Thursday, August 25, 2016

ஆசிரியம் கல்வெட்டு - புதுக்கோட்டை மாவட்டம் வாழமங்கலம் என்று அழைக்கப்படும் வாளுவமங்கலம்


புதுக்கோட்டை மாவட்டம் , குன்றாண்டார்கோயில் ஒன்றியம் வாழமங்கலம் கிராமத்தின் வயல்வெளியில் ஒரு துண்டு கல்வெட்டு இருப்பதாக அதே ஊரைச்சேர்ந்த யோகா பயிற்சியாளர் பாண்டியன் அளித்த தகவலைத்தொடர்ந்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கள ஆய்வு மேற்கொண்டு 14 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டில் உள்ள செய்திகளை வெளிப்படுத்தியுள்ளார்.


இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் மணிகண்டன் கூறியுள்ளதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழர்களும் இறுதிப்பகுதியில் பாண்டியர்களும் அதன் தொடர்ச்சியாக நிலையான ஒருங்கிணைந்த ஆட்சிமுறை மறையத்தொடங்கியதோடு 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாக அதிக நிலம் படைத்தவர்கள் அவ்வூரின் குறுநில மன்னர்களாக செயற்பட்டு வந்துள்ளனர், இவர்களுக்கான பாதுகாப்பை அவர்களே முறைப்படுத்திக்கொள்ளும் வகையில் வரிசெலுத்தி  பாடிகாவலை நியமித்துக்கொள்வது மரபாக இருந்து வந்துள்ளதை புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது, பாடி காவலுக்கென  தனியான வரிவிதிப்பு முறையும் இருந்துள்ளது. வரியானது  விளையும் பொருட்களின் தன்மை அடிப்படையில் கோல் அளவீட்டு முறை மூலம் பெறப்பட்டுள்ளது. நிலமில்லாத பிறரிடம்  ஆடு , மாடு  மற்றும் கோழி , இறைச்சி,நெய் ,பால் உள்ளிட்டவைகளும், அல்லது அதற்கு இணையான நிதியையோ கடமை என்ற பெயரில் வழங்குவது நடைமுறையில் இருந்துள்ளது.
மேலும் பிற்பகுதியில் கிராம பாடிகாவல் புரிவோர்  குளம் வெட்டுதல் , பாசனத்தை முறைப்படுத்தி வழங்குதல், கோயில் நிருவாகம் உள்ளிட்ட பொது நிகழ்வுகளை முன்னெடுக்கும் உரிமையை பெற்றனர்.



கீழைக்குறிச்சியும் பாடிக்காவலும்
புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள் 688 மற்றும் 691 ஆகியவை கீழைக்குறிச்சியை சேர்ந்தவர்கள் பாடிக்காவல் புரிந்தததையும் கள்வர்களால் கவர்ந்து செல்லப்பட்ட  பசுவை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்ததையும் இச்செயலுக்காக பயனடைந்த கிராமத்தவரால் பாடிகாவல் குழுவுக்கு விருந்து வழங்கப்பட்டதையும் கூறுகிறது.

பாடிக்காவல் ஆசிரியம்

தம்மால் பாதுகாக்கப்படும் கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினர் காவல்காத்து வருவதை தெரியப்படுத்தும் வகையில் கல்வெட்டினை ஊரின் எல்லையிலோ அல்லது வயல்களிலோ அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஊரின் மத்தியிலோ அல்லது கோயிலுக்கு அருகாமையிலோ அல்லது பாடிகாவல் புரியும் நிலப்பகுதியிலோ நட்டு வைத்திருப்பதை அறியமுடிகிறது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஊரின் வரி வசூல் உள்ளிட்ட உரிமைகளை வெளிப்படுத்தும் கல்வெட்டே ஆசிரியம் கல்வெட்டாக நடப்பட்டுள்ளது.


புதிய கல்வெட்டு சொல்லும் செய்தி
“ஸவஸ்தி ஸ்ரீ வட சிறுவாயி நாட்டு வாளுவமங்கலம் பகைத்தலைப்பாடியான கீழைக்குறிச்சியார் ஆசிரியம் விசையஞ்சாநல்லூர்” என்று கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது வாழமங்கலம் என்று அழைக்கப்படும் இவ்வூர் வடசிறுவாயி நாடு என்ற சோழ மன்னர்களால் பெயரிடப்பட்ட குறுநில நாட்டின் ஒருபகுதியாக இருந்துள்ளதோடு வாளுவமங்கலம் என்ற பெயரோடு வழங்கப்பட்டுள்ளதை  இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம் மேலும் இவ்வூரை கீழைக்குறிச்சியார் என்ற ஊர்ப்பெயரோடு அழைக்கப்பட்ட பாடிக்காவல் தலைவனின் கட்டுபாட்டில் இவ்வூர் வந்ததையும் , இவ்வூரின் பெயரை விசையஞ்சான் அல்லது விசையன் அஞ்சாதவன் என்ற பொருள்படும்படி தனது பெயரின் முன்னொற்றோடு விசையஞ்சாநல்லூர் என்று கல்வெட்டி நாட்டியிருப்பதையும் அறிகிறோம்.
அத்துடன்  தற்போது வரை வாழமங்கலத்தில் வசிக்கும் குறிப்பிட்ட இனத்தவரின் உறவினர்கள் கீழைக்குறிச்சி கிராமத்தினரோடு உறவு பேணி வருவதை இவ்வூரில் வசிக்கும் சங்கர்  மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் அளித்த  தகவல்களின் மூலம் உறுதி செய்துகொள்ள முடிகிறது என்றார்.




No comments:

Post a Comment

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....