாக அதிகாரியே   வசூலித்து கொள்ள   உரிமை  வழங்கியிருப்பதை ஊர்  குடிமக்களுக்கு அறிவிக்கவே  இந்த ஆசிரியம் கல்வெட்டு  நடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின்மூலம் மூலம் சோழர்கால  மன்னராட்சி நிர்வாகத்திலேயே  வரி வசூலிக்கும் உரிமையை உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்கி அந்தந்த கிராமங்களின் உள்ளூர்த்தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் ஜனநாயக நடைமுறை இருந்திருப்பது நமக்கு வியப்பளிக்கும் தகவலாக உள்ளது.







 


1 comment:

  1. கண்டுபிடிப்புகள், உங்களுக்கும் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வரலாற்றுத்தேடலில் உங்களது சாதனைகள் தொடரட்டும்.

    ReplyDelete

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....