ஸ்ரீதரன் மதுசூதனன் எழுத்து
ஏன் இவ்வளவு தாமதமாக இதைப் பற்றி எழுதுகிறேன்? பதிவின் இறுதியில் விளக்குகிறேன். ⏳
சென்னைக்கு வந்ததும் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே, கடந்த மார்ச் மாதம் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குச் சென்றேன். முன்பு ஃபிஜி தீவுகளில் துணைத் தூதுவராகப் பணியாற்றியபோது அங்குள்ள தமிழர்கள் மற்றும் அவர்களின் பண்பாடு குறித்து இந்த நூலகத்தில் உரையாற்றிய நினைவுகள் என்னுள் மீண்டெழுந்தன.
இம்முறை நான் சென்றது புத்துணர்வுடன் அயராது உழைக்கும் நூலகர்-இயக்குநர் நண்பர் Sundar சுந்தரைக் காண்பதற்கும், அங்கிருந்த சிந்துவெளி நாகரிகக் கண்காட்சியைப் பார்ப்பதற்கும்.
நண்பர் Balakrishnan R பாலகிருஷ்ணன் ஐயாவிடம் சுந்தரின் எண்ணை உறுதிசெய்துகொண்டு பேசிவிட்டுச் சென்ற எனக்கு, அங்கு முகநூல் நண்பர் சரவணனின் PG Saravanan தற்செயலான சந்திப்பும் கிடைத்தது. சுந்தர் கண்காட்சியின் பல நுணுக்கமான அம்சங்களைத் தானே முன்னின்று விளக்க, நாங்கள் மூவரும் வெகுநாள் பழகிய தோழர்களைப் போல அந்த வரலாற்றுப் பாதையில் ஒன்றி நடந்தோம். 🤝
கீழடி அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு சிந்துவெளி நாகரிகம் என்பது நம் அனைவருக்கும் மிகவும் நெருக்கமான ஒரு உணர்வாக மாறியிருப்பது அங்கே பரவலாகத் தெரிந்தது. வயது வேறுபாடின்றிப் பலரும் சிந்துவெளியின் வணிகம், கட்டிடக்கலை, முத்திரைகள் மற்றும் எழுத்துக்களை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்கள். 📚
அக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களுடன், நம் சங்க இலக்கியச் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட தொடர்புடைய வரிகளும் சேர்க்கப்பட்டிருந்தது அதன் சுவையையும் ஆழத்தையும் கூட்டியது. 🏺
நல்வாய்ப்பாக, அதே இடத்திற்குத் திருமிகு பாலகிருஷ்ணன் ஐயாவும் அப்போது வந்திருந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த வன்னி மரம் பற்றிய பதாகையின் அருகே நின்று அவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்களும் தகவல்களுமே ஒரு குறுங்கட்டுரைக்கான செறிவைக் கொண்டிருந்தன. 🌳
இப்போது, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ‘சொல்’ இதழின் மே மாதப் பதிப்பில் இந்தக் கண்காட்சி பற்றிய ஒரு அழகான கட்டுரை வெளிவந்துள்ளது.
கண்காட்சியை நேரில் பார்த்தவர்களும் பார்க்கத் தவறியவர்களும் அந்தக் கட்டுரையை (பின்னூட்டத்தில்) வாசிக்கலாம். 📰
#ரோஜாமுத்தையாஆராய்ச்சிநூலகம்
#rmrl
#சிந்துவெளிநாகரிகம்
#பயணிதரன்
#அறிவுக்கருவிகள்
#வாழ்வெனும்பயணம்
No comments:
Post a Comment