Friday, December 3, 2021

ராஜேந்திர சோழர் காலத்தில் உயிர்நீத்த வணிகக்குழுவினரின், அரிதான நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் கொன்னைக்கண்மாயில் தமிழகத்தில் முதன்முறையாக ராஜேந்திர சோழர், குலோத்துங்க சோழர்களின் காலத்தைய வணிகக்குழுவினரின்  10 நினைவுத்தூண் கல்வெட்டுகள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் மங்கனூர் .மணிகண்டன் தலைமையிலான புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர்கள் எம்.ராஜாங்கம், பீர்முகமது , .கஸ்தூரி ரங்கன் , .கமலம் ஆகியோரடங்கிய குழுவினரால் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கல்வெட்டுகளின் கண்டுபிடிப்பு குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மங்கனூர் .மணிகண்டன் கூறியதாவது,


2016
ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடியில் ராஜேந்திர சோழரின் பெயர் தாங்கிய வணிகக்குழு கல்வெட்டு எமது குழுவினரால் அடையாளம் காணபட்டதுஅதன் தொடர்ச்சியாக தற்போது வணிகக்குழு தொடர்புடைய நினைவுத்தூண் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



நினைவுத்தூண் கல்வெட்டுகள்

சமூகத்தின் உயர்நிலையில் இருந்தவர்களுக்கும் ,போர், வேட்டையாடுதல், பயிர்களை காக்கும் பொருட்டு விலங்குகளை துரத்துதல், உள்ளிட்ட நிகழ்வுகளில், மக்களை காக்கும் பொருட்டு உயிர்நீத்த வீரர்களுக்கும், நடுகல், வீரக்கல், நினைவுத்தூண்  நடும் பழக்கம் இருந்துள்ளது. நினைவுத்தூண் கல்வெட்டுகள் புதுக்கோட்டை  மாவட்டம் , மேலப்பனையூர் வாழக்குறிச்சி, நெருஞ்சிக்குடி, செவலூர் ஆகிய ஊர்களில் சமீப வருடங்களில்  கரு.ராஜேந்திரன் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

 

                             

தமிழகத்தில் முதன் முறையாக ஒரே இடத்தில் 10 நினைவுத்தூண் கல்வெட்டுகள்

கொன்னையூர் எனும் இவ்வூர் கொன்றையூர் என்ற  உத்தம சோழபுரம் என்ற பெயருடன் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொன்னையூர் கண்மாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நினைவுத்தூண்களில் ஒன்பது கல்வெட்டுகள் மட்டுமே நன்றாக வாசிக்கும் நிலையில் உள்ளன. இவை 5 முதல் 7 அடி உயரமும், அடியில்  சதுர வடிவிலும் , மேற்பகுதி   எண்பட்டை வடிவத்துடன் உள்ளன.  இவற்றில் கல்வெட்டு பொறிப்பு ஒன்று முதல்  இரண்டு தொடர் பக்கங்களில்  30 செ.மீ அகலம்  முதல்  70 செ.மீ வரையிலான   நீளத்துடன் ஒவ்வொரு கல்வெட்டிலும் அளவு மாறுபட்டு  காணப்படுகிறது. தமிழகத்தில் ஒரே இடத்தில் 10 நினைவுத்தூண் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது   இதுவே முதன்முறையாகும்.


கல்வெட்டிலுள்ள வாசகங்கள்

1.”ஸ்ரீ (ரா)ஜேந்தரசோழ தே(வர்)க்கு (யா)ண்டு 10 . வது குன்றன் சா(த்தன்) ”

2.ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு. . 17 வது குன்றன் சா(த்தன்)

3..ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு 28 மருதன் செட்டி

4..ஸ்ரீ இராஜேந்தர சோழ தேவர்க்கு யாண்டு இருபத்து ஒன்பதாவது படை... 5.கஞ்சாரன் மூதன் நின்னா நாடு இர(ண்)டு . ஞ்சக ஞெட்டி 

6..ஸ்ரீ முத்தங் கஞ்சாறநான மும்முடி சோழ சிதலட்டி

7.ஸ்ரீ ராஜேந்த்ர தேவர்க்கு யாண்டு . ஆவது (பூ)லாங்குள(த்)தான்

8………கங்கை கொண்ட சோழ செட்டி

9.ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 8 ஆவது சிறப்பன் அரசு

என்ற தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.





கல்வெட்டு விளக்கம்:

கொன்னையூர்  நினைவுத்தூண் கல்வெட்டுகள், வணிகக்குழு தாவளத்தில் இருந்தோர் உயிர் நீத்தமையால் அவர்கள் நினைவாக நடப்பட்டவை என்பதை கல்வெட்டுகளிலுள்ள செய்திகள் உறுதிசெய்கின்றன. இக்கல்வெட்டுகள் பதினொன்றாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை அதாவது  ராஜேந்திர சோழரின் 10,17,28,29 ஆட்சியாண்டுகள்தொடங்கி முதலாம் குலோத்துங்கனின் எட்டாவது ஆட்சியாண்டு  வரை வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பட்டுள்ளன. மூன்று கல்வெட்டுகளில் ஆட்சியாண்டு குறித்த தகவல் இல்லை. இக்கல்வெட்டில் குன்றன் சா(த்தன்) என்ற பெயரில் இருவருக்கும் , மருதன் செட்டி , .ஞ்சக ஞெட்டி ,கங்கை கொண்ட சோழ செட்டி, முத்தங் கஞ்சாறன் எனும் மும்முடி சோழ சிதிலட்டி, (பூ)லாங்குள(த்)தான் , சிறப்பன் எனும் பெயர்கள் கொண்டவர்களுக்கும் நினைவுத்தூண் எடுப்பிக்கப்பட்டுள்ளது. இவை வணிகர்கள் மற்றுமின்றி வீரர்களின்  நினைவாக நடப்பட்டிருப்பதைஸ்ரீ இராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு இருபத்து ஒன்பதாவது படைஎன்று ஒரு  கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. செட்டி , ஞெட்டி ஆகிய சொற்கள் வணிகத்தொடர்பை உறுதிசெய்கின்றன. மேலும் ராஜேந்திர சோழரின் பெயரோடு கங்கை கொண்ட சோழ செட்டி, மும்முடி சோழ செட்டி என்று பெயர் சூட்டிக்கொண்டுள்ளதன் மூலம் வணிகர்களோடு கொண்டிருந்த தொடர்பை அறியமுடிகிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் இவ்வூர்  சோழர் கால வணிகக்குழுவில் மிக முக்கிய பங்காற்றியிருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. சோழர் வரலாற்றில் இந்தக்கல்வெட்டுகள் முக்கிய  இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.



வரலாற்று முக்கியத்துவமிக்க இக்கல்வெட்டை  பாதுகாக்க கொன்னைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர்  சி.செல்வமணி முழுமையான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்மேலும் முறைப்படுத்தி படியெடுக்கவும், தொடர் ஆய்வின் போதும் கொன்னைப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர்  தலைமையில்  ஆசிரியர் , ஆசிரியர் சி.ஞானமணி, .நாராயணன், சி.பழனியப்பன், சே.முத்துப்பாண்டி உள்ளிட்ட கிராம மக்கள் ஒத்துழைப்பு நல்கினர்.


பத்திரிக்கை செய்திகள் 

தினத்தந்தி 

 தி இந்து தமிழ் திசை 

 



தினகரன் 


TIMES OF INDIA 







 

 

 

Monday, October 18, 2021

புதுக்கோட்டையில் புதியவகைக் கோவில்கள்

 

கரு.இராசேந்திரன்

மேலப்பனையூர்


தமிழகக்கோயில் கட்டடக் கலையில் நாகரம், திராவிடம், வேசரம் என்ற 3 வடிவங்களைப் பற்றி சிற்பநூல்கள் பேசுகின்றன. சதுர, செவ்வகவடிவத்தை நாகரம் என்றும் எட்டுப்பட்டை, ஆறுப்பட்டை வடிவத்தை திராவிடம் என்றும் வட்ட, நீள்வட்ட, அரைவட்ட வடிவத்தை வேசரம் என்றும் அவை கூறுகின்றன. இவ்வடிவமானது விமானத்தின் உபானம் முதல் ஸ்தூபி வரையிலான முழுவிமானமாகவோ அல்லது சிகரம் மட்டும் இம்மூன்று வடிவங்களில் ஒன்றாக இருந்தால் அவ்வடிவத்துக்கேற்ற பெயரைக் கொண்டு அழைக்கப்படும்.

உதாரணத்துக்கு தஞ்சைப் பெரியக்கோயில் எட்டுப்பட்டை சிகரத்தை உடையதால் திராவிட விமானம் என்றும், கொடும்பாளூர் மூவர்கோயில் விமானங்கள் சதுரசிகரத்தைப் பெற்றிருப்பதால் நாகர விமானம் என்றும் நார்த்தாமலை விஜயாலயசோழீச்சுரம் வட்டசிகரத்தை உடையதால் வேசரவிமானம் என்றும் அழைக்கப்படும்.


இவ்வனைத்து வடிவங்களையும் சோதித்துப் பார்த்த இடமாக மாமல்லபுரம் உள்ளது. குறிப்பாக ஐந்துரதத்தில் திரௌபதி, பீமரதங்கள் நாகர வடிவத்திலும், அர்சுன, தர்மராஜரதங்கள் திராவிட வடிவத்திலும் நகுலசகாதேவரதம் வேசரவடிவத்திலும் அமைந்துள்ளன.

நகுலசகாதேவரதமானது ஒருசதுரத்தின் பின்புறம் அரைவட்டத்தை இணைத்து உருவானதாகும். இதுயானையின் பின்புறம் போன்று உள்ளதால் இதனை கஜப்ருஷ்ட வடிவம் என்றும் கூறுவர்.  ஐந்துரதசிற்பி அருகிலேயே யானை ஒன்றையும் வடித்து இரண்டையும் ஒன்று போல் காட்டியிருப்பான்.

பின்னர் தொண்டை மண்டலத்தில் இவ்வடிவம் பரவலாகக்கடைப் பிடிக்கப்பட்டது. திருத்தணி வீராட்டானேச்வரர் கோயில் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். இவ்வடிவத்தின் தொடக்கத்தை வடமேற்கு இந்தியாவில் உருவான பௌத்த சைத்தியங்களில் காணலாம். பின்னர் உருவான அஜந்தா, எல்லோரா, போன்ற சைத்தியக் குடைவரைகளும் இவ்வடிவத்திலேயே காணப்படுகின்றன. அங்கெல்லாம் இதற்கு தேவை இருந்தது, எப்படி என்றால் வட்ட வடிவ  ஸ்தூபத்தை சுற்றிவர அதன் சுற்றுப்பாதையும் அவ்வடிவத்திலேயே அமைய முன்புறம் நீள்சதுர மண்டபமும் இணந்து உருவானதே இவ்வடிவமாகும்.

பல்லவர்களுக்கு இணையான மேலைச்சாளுக்கியர்களும் இவ்வடிவத்தைக் கையாண்டுள்ளனர். ஐஹோலேவில் உள்ள துர்க்கைக் கோயில் இவ்வடிவத்திலேயேக் காணப்படுகிறது.

மாமல்லபுரம், பட்டடக்கல்லைப் போன்றே புதுக்கோட்டைப் பகுதியும் கோயில் கட்டடக்கலையின் பரிசோதனைக் களமாக இருந்துள்ளது. கருங்கல்லில் காளியாப்பட்டி, ஏனாதி, பனங்குடி போன்ற இடங்களில் சிறுசிறுவிமாங்கள் உருவானதுபோல அஷ்டப்பரிவாரம் கொண்ட கோயில்கள் இங்கு குடைவரையிலிருந்து உருவாவதைக் கண்டுணரலாம். இப்பகுதியில் சாந்தார விமானம் கட்டும் முயற்சி முதலில் தோல்வியடடைந்து. பின்னர் வெற்றி பெற்ற கதையை நார்த்தாமலை விஜயாலயச்சோழீச்சுரம் கூறும்.

இவ்வகையில் தூங்கானை மாடம் என்னும் அமைப்பிலான வேசரவிமானங்களும் இங்கு 3-இடங்களில் காணப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் இரும்பாநாடு கோவில், ஒக்கூர் கோவில், அறந்தாங்கி வட்டம் சிலட்டூர் ஈஸ்வரன்கோவில் ஆகியவைகளே அம்மூன்று கோயில்களாகும்.

இவைமூன்றும் கருவரை பிரஸ்தரம் வரை கல்லால் கட்டப்பட்டு மேற்பகுதி செங்கல்லால் கட்டப்பட்டுள்ளன. முதல் கோயிலின் செங்கல் கட்டுமானம் முழுதும் அழிந்துபோய் தற்போது கற்கட்டுமானம் மட்டுமே உள்ளது. இரண்டாவது கோயிலின் பழைய கட்டுமானம் சேதமுற்றுக் காணப்பட்டாலும் அது நகுல சகாதேவ ரத்த்தைப் போன்று இரண்டு தள கஜப்ருஷ்ட விமானம்தான் என்பதை குறித்து நிற்கிறது. மூன்றாவது விமானம் முழுதும் புதுப்பிக்கப்பட்டுவிட்டதால் அதன் உண்மை வடிவத்தை அறிய இயலவில்லை.

      இரும்பாநாடு ஈஸ்வரன் கோவிலில் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும் ஒக்கூரில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும் காணப்படுவதால் இக்கோவில்கள் முதலாம் குலோத்துங்கன் காலத்திற்கும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம்.

      இரும்பாநாடு, ஒக்கூர் சிலட்டூர் ஈஸ்வரன்கோவில்கள் ஆகிய கோவில்களின் விமான வகை புதுக்கோட்டைக்கே பெருமை சேர்க்கக்கூடிய கட்டட அமைப்பைக் கொண்ட கோவில்கள் என்றால் அதுமிகையாகாது. இப்பகுதி கட்டடக்கலையின் சோதனைக்களம் என்பதை இவை மீண்டும் நிரூபிக்கின்றன.


தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...