Wednesday, October 26, 2016

பொற்பனைக்கோட்டைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட செந்நாக்குழி உருக்கு உலைக்கு அருகில் இயங்கிவந்த உலோக தொழிற்சாலைகளின் சுடுமண் வார்ப்புக்குழாய்கள் , உருக்கு கலன்கள் உள்ளிட்டவை கண்டுபிடிப்பு.


புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரும்பு உருக்காலை இயங்கியதற்கான தடயங்கள் உலோக உருக்கு சுடுமண் குழாய்கள், மண்ணாலான உருக்கு உலைகள், உருக்குக்கலன்கள் ஆகியவை பொற்பனைக்கோட்டை அமைந்துள்ள இடத்திற்கும் தென்பகுதியில் நூறு மீட்டர் தொலைவிலிருந்து திருவரங்குளம் வரை பல இடங்களில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைமையில் மரபுநடை ஒருங்கிணைப்பாளர்கள் புதுகை செல்வா , கஸ்தூரிரெங்கன், ஆசிரியர் மு.முத்துக்குமார் ,பத்திரிக்கையாளர்கள் பகத்சிங், ம.மு.கண்ணன், இயற்கை வேளாண் ஆர்வலர் சீ.அ.மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவின் கள ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.





பொற்பனைக்கோட்டைப் பகுதிகளில் இரும்பு உருக்காலைகள் இயங்கியதற்கான வரலாற்றுச் சான்றுகள்

புதுக்கோட்டை சமஸ்தானத்தால் வெளியிடப்பட்ட கே.ஆர் வெங்கட்ராம அய்யர் அவர்களால் தொகுக்கப்பட்டு 1938 ல் வெளியிடப்பட்ட புதுக்கோட்டை ஸ்டேட் மேனுவல் புத்தகத்தில் “13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த வீரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் திருவரங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருக்குத்தொழிற்சாலைகள் இயங்கிவந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதுமட்டுமின்றி 1813 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புள்ளிவிவரக் குறிப்பேட்டில் இரும்புத் தொழிற்சாலைகள் இயங்கிய இடங்களுக்கு பல வழித்தடங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது.
இதற்கு முன்னதாகப் சமஸ்தானத்தால் 1811-ல் பெறப்பட்ட பெய்லி அறிக்கையின்படி ஒரு ஆண்டிற்கு ரூபாய் 1300 மதிப்புள்ள இரும்பு உருக்கு தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதே அறிக்கையின் மூலம் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இரும்பு உருக்கும் ஆலைகள் இயங்கிவந்ததற்கான தரவுகளை அறியலாம்..



இரும்பு உருக்கு உலை தடயங்கள் 
திருவரங்குளம் பகுதியிலிருந்து பொற்பனைக்கோட்டை வரை உள்ள கோயிற்காடுகள் மற்றும் இரும்புக்கழிவுகளுடன் கூடிய மேடான சில பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகளின் மண்ணாலான உலைகள் பகுதியளவு சிதைந்த நிலையிலும் , இரும்புக்கழிவுகளை பிரித்தெடுக்க பயன்படுத்தப்பட்ட கலன்கள் பல இடங்களிலும் , இரும்பு வார்ப்புக்கு பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட சுடுமண்ணாலான உருக்கு குழாய்கள் . உருக்குடன் உறைந்த நிலையிலும் , தனியாகவும், பகுதியளவு சிதைந்த நிலையிலும் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
பொற்பனைக்கோட்டை உலோக உருக்கு ஆலையும் உலகளாவிய  சான்றுகளும்:
நமது குழுவினாரால் மேற்கொள்ளப்பட்ட மரபுவழி பயணத்தின் போது , பொற்பனைக்கோட்டைக்கு அருகே செம்புராங்கற்பாறை படுகையில் அமைந்துள்ள இவ்வமைப்பு உலோக உருக்காலை என செய்தி வெளியிட்டிருந்ததோடு இந்த அமைப்பு குறித்து திரட்டப்பட்ட தகவல்களின் படி , கி.மு 483 -ஐச்சார்ந்த பழங்கால கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் அருகே அட்டிகா என்னுமிடத்தில் அமைந்துள்ள வெள்ளித்தாதுவை பிரிக்கும் பழங்கால தொழிற்சாலை அமைப்பும் , ஆர்மேனியாவிலுள்ள கி.மு 300-ஐ சேர்ந்த பழங்கால உலோகத்தாது பிரிக்கும் அமைப்பும் , பாலஸ்தீனத்தில் கி.மு 1200-ஐ சேர்ந்த பழமையான உலோகப்பிரிப்பு அமைப்புகளோடும் இவ்வமைப்பு ஒத்துப்போவதையும் அனுமானித்தோம்.






செந்நாக்குழி நெருப்பு உலையும் சங்கத்தமிழும்
இந்தக்குழிக்கு அருகாமையில் காணப்படும் பொற்பனைக்கோட்டையிலுள்ள குளத்திற்கு நீராவிக்குளம் என்றும், இந்த பாறை அமைப்பிற்கு மிக அருகிலுள்ள குளத்திற்கு பனி நாளம் என்றும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது, மேற்கண்ட குளத்தின் பெயர்கள் இந்தப்பகுதியின் தொன்மையை உணர்த்துகிறது மேலும் செந்நாக்குழி என்று அங்குள்ளவர்களால் அழைக்கப்பட்டு வரும் இவ்வமைப்புகள் சிவந்த அல்லது செம்மை என்ற நெருப்பின்நிற பண்பைக்குறிக்கும் சொல்லான செந்என்ற ஒற்றுடன் நாஎன்கிற நெருப்பு சுவாலையை குறிக்கும் பெயர்ச்சொல்லும் குழி எனும் இடப்பெயருடன் இணைந்து செந்+நா+குழி = செந்நாக்குழிஎன்று அழைக்கப்பட்டு வந்திருப்பதன்மூலம் இது சங்க காலத்தை சேர்ந்த தொல் பழங்கால உருக்கு ஆலையாக இயங்கியதையும் , தமிழர்களின் பண்பாட்டு வழக்கப்படி அவ்விடத்தில் நடக்கும் தொழிலையோ , அல்லது வேறு சில காரணப்பெயர்களிலேயோ இடங்களின் பெயர்கள் வழக்கிலிருப்பதை நாம் காண முடிகிறது இதே போன்றதொரு காரணப்பெயரோடு செந்நாக்குழி என்று அழைக்கப்பட்டு வருகிறது
கிடைக்கப்பட்ட தகவல்களும் , தரவுகளும் , பெயர்களும் சங்ககாலம் தொட்டே இவ்விடத்தில் இரும்பு உருக்கு ஆலை இயங்கியதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.



உருக்குலை என்பதற்கான சான்றுகள்  
இரும்புத்தாதுவாக உள்ள லேட்டரைட் பாறையில் உருக்காலை இருந்தால் அது உருகி இருக்கக்கூடும் என சிலர் கருதக்கூடும் ஆனால் உருக்குவதற்கு பயன்படுத்தப்படும் தாதுக்கள் முதலாவதாக சிறுதுகள்களாக மாற்றப்பட்டு பின்பு பொடியாக மாற்றிய பிறகு அத்துடன் கரித்தூளையும் கலந்து அதனை முதல்நிலை தாதுப்பிரிப்பு பணிக்கு உட்படுத்திடும் வகையில் உலோகத்தாது அதிக வெப்பத்தில் வறுக்கப்பட்டு கார்பன் துகள்களுடன் அடர்ப்பிக்கப்படுகிறது இதை அடுத்தக்கட்ட இரும்பு உருக்கு நிலைக்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது என்பதை தொல்லியல் ஆய்வுகளிலும் உலோக உருக்கு வரலாற்று பதிவுகளிலும் , தற்கால உலோகப்பிரிப்பு நடைமுறையோடும் ஒப்பிட்டு அறிந்து கொள்ளமுடிகிறது. மேலும் மூலப்பொருட்கள் அதிகம் கிடைக்கும் இடங்களிலேயே தொழிற்சாலைகள் அமைவது இயற்கை அதன்படி இரும்புத்தாது உருக்கு உலைக்கு அருகிலேயே தாதுக்கள் வெட்டியெடுக்கப்பட்டிருப்பதையும், இதன் அருகாமைப்பகுதிகளில் உருக்குக்கழிவுகள் விரவிக்கிடப்பதையும் தொடர் கள ஆய்வின் மூலம் கண்டறிந்து வருகிறோம். 
இந்நிலையில் இரும்பின் மூலப்பொருளான லேட்டரைட் பாறையில் உருக்கு உலை அமைப்பு அமைக்கப்பட்டாலும் அது உருகுவதற்கு இயற்பியல் முறைப்படி சாத்தியமில்லை மேலும் அது உருகிவிடும் என்று கூறும் கருத்து அறிவியலுக்கு புறம்பானதாக அமைந்துவிடும். 




உருக்கு குழிகளின் மேல் வரம்புகளில் அதிகவெப்பத்தை தாங்கும் செராமிக் மட்பாண்டங்களையோ அல்லது கலப்பு மண் உலோகக்கலன்களையோ அமரவைக்கும் வகையில் குழியின் மேற்புறத்தில் சிறு வரம்புகள் அமைக்கப்பட்டுள்ளதையும் இந்த அமைப்புகளில் காணலாம். அதுமட்டுமின்றி காற்றடிக்கும் துருத்தியை இணைக்கும் காற்று செலுத்து குழாயை பகுதியளவு பாறையிலும் அதன்மேல் மண் பூச்சு அமையும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். 
உருக்கு குழி அமைப்பில் கீழ்ப்பகுதியில் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக பாறையின் உட்பகுதியில் இருந்த வாயுக்கள் ஆவியானதைத்தொடர்ந்து கையால் தட்டும்போது "தொப் தொப்" என்ற மாறுபட்ட ஒலி எழுவதை உணரமுடிகிறது, இவ்வமைப்பு தவிர்த்த ஏனைய இடங்களில் இவ்வொலி எழும்புவதில்லை.

இது தோற்றத்தில் நீர்வரத்து பாதைபோல தோற்றமளிக்கக்கூடும். மிகப்பெரிய கோட்டையை அமைத்துவிட்டு அதன் அருகிலேயே அவர்களுக்கு தேவையான ஆயுத தடவாளங்களை செய்திருக்க வேண்டும் என்ற நோக்கிலும் இது தண்ணீரை சேமிக்கும் தொட்டியென கருதும்பட்சத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தனித்தனி தொட்டிகளை வட்ட வடிவிலும் , நீள் வட்ட வடிவிலும் , கதிர்கோல் வடிவிலும் அமைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதாலும், இத்தொட்டியில் மிருகங்களுக்கு தண்ணீர் வைக்கும் தொட்டி என்ற கருதும் பட்சத்தில் சமதள பரப்பிலோ அல்லது மேலே அமைக்கப்படும் தொட்டியிலோ, சாய்வான நீர்நிலைகளிலிலோ தண்ணீரை குதிரை, வேட்டை நாய் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் அருந்த இயலும் அதற்கும் கீழாக உள்ள நீரை படுத்துக்கொண்டோ அல்லது முட்டிப்போட்டோ தண்ணீர் குடிக்காது என்ற விலங்குகளின் நடைமுறை வாழ்வியலையும் ஒப்பு நோக்கும்போது இது தண்ணீருக்கான தொட்டி இல்லை என்பது புலனாகும்.




கோட்டையின் தென்புறம் இயங்கிய இரண்டாம் கட்ட வார்ப்பு ஆலைகள் :
பொற்பனைக்கோட்டையின் இரண்டாம்கட்ட உருக்கு ஆலைகளாக செயற்பட்ட உலோக வார்ப்பு அமைப்பு தென்புறமாக சுமார் 200 மீட்டர் தொலைவில் இரும்பு வார்ப்பு ஆலைகள் இயங்கி வந்துள்ளது. மேலும் இங்கு மூலப்பொருட்கலான செம்புராங்கற்கள் காணப்படவில்லை எனவே இந்த ஆலைக்கு தேவையான இரண்டாம்நிலை மூலப்பொருட்கள் முதற்கட்ட உலோகப்பிரிப்பு ஆலையிலிருந்தே பெறப்பட்டிருக்க வேண்டும்.



இவ்வாறு பெறப்பட்ட கார்பன் இரும்பு கூட்டுக்கலவை சுடுமண் இரும்புக்கலன்களில் உருக்கப்பட்டு அவை சுடுமண் வார்ப்பு குழாய்களில் ஊற்றப்பட்டு நீண்ட கம்பி போன்ற இரும்பின் அடிப்படை அமைப்பாக பெறப்பட்டிருப்பதை இங்கு விரவிக்கிடக்கும் சுடுமண் வார்ப்புகள் மூலம் அறிய முடிகிறது. மேலும் இந்த சுடுமண் குழாய்களின் கீழ்ப்பகுதி மண்படுகையில் புதைக்கப்பட்டு அதனுள் உருகிய உலோகம் ஊற்றப்பட்டிருப்பதை நம்மால் அடையாளம் காணப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் உறுதிபடுத்த முடிகிறது. மேலும் இந்த வார்ப்பு இரும்பு மூலமாக போர்த்தடவாளங்கள் , பாத்திரங்கள் , வாகனங்கள், இருப்பிடம் போன்றவற்றிற்கான உலோக மூலப்பொருட்களை இப்பகுதி மக்கள் பல தலைமுறைகளாக தயாரித்து வந்துள்ளதோடு உலோக உருக்கு அறிவியல் நுட்பத்தில் ஒரு மேம்பட்ட சமூகமாக வாழ்ந்துள்ளதையும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.











No comments:

Post a Comment

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....