புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே வில்லுனி ஆறு என்று என்று
தற்போது அழைக்கபடும் ஆறு உள்ளது இதன் கரையோரப்பகுதி அமபலத்தான் மேடு என்ற பழமையான
வாழிடம் உள்ளது. இவ்விடம் குறித்த தகவலை நக்கீரன் பத்திரிக்கையாளர்
பகத்சிங் அளித்த தகவலின் அடிப்படையில்
புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுகழக நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைமையில் தொல்லியல்
ஆய்வாளர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் , தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர்
ஆசிரியர் கஸ்தூரிரங்கன் , தலைமை ஆசிரியர் வீர சந்திரசேகரன் ,இளையராஜா , சமூக
ஆர்வலர் மதியழகன் ஆகியோர் அடங்கிய குழு
கள ஆய்வு மேற்கொண்டதில் மிக அபூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
ராமசாமிபுரம் மங்கலநாடு - அம்பலத்திடல்
வில்லுனி ஆற்றின் கரைப்பகுதியில் ராமசாமிபுரம் மங்கலநாடு ஆகிய
ஊர்களின் கிராம எல்லையில் 173 ஏக்கர்
பரப்பளவில் இத்திடல் அமைந்துள்ளது இதில் பாலை
நிலத்தாவரங்களான வன்னி மரங்கள் , அஸ்பராகஸ், கற்றாழை , சப்பாத்திக்கள்ளி
உள்ளிட்டவை மிகுந்து காணப்படும் முட்புதர்காடாக உள்ளது. சுண்ணாம்பு கூட்டுக்கலவை
பொருளாலான சிறப்பு வாய்ந்த மேட்டுப்பகுதிகளில் தாழி புதைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே
கருப்பு சிவப்பு பானை ஓடுகள் விரவிக்கிடக்கின்றன. இத்துடன் உலோக
உருக்குக்கழிவுகளும் உலோக வார்ப்பு மண் உருளைகளும்,கண்ணாடி கற்களும் ஒருசில இடங்களில் காணப்படுகிறது .
வில்வன்னி ஆறு (வில்லுன்னி ஆறு) வரலாறு
இது மறமடக்கி குளத்தில் தனது பயணத்தை தொடங்குகிறது ருத்திரசிந்தாமணி
எனுமிடத்தில் அம்புலி ஆறுடன் கிளை ஆறாக இணைகிறது 37 வது கிலோ மீட்டரில்
வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது கலக்கும் இடத்தில் உள்ள ஊரின் பெயர் வில்லுனிவயல்
என வழங்கப்படுவதன் மூலம் அம்புலி ஆறு என்ற பெயர் வழங்கப்படுவதற்கு முன்பே வில்லுனி
ஆறு என்ற பெயரே வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என உறுதிபடுத்த முடிகிறது.
தற்போது வில்லுன்னி ஆறு என்ற பெயர் பண்டைய
இலக்கியத்தரவுகளின் அடிப்படையிலும் தற்போது வரை
ஆற்றின் கரையில் மிகுந்து காணப்படும் வன்னி மரங்களையும் ஒப்புநோக்கும் போது
வில்வன்னி ஆறு என்ற பெயரே சொல்வழக்கில் திரிபடைந்து வில்லுன்னி ஆறு என
மாறியிருக்கக்கூடும் என அனுமானிக்க முடிகிறது.
வன்னி மரமும் தாய்தெய்வ வழிபாடும்
இந்த மரம் பற்றிய செய்தி ரிக் வேதம், ராமாயணம்
மற்றும் மகாபாரதத்தில் செய்திகள் உள்ளன. கல்கத்தாவிலும் ஏனைய மாநிலங்களிலும் விஜயதசமியன்று வன்னி மரத்திற்கு
சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதையும் அதே விழாவின் பின்னணியில் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்களில் 'பாரிவேட்டை' என்ற பெயரில் திருவிழா நடப்பதையும் இவ்விழாவில் வன்னி மரத்தின் கீழ் நின்று வில்
எய்தும் விழா கொண்டாடப்பட்டு வந்தததையும்
சான்றுகள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. இதன் வழியாக இந்தியா முழுவதுமாக
தாய்தெய்வ வழிபாட்டு முறையும் வன்னி மரத்தின் தொடர்பையும் அறிய முடிகிறது.
தாழி புதையிடமும் இலக்கிய தொடர்பும்
"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய
காடே"என்று பதிற்றுபத்து பாடல் வன்னி மறக்காட்டிற்கும் தாழி புதைக்கப்படும்
இடத்திற்கும் உள்ள தொடர்பை கூறுகிறது.
"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக
வெற்கொல்லாக் கூற்றே என்று நற்றிணையின் 271 பாடல் தாழி
குறித்த குறிப்பு தருகிறது.
பானைக்குறியீடுகள் சொல்ல வருவது என்ன?
வடிவெழுத்து பெயரெழுத்து முடிவெழுத்து தன்மையெழுத்தென எழுத்தின்
பெயர் இயம்பினரே என்று நிகண்டுகளில் ஒன்றான திவாகர நிகண்டு எழுத்தின் பரிணாம
வளர்ச்சியை கூறியிருப்பதும் அதையே இன்று
தொல்லியல் அறிஞர்களால் வறையறுக்கப்பட்டுள்ள படவுருவன்(PICTO GRAPH),சொல்லுருவன்(LOGO GRAPH), உயிர்மெய்யன்(SYLLABARY), ஒலியெழுத்து(PHONETIC) என்று
குறிப்பிடுவதையும் ஒப்பு நோக்கும்போது தமிழின் எழுத்துவகைகளை நமது
முன்னோர்கள் அறிந்து வைத்திருந்துள்ளதையும் நாம் அறிய முடிகிறது
மனித உணர்வுகளை வெளிப்படுத்தவும் தமது செய்தி யாருக்கோ
தெரியப்படுத்த வேண்டும் என்ற சமூக வழிகாட்டுதலில் அக்காலத்தில் இருந்த
நடைமுறையிலிருந்த எழுத்துக்களை பயன்படுத்தி எழுதி வைத்துள்ளதை நாம் கீரல் குறியீடுகள் என்கிறோம், இத்தகைய
குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட கருத்தை ஒற்றை குறியீட்டில் வெளிப்படுத்தியிருப்பதை
நாம் உணரமுடிகிறது. நமக்கு கிடைத்துள்ள குறியீடுகளில் மூவுலகை குறிப்பதாகவும், இவை அனைத்தும் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் ஒற்றை சக்தியை நோக்கி இவர்களது உயிர் பயணிப்பதாகவும்,அருகாமையில்
இருக்கும் ஏணி போன்ற அமைப்பு மேற்பகுதியில் குறுகலாகவும் கீழ்ப்பகுதி அகன்றும்
இருப்பதன் மூலம் அதி உயரத்திற்கு இவர்களது பயணம் இருப்பதாய் இவர்கள் கற்பனை
செய்திருக்க வேண்டும் என அனுமானிக்க முடிகிறது.மேலும் இக்கருத்தை "கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம்
எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி"
என்று புறநானூற்றின் 228 செய்யுள் இக்கருத்திற்கு வலு சேர்க்கிறது.
முதல் இரண்டு குறியீடுகள் ஒலிநிலையை (Phonetic) குறிப்பதாகவும்
அதோடு பக்கவாட்டில் கீறப்பட்டுள்ள மூன்றாவதாகவுள்ள படிநிலை நீள் கூம்புவடிவக்குறியீடு படவுருவன்(Pictograph)
வகையைச்சார்ந்ததாகவும் உள்ளது.
இந்தக்குறியீடுகளில்
குறிப்பிட்டுள்ள தலைகீழ் சூலம் போன்ற அமைப்பு போர்த்திறமிக்கவர் புதைக்கப்பட்டுள்ளார்
என்பதை குறிப்பதாக கிரேக்க தொல்லியலாளர்களின் கருத்தாக உள்ளது. இந்தியத்தொல்லியலாளர்களின்
பெருவாரியானவர்கள் இக்குறியீட்டை மட்பாண்டம் செய்பவரின் அடையாளம் என்று கூறிவரும்
நிலையில், இதுபோன்ற குறியீடுகள் இலங்கை, கிரேக்கம், மற்றும் இந்தியாவின்
பெருவாரியான பகுதியில் கிடைத்துள்ளதைக்கொண்டும் இதனை உலகலாவிய மொழிக்குறியீடாகவே
பார்க்கவேண்டியுள்ளது. மேலும் மண் அடுக்கைமட்டுமே வைத்து இதுபோன்ற குறியீடுகளின்
காலக்கணிப்பை வெளியிடுவதும் சரியானதாக அமையாது என்பதால் அறிவியல் அடைப்படையில்
மொழித்தோற்றத்தை முன்வரைவு செய்ய தொல்லியலாளர்கள முன்வரவேண்டும்.
அறிவியல்பூர்வமாக
இதனை ஒப்புநோக்கும்போது தலைகீழாக அமைக்கப்பட்டுள்ள முன்னோடி கருத்தெழுத்து பூமி,நீர்,காற்று ஆகிய
உணரக்கூடிய பொருட்கள் ஒருங்கிணைந்து ஒளி,வெப்பம் எனும்
ஒருகமைந்த நிலையாக இந்த உடல் மாறியதை வெளிப்படுத்தியிருக்கும் குறியீடாகவும் இதனை
கருதலாம்.
தொல்லியல் பார்வையில் அம்பலத்திடல்
அம்பலத்திடலில் கருப்பு வெள்ளை பானை ஓடுகளும் கருப்பு ஓடுகளும்,
தாழியின் பெரிய பாண்ட ஓடுகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன.
ஏ.சுந்தரா என்பவர் பெருங்கற்படை அகழாய்வுகளில் கிடைக்கும்
குறியீடுகள் 3000 – 4000 வருடம் வரை
இருந்திருக்க வேண்டும் என்கிறார். மேலும் இத்தகைய குறியீடுகளை பின்னர் தமிழியாக
வளர்ச்சியடைந்திருக்கும் என்கிறார்.
தமிழகத்தில் அகழ்வாய்வு செய்யப்பட்ட கரூர்,
உறையூர்,அழகன்குளம்,வல்லம்,கொடுமணல்,ஆகிய ஊர்களின் கீழ் அடுக்கில் குறியீடுகள்
பொறித்த பானை ஓடுகளும், இரண்டாம் அடுக்கில் தமிழி
எழுத்துக்களும் பொறித்தவையாக உள்ளன. இதன் மூலமாக இக்கீரல்களை
எழுத்தின் முன்னோடி அடையாளம் என அறியலாம்.
அதுமட்டுமின்றி தஞ்சாவூர் மாவட்டம் செம்பியன் கண்டியூரில்
கிடைத்த பானைக்குறியீடுகள் இங்கு கிடைத்த பானைக்குறியீடுகளோடு முழுமையாக
ஒத்துபோகிறது. மூன்று கோடுகள் இணையும் கூம்பு வடிவக்குறியீடு அதிக அளவிலும்,
கூம்பு வடிவ படிநிலை குறியீடு இவற்றோடு இணைத்து வரையப்பட்டுள்ளதன் மூலம்
இதனைக்குறியீடாகவோ அல்லது கூட்டுப்பொருள் கருத்து வெளிப்பாடாகவோ கருதலாம்.
குறியீட்டின் காலம்
இந்த குறியீட்டு எழுத்துகள் ,
எழுத்து தோன்றுவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்தவை என்பதாலும்
பெருங்கற்கால குறியீடாக வரையறுக்கப்பட்டுள்ளதாலும் இந்தக்குறியீடுகளை 3500 ஆண்டுகளுக்கு மேம்பட்டவையாகவே கருத வேண்டியுள்ளது.
அதுமட்டுமின்றி தாழியின் மேற்புறத்தில் கிடந்த மண் கலையத்தில் சிறு பல் எலும்பு
முழுமையாக கிடைத்துள்ளதால் இந்தக்குறியீட்டின் காலத்தையும் கதிரியக்க சோதனைமூலமாக ஓரளவு
துல்லியமாக வெளிப்படுத்த முடியும் மேலும் வெப்ப ஒளிர்ம சோதனைகள் (thermo lominiscence dating) உள்ளிட்ட
அறிவியல் பரிசோதனைகள் மூலம் உறுதியான கால வரையறைக்கு வர முடியும் , இந்நிலையில் எங்களுக்கு கிடைத்துள்ள தரவுகளைகேகொண்டு தொடர்
ஆய்வுகளையும், மேற்கொண்டு வருகிறோம் .
அம்பலத்திடல் பகுதியில் தொல்லியல் தடயங்கள்
எமது குழுவினரால் இதே பகுதியில் தொடர் ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதில் புதிர் அமைப்புகள், இதில் சுண்ணாம்பு
கற்காரையுடன் கூடிய தரைத்தளம், சுடாத மண் உருளைகள் மற்றும் சுண்ணாம்பு கற்காரை
கட்டமைப்புகள் உள்ளிட்டவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது இது தொடர்பாக தொடர் ஆய்வுகள்
மேற்கொண்டு வருகிறது நமது அமைப்பு