Sunday, August 23, 2020

மங்களாகோவில் கிராமத்தில் அக்னி ஆற்றுக்கு வடபுறமுள்ள விவசாய நிலத்தில் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு .

 

மங்களாகோவில் மகாவீரர் சிற்பம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டம் ,  மங்களாகோவில் கிராமத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பிள்ளையார் குள கரைக்கு அருகேயுள்ள விவசாய நிலத்தில் சமண சிற்பம் கண்டுபிக்கப்பட்டுள்ளது.  இச்சிற்பம் அவ்வூர் மக்களால் அய்யனார், காளி என்று பலவாறாக அழைக்கப்பட்டு வந்துள்ளது. இச்சிற்பம் குறித்து ஆய்வு செய்ய உள்ளூர் தொழிற்சங்க நிர்வாகி உ. அரசப்பன் அளித்த தகவலைத்தொடர்ந்து நமது கள ஆய்வில் கீழ்க்கண்ட தகவலை வெளிப்படுத்தியுள்ளோம்.

சமணர் சிற்பம் ஒன்றரை அடி அகலத்துடனும், மூன்றரை அடி உயரத்துடனும் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது   தீர்த்தங்கரரான  மகாவீரர் திகம்பரராக, தியான கோலத்துடன்,  நீண்ட துளையுடைய காதுகள், தலைப்பகுதி முகம் தெளிவற்று  தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.  விரிந்த மார்புடன் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தில் ஒருசில இடங்களில் சிதைவுற்றுள்ளது .

 தலையின்  பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையம் தெளிவற்று சிதைந்தும்,  மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம் , சகல பாசானம் எனும்   முக்குடை சிதைந்துள்ளதால் தெளிவற்று இரண்டு குடைபோல தோற்றமளிக்கிறது, பின்புலத்தில்  குங்கிலிய மரமும்  சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது,  இதன் உருவமைப்பு ஒப்பீட்டின்படி பதினொன்றாம்  நூற்றாண்டைச்சேர்ந்த சிற்பமாக கருதலாம்.  

அக்னி ஆறும் சமணமும்

அக்கினி ஆறு புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரிய குளத்தில்  தொடங்கி கந்தர்வகோட்டை ஆத்தங்கரைவிடுதி ,  கறம்பக்குடி, திருமணஞ்சேரி வரையிலும் அதன் தொடர்ச்சியாக  தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கொள்ளுக்காடு மற்றும் கீழத்தோட்டம் வழியாக 78 கிலோ மீட்டர் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது ,

அக்கினி ஆறானது மிகப்பழமையானதாகும், இது  அஞ்ஞான விமோச்சனி என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருப்பதும், ஆற்றின் பெயரும் சமணக்கொள்கையோடு  தொடர்புடன் இருப்பதையும், சமண சமயம் செழித்திருந்த ஆற்றுப்படுகையாக இருந்திருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.  

மேலும் இக்கருத்தை உறுதி செய்யும் வகையில் கந்தர்வகோட்டை கீழ வாண்டான் விடுதி சிவனார் திடல் என்ற சமணர் திடலில் செங்கல் கட்டுமானத்தால் உருவாக்கப்பட்ட சமணப்பள்ளியும் கையடக்க சமணர் சிற்பமும் , நான்கரை அடி உயரமுடைய சமணர் சிற்பமும் அடையாளப்படுத்தினோம், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மங்களாகோவில் சமணர் சிற்பமும் அவ்விடத்திற்கு மிக அருகில் உள்ளது. அதுமட்டுமின்றி  அக்கினி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள வாழமங்கலம் , மங்கத்தேவன் பட்டி , மோசகுடி , கோவில் வீரக்குடி , செம்பாட்டூர், புத்தாம்பூர், வைத்துக்கோவில், பெருங்களூர்  உள்ளிட்ட ஊர்களில் சமணத்தீர்த்தங்கரர் சிற்பங்கள் சமணப்பள்ளிகள் அடையாளங்காணப்பட்டிருப்பதும் வலுசேர்க்கும் சான்றுகளாக உள்ளது. 

இந்த களப்பணியின் போது வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ராஜேஷ், தி.மாதரசு, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி  க.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

தற்போது மகாவீரர் சிற்பம் கந்தர்வகோட்டை வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு கந்தர்வகோட்டை கருவூலத்தில் ஒப்படைக்கப்படுள்ளது.




 

 

 

 

2 comments:

  1. வரலாற்றுப் பக்கங்களில் புதிய செய்திகளைக் கொண்டு நிரப்பிக்கொண்டு இருக்கின்றீர்கள். மாணவர்களையும் நீங்கள் அழைத்துச்செல்லும் முறை பாராட்டத்தக்கது. மென்மேலும் வளர வாழ்த்துகள்.

    ReplyDelete

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....