Sunday, September 5, 2021

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள கண்ணனூரில் உள்ள ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் அரசுக்குக் கோரிக்கை


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் உள்ள அரசு வனப்பகுதியில், புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழித்தடத்தில் பனையப்பட்டியிலிருந்து ராங்கியம் சாலையில் சுமார் நான்கு  கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள கண்ணனூர் வனப்பகுதியில் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்குவியல், குத்துக்கல் ஆகியன  உள்ளன. இந்த கற்கால பண்பாட்டு சின்னங்கள் கற்பாறைகளைக் கொண்டு வட்ட வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அதன் மையத்தில் நெடுங்கற்கள் செங்குத்தாக நட்டு வைக்கப் பட்டுள்ளன. அவை மிகச் சமீப காலங்களில் வனத்துறையினரால் இயந்திர வண்டிகளைக் கொண்டு யூகாலிப்டஸ் மரக்கன்றுகளை நடுவதற்காக அழிக்கப் பட்டுள்ளதை அறிந்து அவ்விடத்தை தொல்லியல் ஆய்வுக்கழக தலைவர் மேலப்பனையூர் கரு.இராஜேந்திரன் ,  மங்கனூர் ஆ.மணிகண்டன் , உறுப்பினர்கள் ம.மு.கண்ணன் , மஸ்தான் பகுருதீன் ஆகியோர் உறுதிசெய்தனர்.
இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் கரு.இராசேந்திரன் கூறுகையில் மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிறது. நமது முன்னோர்கள் பெருங்கற்காலத்திலிருந்து வரலாறுகளை பாறை ஓவியங்கள் , பெருங்கற்கால ஈமச்சின்னங்கள், தாழிகள் என பல்வேறு வகையில் பதிவு செய்து வந்திருக்கிறார்கள். அந்தவகையில்  கண்ணனூரில் உள்ளவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நெடுங்கல் , கற்குவியல் வகையை சேர்ந்த நீத்தார் புதையிடமாக உள்ளது. இதன் காலம்  சுமார் ஏழாயிரம் ஆண்டுகள் வரை காலக்கணிப்பை கொண்ட வரலாற்று சின்னமாகும்.
இங்கு வாழ்ந்து வந்த மக்கள் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைக்கும்போது புதைத்து விட்டு அதன் மேல் வட்ட வடிவத்தில் கற்குவியலை  அமைத்து அதன் மையத்தில் மென்கிர் எனப்படும் குத்துக்கல் அல்லது நெடுங்கல் நட்டு வைத்திருக்கிறார்கள் இது சுமார் பத்து அடி உயரத்துடன் உள்ளது. இவ்வாறு அமைப்பது வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்டதாகும். இந்தப் பண்பாடும் பழக்கமும் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளில் இருந்து கிறிஸ்து பிறப்பதற்கு முன் 500-ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்திருக்கிறது. அதற்குப் பிறகுதான் சங்ககாலம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
  வருங்காலச் சந்ததியினருக்கு பழங்கால வரலாற்றை சொல்லக் கூடிய இந்தச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். இதன் முக்கியத்துவம்  தெரியாமல் வனத்துறையினர் தைலமரக் கன்றுகளை வளர்ப்பதற்காக இயந்திர வண்டிகளைக் கொண்டு இந்த வரலாற்றுச் சின்னங்களை அழித்திருக்கிறார்கள். இந்தப் பகுதிக்குள் டிராக்டர்களைக் கொண்டு உழுவதே தவறு. ஆனால் ஜேசிபி போன்ற இயந்திரங்களைக் கொண்டு பெருங்கற்காலப் பண்பாட்டு நினைவுச் சின்னங்களை உடைத்தும் கற்களைப் பிடுங்கிப் போட்டும் அழித்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அதிக நெடுங்கற்கள் கொண்ட இதைப் போன்றதொரு பெருங்கற்கால வரலாற்றுச் சின்னம் வேறெங்கும் இல்லை. சென்னை  மன்னர்கள் காலத்தில் பல இடங்கள் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பகுதிகள் அறிவிக்கப் படாமல் விடுபட்டுள்ளது. இதனைப் பாதுகாக்காமல் விட்டால் வருங்காலச் சந்ததியினர் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இயலாமல்  போய் விடும். இத்தகைய நினைவுச் சின்னங்கள் மேலும் வனத்துறையினரால் அழிக்கப்படாமல் இருக்கும் வகையில் வனத்துறையினரிடமிருந்து திரும்பப் பெற்று பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை முள்வேலி அமைத்து  இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப் பட்ட பகுதியாக உடனடியாக அறிவித்து இருக்கும் சின்னங்களை சிதையாமல் பாதுகாக்கப் படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். என்றார்.
மேலும் தொல்லறிவியல் ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தமட்டிலும் அதிகமான பாதுகாக்கப்பட்ட தொல்லிடங்களையும் மரபு சின்னங்களையும்  கொண்ட மாவட்டமாகும் ,சென்னை தொல்லியல் வட்டத்தின் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையில் இம்மவட்டத்திலேயே அமைந்துள்ளது. மேலும் கண்ணனூர் போன்ற பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளும் ஏராளமாக உள்ளன.  எனவேதான் இந்திய அரசின் தொல்லியல் துறை புதுக்கோட்டையை மையமாக வைத்து புதிய தொல்லியல் வட்டத்தை உருவாக்க நடவடிக்கை வேண்டும் என கோரி வருகிறோம் என்றார்.


1 comment:

  1. கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கை...உண்மை..இது புதுக்கோட்டையின் பெருமையாகு. உங்கள் முயற்சி வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....