Sunday, September 5, 2021

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள கண்ணனூரில் உள்ள ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் அரசுக்குக் கோரிக்கை


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் உள்ள அரசு வனப்பகுதியில், புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழித்தடத்தில் பனையப்பட்டியிலிருந்து ராங்கியம் சாலையில் சுமார் நான்கு  கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள கண்ணனூர் வனப்பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்குவியல், குத்துக்கல் ஆகியன  உள்ளன. இந்த கற்கால பண்பாட்டு சின்னங்கள் கற்பாறைகளைக் கொண்டு வட்ட வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அதன் மையத்தில் நெடுங்கற்கள் செங்குத்தாக நட்டு வைக்கப் பட்டுள்ளன. அவை மிகச் சமீப காலங்களில் வனத்துறையினரால் இயந்திர வண்டிகளைக் கொண்டு யூகாலிப்டஸ் மரக்கன்றுகளை நடுவதற்காக அழிக்கப் பட்டுள்ளதை அறிந்து அவ்விடத்தை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் மேலப்பனையூர் கரு.இராஜேந்திரன் ,  மங்கனூர் ஆ.மணிகண்டன் , உறுப்பினர்கள் ம.மு.கண்ணன் , மஸ்தான் பகுருதீன் ஆகியோர் உறுதிசெய்தனர்.
இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கரு.இராசேந்திரன் கூறுகையில் மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிறது. நமது முன்னோர்கள் பெருங்கற்காலத்திலிருந்து வரலாறுகளை பாறை ஓவியங்கள் , பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், தாழிகள் என பல்வேறு வகையில் பதிவு செய்து வந்திருக்கிறார்கள். அந்தவகையில்  கண்ணனூரில் உள்ளவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெடுங்கல் , கற்குவியல் வகையை சேர்ந்த நீத்தார் புதையிடமாக உள்ளது. இதன் காலம்  சுமார் ஏழாயிரம் ஆண்டுகள் வரை காலக்கணிப்பை கொண்ட வரலாற்று சின்னமாகும்.
இங்கு வாழ்ந்து வந்த மக்கள் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைக்கும்போது புதைத்து விட்டு அதன் மேல் வட்ட வடிவத்தில் கற்குவியலை  அமைத்து அதன் மையத்தில் மென்கிர் எனப்படும் குத்துக்கல் அல்லது நெடுங்கல் நட்டு வைத்திருக்கிறார்கள் இது சுமார் பத்து அடி உயரத்துடன் உள்ளது. இவ்வாறு அமைப்பது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டதாகும். இந்தப் பண்பாடும் பழக்கமும் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளில் இருந்து கிறிஸ்து பிறப்பதற்கு முன் 500-ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்திருக்கிறது. அதற்குப் பிறகுதான் சங்ககாலம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
  வருங்காலச் சந்ததியினருக்கு பழங்கால வரலாற்றை சொல்லக் கூடிய இந்தச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். இதன் முக்கியத்துவம்  தெரியாமல் வனத்துறையினர் தைலமரக் கன்றுகளை வளர்ப்பதற்காக இயந்திர வண்டிகளைக் கொண்டு இந்த வரலாற்றுச் சின்னங்களை அழித்திருக்கிறார்கள். இந்தப் பகுதிக்குள் டிராக்டர்களைக் கொண்டு உழுவதே தவறு. ஆனால் ஜேசிபி போன்ற இயந்திரங்களைக் கொண்டு பெருங்கற்காலப் பண்பாட்டு நினைவுச் சின்னங்களை உடைத்தும் கற்களைப் பிடுங்கிப் போட்டும் அழித்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிக நெடுங்கற்கள் கொண்ட இதைப் போன்றதொரு பெருங்கற்கால வரலாற்றுச் சின்னம் வேறெங்கும் இல்லை. சென்னை  மன்னர்கள் காலத்தில் பல இடங்கள் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பகுதிகள் அறிவிக்கப் படாமல் விடுபட்டுள்ளது. இதனைப் பாதுகாக்காமல் விட்டால் வருங்காலச் சந்ததியினர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இயலாமல்  போய் விடும். இத்தகைய நினைவுச் சின்னங்கள் மேலும் வனத்துறையினரால் அழிக்கப்படாமல் இருக்கும் வகையில் வனத்துறையினரிடமிருந்து திரும்பப் பெற்று பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை முள்வேலி அமைத்து  இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப் பட்ட பகுதியாக உடனடியாக அறிவித்து இருக்கும் சின்னங்களை சிதையாமல் பாதுகாக்கப் படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். என்றார்.
மேலும் தொல்லறிவியல் ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகமான பாதுகாக்கப்பட்ட தொல்லிடங்களையும் மரபு சின்னங்களையும்  கொண்ட மாவட்டமாகும் ,சென்னை தொல்லியல் வட்டத்தின் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையில் இம்மவட்டத்திலேயே அமைந்துள்ளது. மேலும் கண்ணனூர் போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளும் ஏராளமாக உள்ளன.  எனவேதான் இந்திய அரசின் தொல்லியல் துறை புதுக்கோட்டையை மையமாக வைத்து புதிய தொல்லியல் வட்டத்தை உருவாக்க நடவடிக்கை வேண்டும் என கோரி வருகிறோம் என்றார்.


தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை தொல்லியல் சின்னமாக அறிவித்த தமிழ்நாடு அரசிற்கு நன்றி

     
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது பூலாங்குறிச்சி. இங்குள்ள குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979-ல் ஆய்வாளரான மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். இயற்கையிலேயே உரிந்து சிதையும் தன்மை கொண்ட பாறையில் அதைச் செதுக்கி சமப்படுத்தாமலே கல்வெட்டை  பொறித்துள்ளார்கள். இதனால் மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வந்த நிலையில் கல்வெட்டைக் கண்டுபிடித்த கல்வெட்டு ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தின் நிறுவனர் மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்நாளைய திருச்சுழி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும் தற்போதைய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு  அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம் , தற்போது புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முதல் கூட்டத்தொடரிலேயே பாதுக்கக்கப்பட்ட சின்னமாக அறிவித்திருப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.


கல்வெட்டின் சிறப்பு     

   

தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறி வரும் இக்கல்வெட்டில் சில எழுத்துகள் தமிழியாகவும், சில எழுத்துகள் வட்டெழுத்தாகவும் உள்ளன. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு. இதிலுள்ள ஒரு கல்வெட்டு சேந்தன் கூற்றன் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வேள் மருகண் மகனும் கடலகப் பெரும் படைத்தலைவன் என்ற பட்டத்தைப் பெற்றவனுமான எங்குமான் என்பவன், பச்செறிச்சில் மலை (பூலாங்குறிச்சி), திருவாடானை அருகே விளமர் ஆகிய ஊர்களில் தேவகுலத்தையும், மதுரை உலவியத்தான் குளம் அருகே தாபதப்பள்ளியைச் சேர்ந்த வாசிதேவனார் கோட்டத்தையும் அமைத்ததாகக் கூறுகிறது. இவற்றிற்கு வேண்டியதைச் செய்வதாக அத்திகோயத்தார், உள்மனையார், நான்கு வகைத் திணைகள் ஆகிய மூன்று பிரிவினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மன்னர்களால் பிராமணர்களுக்கு வழங்கப்படும் நிலதானம், ஊர் ஆகியவற்றை பிரம்மதாயம், மங்கலம் ஆகிய சொற்களால் குறிப்பர். இச்சொற்கள் காணப்படும் மிகப்பழமையான கல்வெட்டு இங்குதான் உள்ளது. கல்வெட்டில் வரும் மன்னர்கள் களப்பிரர் மன்னர்களாக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை 6 வரிக்கும் குறைவான சிறிய கல்வெட்டுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு 22
வரிகள் கொண்ட பெரிய கல்வெட்டு காணப்படுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. இது வட இந்திய மன்னன் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்கு இணையான சிறப்புக்கொண்டது.


           தற்போது தமிழ்நாடு தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்திருப்பதற்கு ஒட்டு மொத்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வலர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் .

 

நன்றியுடன்

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம்

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணி ஒப்பந்தத்தை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி (செவ்வலூர் கிராமம்)மேலப்பனையூர் தேவர்மலை ஆகிய ஊர்களில் தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராஜேந்திரன் நிறுவனர் ஆ.மணிகண்டன் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி ரெங்கன் , மணிசேகரன்,  பீர்முகமதுசை.மஸ்தான்பகுருதீன்மு.முத்துக்குமார்,  பா.ரமேஷ்குமார், ஆறுமுகம்  ஆகியோரால்  மூன்று ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகள் குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது ,

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலையான ஒருங்கிணைந்த ஆட்சிமுறை மறையத்தொடங்கிய சூழலில் அதிக நிலம் படைத்தவர்கள் குறுநில மன்னர்களாக செயற்பட்டு வந்துள்ளனர். தமது நிர்வாகத்திற்குட்பட்ட மக்களுக்கும்அவர்களின் உடைமைகளுக்கும்வெளியூரிலிருந்து வணிகம் செய்யும் வணிகர் மற்றும் வணிகப்பொருட்களுக்கும் உரிய பாதுகாவல் பணியை செய்ய வேண்டியிருந்ததன் பொருட்டு நம்பிக்கை மிகுந்தவர்களை அப்பணியில் நியமித்து வந்துள்ளனர். அது பற்றிய அறிவிப்பை வெளிப்படுத்தும் ஆசிரியம் கல்வெட்டுகள் தேவர்மலைபனையூர் மலையடிப்பட்டி ஆகிய ஊர்களில் எமது குழுவினரால் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

ஆசிரியம் கல்வெட்டுகள் :

 ஆசிரியம் கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வாளர்கள் அஞ்சினான் புகலிடம் வழங்கியதை குறிப்பாதாகவே கருதி வருகின்றனர். பாதுகாப்பு வழங்குதல் என்ற பொருளுடன் தொடர்பு படுத்தி ஆஸ்ரயம் என்ற என்ற சமற்கிருத வேர்ச்சொல்லிலுருந்து பெறப்பட்ட சொல்லாடலாகவே பார்க்கப்பட்டு வருகிறது.


 

இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 67  கல்வெட்டுகளில் ஆசிரியம் ஆசுரியம்அஸ்ரீயம்ஆஸ்ரயம் ஆச்ரயம் என பல்வேறு சொல்லாடல்கள் இருந்தாலும் எமது ஆய்வில் பட்டியலிடப்பட்ட கல்வெட்டுகளில் 53 கல்வெட்டுகளில் ஆசிரியம் என்ற சொல்லாடலும், 8 கல்வெட்டுகளில் ஆஸ்ரீயம் என்றும், 3 கல்வெட்டுகளில் ஆசுரியம் என்றும் உள்ளது.  கல்வெட்டுகளில் மட்டுமே ஆஸ்ரயம் மற்றும் ஆச்ரயம் என்ற சொல்லாடல் கையாளப்பட்டுள்ளது.


     

எனவே இதனை சமற்கிருத சொல் என்ற கருத்து  பொருந்தாது என்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நிறுவுகின்றன. ஆசிரியம் என்ற தமிழ்ச்சொல் சங்கப்பாடல்களிலும் காணப்படுகின்றன. ஆசிரியப்பா என்பது  ஒரு கருத்தை சுருங்கச்சொல்லுதல் என்ற பொருள்படும்படி பாவகை என வரையறுக்கப்படுகிறது.. தமிழ் இலக்கிய அகராதிகள்  ஆசிரியர் என்பதை  ஆசு + இரியர்  அதாவது   பிழைகளை நீக்குபவர் அல்லது குற்றம் களைபவர் என்று பொருளை சுட்டுகின்றன.

 

இதே அடிப்படையில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள ஆசிரியம் என்பதையும் பொருத்தி பார்க்கும்போது திருட்டுகொள்ளை  நடைபெறாமல் காத்து, பொதுப்பொருட்களுக்கு அரணாக இருத்தல் என்று எச்செயலிலும் வாக்கு தவறாமை, தவறு நடைபெறாமல் காக்கும் பொறுப்புடையவருக்கான உடன்படிக்கையேற்பு  என்று பொருள் கொள்ளலாம்.

 

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆசிரியம் கல்வெட்டுகள்:

 

   மேலப்பனையூர் கிராமத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கல்வெட்டு தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில்  ஸ்வஸ்தி  ஸ்ரீ மது இராயப்பர் மகந் குமாரந் பாகுய நாயக்கர்க்குப்பனையூர் குளமங்கலம் ஆசிரியம் ராயப்பர் என்பாரின் மகன் பாகுய நாயக்கர் என்பார் பனையூர் குலமங்கலத்ததை நிர்வகிக்கும் உரிமை பெற்றதை அறிவிக்கிறது இக்கல்வெட்டின் எழுத்தமைதியின் அடிப்படையில் பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்ததாக கணிக்க முடிகிறது. இன்றளவும் பனையூர் கிராமத்தில் ஆசிரியம் குடும்பம் என்று குடும்பத்தினரை அழைக்கும் வழக்கம் இருப்பதை கள ஆய்வில் அறிந்துகொண்டோம்.

 

பொன்னமராவதி வட்டம், செவலூர் சேகரம் மலையடிப்பட்டி கிராமத்தின் குடியிருப்புகளுக்கு வட புறம் தனியார் தரிசு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியவில்லை என்றாலும் கடைசிப்பகுதியில் பொன்னமராபதிநாட்டு வடபற்றுச் செவ்வலூர் ஏவவிருத்தரையர்கள் ஆசுரியம்அதாவது பொன்னமராவதி நாட்டின் வடப்பற்றான செவ்வலூர் ஏவ்விருத்தரையர்கள் எனும் குழுவினர் கல்வெட்டு நட்டுவிக்கப்பட்டுள்ள பகுதியை பாதுகாக்கும் பொறுப்பை பெற்றிருந்ததை அறிவிக்கிறது. கல்வெட்டு கி.பி 16 நூற்றாண்டைச்சேர்ந்ததாக  கணிக்க முடிகிறது.

   

திருமயம் வட்டம் மல்லாங்குடி ஊராட்சிக்குட்பட்ட தேவர் மலை வடபுறம் உள்ள வயல்வெளியில் கடந்த 2016 ஆண்டு கரு.ராஜேந்திரன் அவர்களால் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டில்   ஸ்வஸ்தி ஸ்ரீதேவமலையில் நாயக்கர் நம்பி அகமறமாணிக்கர் ஆசிரியம்என்ற தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

     , தேவர்மலையின் இறையான நாயக்கர் நம்பிகளுக்கான கோவில்  நிர்வாக உரிமையை அகமறமாணிக்கர் என்பார் பெற்றிருந்ததை குறிக்கும் வகையில் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் பொ.ஆ பதிமூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்தாக கணிக்க முடிகிறது.  என்றார்.


 

புதிய கல்வெட்டின் முக்கியத்துவம் குறித்து கரு.ராசேந்திரன் கூறியதாவது,        

     குடிமக்கள்  விவசாய விளை பொருட்கள் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கான பாதுகாப்பு ,  வணிக பொருட்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பு வழங்குபவர் பற்றிய அறிவிப்பு  , நீர்நிலைகளை ஒப்படைத்தையும்குளம்நீர் வரத்து வாய்க்கால்கள்கலிங்குகளை சீர் செய்தவருக்கும்நாட்டவர்களிடையே அமைதியை நிலை நாட்டியமைக்காகவும் மரியாதை செய்யும் பொருட்டும் ஊரணியை ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு விட்டுக்கொடுக்கவும்புரவரி வசூலித்தல் வணிகக்குழுக்களின் முகாம்களாக இருந்த இடங்களை அஞ்சினான் புகலிடமாக அறிவித்தல்தேவதான நிலங்களை காக்கும் பொறுப்புகோவிலுக்கு நெல் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்கான அறிவிப்புகுளத்தை பணி செய்து கொடுத்தவர் இன்னார் என்பதற்கான அறிவிப்புகோவிலுக்கு நிலக்கொடை வழங்கிய அறிவிப்பு  என ஒரு குறிப்பிட்ட நபரிடமோ அல்லது ஊரார்களிடமோ உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியம் கல்வெட்டுகள் ஊரின் மையத்திலோ அல்லது மக்கள் எளிதில் அணுகும் இடத்திலோ வைக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. மேற்சொன்ன கருத்துக்களை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூன்றும் ஊரையோ கோவிலையோ  நிர்வகிக்கும் பொறுப்பு வகிப்பவரை அறிவிக்கும் பொருட்டு நடப்பட்டுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.

 

 

 

 

 

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீர் பாசன பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த பொற்கொல்லர் புதுக்கோட்டை மேலூர் கண்மாயில் கல்வெட்டு கண்டுபிடிப்பு



         புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்கா சத்தியமங்கலம் அருகேயுள்ள மேலூர் பாசன கண்மாயில் குமிழிக்காலில் எழுத்துப் பொறிப்பு இருப்பதாக கீரனூர் சேர்ந்த வேளாண் பொறியாளர் என்.நாராயணமூர்த்தி கொடுத்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கல்வெட்டை படியெடுத்து வாசித்துள்ளார். இதில் தட்டான் திறமன் என்பவர் நீர்ப்பாசனக்கண்மாய்க்கு பெருமடைக்கால் அமைத்துக்கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கல்வெட்டு ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

 தமிழகத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக்குளங்கள், கண்மாய்கள்,ஏரிகள் உள்ளன. அவற்றில் சுமார் 250 குமிழிக்கல்வெட்டுகளே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

              பல்வேறு மாவட்டங்களில் நீர்ப்பாசன அமைப்புகள் பற்றிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதிகமான குமிழிக்கல்வெட்டுகள் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்,திருச்சிராப்பள்ளி பகுதிகளைச் சேர்ந்தவையாக உள்ளன.

 குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 42 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலனவை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராசேந்திரன் அவர்களால் கண்டுபிடித்து பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

        இத்தகைய கல்வெட்டுகள் பழங்கால பாசனமுறையில் தமிழர்கள் கொண்டிருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப்பங்கீட்டில் பின்பற்றப்பட்ட சமூக நடைமுறைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன.

 

குமிழிக்கல்வெட்டுகள்

 புதுக்கோட்டையின் கவிநாடு கண்மாயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோமாறன் சடையன் என்கிற முதலாம் வரகுணபாண்டியன் என்பவரால் அமைக்கப்பட்ட குமிழி கல்வெட்டு காணப்படுகிறது.

 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் நொடியூரில் உள்ள கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த முதலாம் ஆதித்தன் சோழன் ஆட்சிக்காலத்தில் மங்கல நல்லூர் என்றழைக்கப்பட்ட தற்போதைய மங்கனூரைச்சேர்ந்த இரணசிங்க முத்தரையன் என்பவர் மருதனேரிக்கு குமிழி அமைத்துகொடுத்த கல்வெட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளோம்.

 கம்மாளர்களின் சிறப்பு

பழங்கால அறிவியல் , எண்கணிதம், வானியல் நகர்வுகள் அடிப்படையில் நன்கு தேர்ந்த கட்டுமான அறிவை பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர். செப்பு , இரும்பு , தங்கம், மரம் , கல் என ஐந்து தொழில்நுட்பத்திலும் திறம்பட இயங்கிய கன்னார் , கொல்லர், தட்டார், தச்சர், கற்தச்சர் என  ஐந்தொழிலை அடிப்படையாக கொண்டவர்களாக சங்க. இலக்கியங்களிலும் பழங்கால சான்றுகள் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது.

பழங்கால உலோக அறிவியலில் கோலோச்சிய கம்மாளர் இனத்தவருள் ஒரு பிரிவினரான. பொற்கொல்லர்கள் கல்வெட்டுகளில் தட்டான் என்று அழைக்கப்படுகின்றனர்.

 திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குண்டூர் பெருங்குளத்தில் முதலாம் ஆதித்த சோழன் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குண்டூர் பெருந்தட்டான் மாறன் குவாவன் என்பவர் குமிழி அமைத்துக் கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

 தட்டான் என அழைக்கப்படுவோர் சோழர் காலத்தில் பொன்னிலும் வெள்ளியிலும் மணிகளை இழைத்து உருவாக்கிய நுண்கலைஞர்கள் ஆவர். மன்னர் குடும்பத்திற்கான தட்டார்கள் பெருந்தட்டான் என அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு சான்றாக திருவையாற்றில் உள்ள முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டு உலகமகாதேவி ஈசுவரம் கோயில் பணிக்கெனச் சக்கடி சமுதையனான செம்பியன் மாதேவிப் பெருந்தட்டான் அதாவது செம்பியன் மாதேவியருக்கான ஆபரணங்கள் செய்வதை தனிப்பணியாகக் கொண்டவருக்கு தட்டாரக்காணி வழங்கப்பட்டதையும். திரிபுவனியில் உள்ள முதலாம் இராசாதிராசனின் கல்வெட்டு தட்டாரக் காணியாக இரண்டு வேலி நிலத்தினை அரங்கன் கோமாரனான இராசராசப் பெருந்தட்டான் என்பவருக்கு வழங்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது.

 

மேலும் தட்டார்களுக்கென தட்டிறை, தட்டோலை, தட்டார் பாட்டம் உள்ளிட்ட வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. உருக்குலைகளுக்கு வரி விதிப்பு செய்த தகவலை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில் கல்வெட்டு  தெரிவிக்கிறது.

 மேலூர் பெருமடைக்கால் புதிய கல்வெட்டு

 புதுக்கோட்டை மாவட்டம் மேலூர் மேலி(ழி)க்கண்மாயின் பெரிய குழுமிக்கருப்பர் கொம்படி ஆலயத்தின் அருகேயுள்ள குமிழிக்கால் கல்வெட்டில், "ஸ்வஸ்தி ஶ்ரீ சிறுவாயி ஞாட்டு மேலூர்த்தட்டான் திறமன் திருவிளப்படிக்கு நட்டுவித்த பெருமடைக்கால்" அதாவது

சிறு வாயில் நாட்டு மேலூர் தட்டான் திறமன் என்பவர் இறைவனின் எண்ணப்படி (திரு உளப்படிக்கு) பெருமடைக்கால் நட்டுவித்தாக செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய  கல்வெட்டு பராந்தகன் காலத்தைய எழுத்தமைதியோடு காணப்படுவதால் ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக கணிக்கலாம். இந்தக்கல்வெட்டின் மூலமாக பொதுமக்களும் தொழில் புரிவோரும் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும் பயிர்த்தொழிலையும் அதற்கு தேவையான பாசன ஏற்பாடுகளையும் இறைத்தொண்டாக நினைத்து செயற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

    




தமிழகத்தில்  சோழ, பாண்டியர், வணிக குழுக்கள், உள்ளூர் நிர்வாக அமைப்புகள், உள்ளிட்டோருடன் பொதுப்பணியில் நாட்டமுடைய செல்வந்தர்களும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் புதிய குளங்களை அமைப்பதிலும் பாசன         கட்டமைப்புகளை    ஏற்படுத்துவதிலும்  சீரமைப்பதிலும் பெரும்பங்காற்றி இருக்கின்றனர் என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு திகழும் என்றார்.

   மேலும் இக்கல்வெட்டு வாசிப்பை உறுதி செய்த மூத்த கல்வெட்டறிஞர் முனைவர் சு.ராஜகோபால் ,  படியெடுக்கும் போது உதவி புரிந்த முருக பிரசாத் ,ராகுல் பிரசாத், தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் உறுப்பினர் பீர்முகமது ஆகியோருக்கு  நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....