Sunday, September 14, 2025

குண்டோடி காளியாக வழிபாட்டிலிருக்கும் மகாவீரர் சிற்பமும், முக்குடை கோட்டுருவ நடுகல்லும், ஆவுடையார் கோவில் அருகே கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொடிக்குளம் பொறியியல் மாணவர் அபிமன்யு, வெளிநாட்டில் பணிபுரியும் டி.களத்தூர் பெரி.முத்துத்துரை ஆகியோர் அளித்த தகவலின் படி , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ மணிகண்டன் தலைவர் கரு ராஜேந்திரன்   ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மகாவீரர் சமண சிற்பம் மற்றும் முக்குடை நிலதான கோட்டுருவ நடுகல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது .

இந்த கண்டுபிடிப்பு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ மணிகண்டன் கூறியதாவது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறுகானுர் கிராமத்தின் குண்டடி காளி திடலில் சமண பள்ளிக்கு நிலதானம் வழங்கிய முக்குடைக்கல்லும் , மகாவீரர் சிற்பமும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.      முக்குடைக்கல்லின் மையத்தில் காணப்படும் முக்குடை அமைப்பு சமண சமயத்தின் முக்காலத்தையும் உணர்த்தும் சமணத்தின்  புனித சின்னமாகும் . இதன் இரு புறங்களிலும் குத்துவிளக்கு பொறிக்கப்பட்டிருக்கிறது இடது புறம் மேற்பகுதியில் காணப்படும்  மேழி (ஏர்)அமைப்பு, வேளாண் குடிகள் சமண பள்ளிக்கு நிலதானம்  வழங்கியதை குறிப்பதாகவும் ,   வலது புறம் மேற் பகுதியில் வேலியிட்ட மர கோட்டுருவம், விவசாய நிலத்தை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட குறியீடாக கருதலாம்.  முக்குடைக்கு மேலாக மங்கள மேடு அமைப்பும் கோட்டுருவமாக  சிதைந்து காணப்படுகிறது . இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்.

மகாவீரர் சிற்பம்  

குண்டோடி காளி  என்ற பெயரில் வழிபாட்டிலிருக்கும்  மகாவீரர் சிற்பம் , இரண்டேகால்  அடி அகலத்துடனும், மூன்றரை அடி உயரத்துடனும் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது   தீர்த்தங்கரரான  மகாவீரர் திகம்பரராக, தியான கோலத்துடன்,  சுருள் முடி தலையுடனும், திறந்த கண்கள், நுனியில் சிறிது சேதமடைந்த மூக்கு , நீண்ட துளையுடைய காதுகள் , கீழ் உதடு  சிதைந்தும், விரிந்த மார்புடன்   அமைக்கப்பட்டுள்ளது . தலையின்  பின்புறமாக பிரபா வளையமும்,  மேற்பகுதியில் சந்திராதித்தம் , நித்த விநோதம் , சகல பாசானம் எனும்     முக்குடையும், அதன் இரு மருங்கிலும்   குங்கிலிய மரமும்,   சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது,    மூன்று சிங்க முத்திரைகொண்ட  அரியாசனத்தில் மகாவீரர் அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக வழிபட்டு வரும் ராஜேஸ்வரி குடும்பத்தினர் சைவ படையலிட்டு  வழிபட்டு வருவது குறிப்பிடதக்கது.  இதன் உருவமைப்பு ஒப்பீட்டின்படி பத்தாம்  நூற்றாண்டைச்சேர்ந்த சிற்பமாக கருதலாம்.  

ஆவுடையார்கோவில் கழுவேற்ற ஓவியம் சொல்லும் தகவல் உண்மையா ?

ஆவுடையார் கோவிலின்  மண்டபக்கூரையில் நூறாண்டுகள் பழமையான ஓவியங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவையாக சமணர்கள் கழுவேற்றிய  காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது.என்றாலும் ஆவுடையார் கோவில்  பகுதியில் சமண தடயங்கள் ஏதும் கண்டறியப்படாமல் இருந்தது. இந்நிலையில் திருப்புனவாசல் கோவில் கருவறை விமானத்தின் தென்புற  பிரஸ்தர பகுதியில் சமண கழுவேற்றும் சிற்பமும் அருகே மன்னன் மற்றும் சைவத்துறவி ஒருவர் நிற்பதுவாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம் . பத்தாம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம்  புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் 16 கிமீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது. புதிய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என்றார்

துணைத் தலைவர் கஸ்தூரிங்கள்,  உறுப்பினர் மா. இளங்கோ, 








 தலைமை ஆசிரியர் கா. அய்யர் தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் ம. திருக்குறள் அரசன் , ம. லோகேஷ், சி.விஷ்ணுவர்தன், அ. கவினேஷ் , கோவில் பக்தர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.   

Saturday, September 13, 2025

ஆதனப்பட்டியில் சோழர் காலத்தைய திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டுபிடிப்பு

 


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மருதம்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட ஆதனப்பட்டி வயல்வெளியில் கல்வெட்டு காணப்படுவதாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர் கீரனூர் பா.முருகபிரசாத் அளித்த தகவலைத்தொடர்ந்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் மேற்கொண்ட  கள ஆய்வில் பதிமூன்றாம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய  நான்முக சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

 


      இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

தேவதானம் வழங்கப்பட்ட  நிலங்களை அடையாளப்படுத்துவதற்காக வைணவத்திற்கு சங்கு, சக்கரம் பொறித்த திருவாழிக்கல்லும், சமணப்பள்ளிக்கு முக்குடைக்கல்லும், புத்த சமயத்தை குறிக்க தர்மசக்கரமும், சைவக்கோயிலுக்குரிய நிலங்களில்  திரிசூலக்கற்களும் நடப்படுவது வழக்கம், கொடை வழங்கப்படும் நிலங்களுக்கு  வரிநீக்கப்பட்ட இறையிலி தேவதானமாக நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் வருவாய் கோவிலின் தினசரி வழிபாட்டுக்குப்  பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

 

ஆதனப்பட்டி சூலக்கல்  :

 வயல்வெளியில் சாய்ந்த நிலையில்  நான்கு பக்கங்களிலும் சூலக்குறிகளுடன் உள்ளது. ஒரு பக்கத்தில் சூலக்குறியுடன் காளையின் வரைகோட்டுருவம் காட்டப்பட்டுள்ளது.  இக்கல்வெட்டு  பதிமூன்றாம் நூற்றாண்டில் திருநாமத்துக்காணியாக நிலதானம்  வழங்கப்பட்டதை குறிக்கிறது.






கல்வெட்டு கூறும் செய்தி :

கல்வெட்டு மூன்று பக்கங்களில் 23 வரிகளில் பொறிக்கப்பட்டிருந்தாலும் இரண்டாம், மூன்றாம் பக்கத்தில் வரிகளில் சிதைந்து காணப்படுகிறது.  இக்கல்வெட்டு "ஸ்வஸ்தி ்ரீ கீழைக்குறிச்சி உடையார்  அழகிய சோமீசுரமுடைய நாயனார்க்கு என்னி  வயப்புறங்களில், ஆதனூரங்குளமும் வயலும், பெருநான்கெல்லைக்கு உட்பட்ட புஞ்சையும் மற்றும் எப்பேர்ப்பட்டனவு திருநாமத்துக் காணியாக்குடுத்தேன் (செயந்தஞ்ஞாலை) சோளக் (க)டம்பார்வீரன் எழுத்(து)" என பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு விளக்கம்:

ஆதனூர் குளமும், வயலும் அதிலிருக்கும்  மரம், பயிர் வகைகள், கிணறு, கட்டுமானம் உட்பட எப்பேர்ப்பட்டனவும், அது கீழக்குறிச்சி அழகிய சோமீசுரமுடைய நாயனார்  சிவன் கோவிலுக்கு  சொந்தமானதாக்கி இறைவனின் பெயரால்  திருநாமத்துக் காணியாக சோளக்கடம்பார்வீரன் என்பாரால் வழங்கப்பட்டதை இக்கல்வெட்டு மூலம்  அறிய முடிகிறது.

 

மாறாத பெயர்கள்:

 கல்வெட்டிலுள்ள நிலவியல் பகுதியிலேயே இந்த  வயல் திருநாமத்துக்காணியாக  கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது, அதுமட்டுமின்றி 700 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதனூரங்குளம்   மற்றும் ஆதனவயல் என்ற பெயர் மாறாமல் அதே பெயருடன்   இன்றளவும் வழக்கத்தில் இருப்பது  பண்பாட்டு தொடர்ச்சியை காட்டுகிறது. என்றார்

 

இந்தக்கள ஆய்வின் போது புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் உறுப்பினர் பா.முருகபிரசாத் ,மருதம்பட்டி ஊராட்சி ஆதனப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.நாகராஜன்,தொல்லியல் ஆர்வலர் சாகுல்ஹமீது மற்றும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள்  முருகேசன், பெருமாள்,ரவி, சிங்காரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

குளத்து நீரை பயிருக்கு மட்டுமே பாய்ச்ச வேண்டுமென்ற உத்தரவுடன் தொண்டைமான் கல்வெட்டு – கந்தர்வகோட்டை அருகே கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை எல்லையில் , புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட  சம்பட்டிப்பட்டி  சிற்றூர் எல்லையில்  கல் பலகை நட்டிருப்பதாக        குரும்பூண்டியைச்சேர்ந்த சமூக ஆர்வலர்  மூ.சேகர்   அளித்த தகவலின் பேரில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் ஆ. மணிகண்டன்  கல்வெட்டை  ஆய்வு செய்ததில் திருமலை ராய தொண்டைமான் பெயரில் ,   1758  ஆம் ஆண்டு   பிரம குளத்தில் பயிருக்கு மட்டும் நீர்ப்பாய்ச்சும்  பாசன உரிமையுடன் , பிரமன் வயல் நிலத்தை  சறுவமானியமாக  கொடுத்த தகவலடங்கிய  கல்வெட்டு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 இக்கல்வெட்டு குறித்து ஆ. மணிகண்டன் கூறியதாவது ,

கந்தர்வகோட்டை எல்லையிலுள்ள கொத்தகம் அருகே, புதுக்கோட்டை வட்டம் கல்லுக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட,  சம்பட்டிப்பட்டி  சிற்றூர் எல்லையிலுள்ள , எல்லைக்கல் வயலில் வாமன கோட்டுருவமும் , எல்லைக்கல்லிற்கும் வட மேற்கிலுள்ள புதரில் கல்வெட்டு பலகைக்கல் நட்டுவிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டின் காலம் :

சாலிவாகன சகாப்தம் 1679  ,  கலியுகம் 4858 என்றும்,  வெகுதானிய வருடம்  ஆவணி மாதம் மூன்றாம் திகதி  என குறிப்பிடப்பட்டுள்ளது . இதற்கு இணையான பொது  ஆண்டாக 1758 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி என கணிக்கலாம் . இந்த காலக்கட்டத்தில் விசைய ராகுநாதராயத்தொண்டைமானர் ஆட்சி பொ. ஆ 1730 முதல் 1789 வரை  நிலவியது.

கல்வெட்டில் உள்ள தகவல் :

ஸ்வஸ்தி ஸ்ரீ  என்ற மங்கள சொல்லுடன்  சாலிவாகன ஆண்டு மற்றும்  கலியாண்டுடன் வெகுதானிய வருடம் ஆவணி மாதம் 3 ஆம் நாள் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகம் குறித்த தகவலாக  ராசராச வளநாடு , ராசேந்திர சோழ  வள நாடு , பன்றி சூழ் நாடு,  அன்பில் எனப்படும் அம்புக்கோவில்  தெற்கிலூரில்  காணியுடையார் மக்களில் திருமலைராய தொண்டைமானார்  அவர்களின் பஞ்ச நத்தத்திலிருக்கும்  என்ற சொற்றொடரில்  உள்ள தகவல் தொண்டைமான் மன்னர்களின் பூர்வீகமாக அம்புக்கோவிலை குறிப்பிடுவதை அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் இவ்வூரில்   இருக்கின்ற  பகவாந் ராயர்   மற்றும் ராசிவராயர்  ஆகியோருக்கு,  சம்பட்டிப்பட்டி சிற்றூர் எல்லையில் அமைந்துள்ள பிரமன்  வயலை சறுவ மானியமாக வழங்கிய மன்னரின் உத்தரவு   தாமிரத்தில் எழுதி சாசனமாக்கப்பட்டதையும் , வழங்கப்பட்ட நிலத்தின் நான்கு புற எல்லைகளாக  கிழக்கு  எல்லையாக கீழக் காட்டுக்கு மேற்கு எனவும் , தென் புறத்தில் புளியடிக்கு வடக்கு எனவும் , மேற்கு பாக்கெல்லையாக மொந்தைக்கு கிழக்கு எனவும்  வட பாக்கெல்லையாக கொத்தகத்து வயலுக்கு தெற்கு எனவும் வரையறுக்கப்பட்டு  இந்த பெரு நான்கெல்லைக்குட்பட்ட நஞ்சையும் , புஞ்சையும் ,  பிரம குளத்தின் நீரை பயிருக்காக மட்டும் பாய்ச்ச வேண்டும்  உத்தரவுடன், இந்த சாசனத்திற்கு இடையூறு செய்வோர் பல தோஷத்திற்கு ஆளாவர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ள  கல்வெட்டுப்பகுதி  முழுமையாக வாசிக்க இயலாத நிலையில் உள்ளது . இறுதியாக  தொண்டைமான் மன்னர்  சார்பாக பழனியப்ப வாத்தியார் என்பாரின் ஒப்பத்துடன்  சறுவ மானியம் வழங்கப்பட்டதை  கல்வெட்டு  மூலம் அறிய முடிகிறது .

 

வாமன கோட்டுருவம் பொறிக்கப்பட்ட  எல்லைக்கல்

தற்போது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இந்த வாமன கோட்டுருவம் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இது கல்வெட்டிலுள்ள எல்லையை குறிப்பதற்காக நடபட்டதை உறுதி செய்கிறது . இது தொண்டைமான் மன்னர்களின் தனித்துவ குறியீடாகும், தொண்டைமான் செப்பு பட்டயங்களில் வாமன கோட்டுருவம் வடிக்கப்பட்டுள்ளதை இதனுடன் ஒப்புநோக்கலாம்.

 

சறுவ மானியம் வழங்கியது யார் ?

திருமலை ராய தொண்டைமான்  (பொ. ஆ. 1729 )மறைவுக்குப்  பிறகு பொ.ஆ. 1758 ஆம்  இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.  தொண்டைமான் மன்னர்களில் 1730 ஆண்டு முடி சூட்டிக்கொண்ட விசைய ராகுநாத ராய தொண்டைமான் பொ. ஆ. 1730 ஆம் ஆண்டு தொடங்கி பொ. ஆ. 1790 வரை ஆட்சி புரிகிறார் என்பதால் இக்காலத்தில்  ,தனது தந்தையாரின் நினைவாக இந்த இந்த சறுவ மானியத்தை வழங்கியிருப்பதோடு தனது பெயரை இக்கல்வெட்டில் குறிப்பிடவில்லை என்பது நோக்கத்தக்கது  மேலும்  இந்த சறுவமானியத்தை திருமலை ராய தொண்டைமானுக்காக பழனியப்ப வாத்தியார் என்பவர் ஒப்பமிட்டு வழங்கியிருப்பது  குறிப்பிடத்தக்கது.  என்றார் .








 

தலையில்லா புத்தர் சிலை - ஆவுடையார்கோவிலில் கண்டுபிடிப்பு - புத்த சமய வரலாற்றில் புதிய வெளிச்சம்

         புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பெரிய கண்மாய் ,   பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா   புத்தர் சிலையை ,   புதுக்க...