புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் சுமார் 1500 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை
கொண்ட ஊராகும். இவ்வூரிலுள்ள மூவர் கோவிலின் சிதைந்த பகுதிகள் இலுப்பூர் தாலுக்கா மாதராப்படி
ஊரணிக்கரையிலும் ஊரணிக்குள்ளும் ஆங்காங்கே சிதைந்த நிலையில் கிடப்பதாகவும் ,
கரையிலும் உள்ளேயும் கிடக்கும் நான்கு துண்டு கல்வெட்டுகள் இவை கொடும்பாளூர்
கோவிலை சேர்ந்தவை என்பதை உறுதிபடுத்துவதாகவும் கொடும்பாளூர் இருக்கு வேளிர்கள்
வேளாளர் இனத்தை சார்ந்தவர்கள் என்பதை சான்றுகள் வெளிப்படுத்துவதாகவும் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர்
கரு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இவர் மேலும் கூறுகையில்
கொடும்பாளூர் இலக்கியங்களில்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் “கொடும்பை நெடுங்குளக்கோட்டம்
புக்கால்” என கொடும்பாளூரினைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அடுத்து அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு
கூறும் பெரியபுராணம் “குருகுறங்கும் கோனாட்டுக் கொடிநகரம் கொடும்பாளூர்” என கோனாட்டின் தலைநகராக
கொடும்பாளூர் விளங்கியதைத் தெரிவிக்கிறது.
தமிழக வரலாற்றின் இடைக்காலத்தில் கொடும்பாளுரில் இருக்குவேள் என்ற
தலைவர்கள் கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இவர்களில் சிலர் பல்லவர்களுக்குட்பட்டும் சிலர்
சோழ பாண்டியர்களுக்குட்பட்டும் ஆட்சி செய்து வந்தனர்.
கொடும்பாளுரில் கோவில்கள்
கொடும்பாளுரில் ஸ்ரீ முதுகுன்றமுடையார் கோவில், மூவர் கோவில், ஐந்தளி என்ற ஐவர் கோவில் என
மூன்று கோவில்கள்; முக்கியமான கோவில்களாகும்.
இருக்குவேள்களில் பூதிவிக்கிரமகேசரி தலைசிறந்தவனாகவும் மகிமாலய இருக்குவேள்,
பராந்தவேளாண்,
சிறிய வேளாண் என்ற
தலைவர்கள் கொடும்பாளுர் தலைவர்களில் மிக முக்கியமான தலைவர்கள் இருந்து வந்தனர்.
கொடும்பாளுர் தலைவர்களில் பூதி
விக்கிரமகேசரி கொடும்பாரில் மூவர் கோவிலையும், மகிமாலைய இருக்குவேள்
முதுகுன்ற முடையார் கோவில் என்ற முசுகுந்தேசுவரர் கோவிலையும் கட்டினர்.
ஐந்தளி என்ற ஐவர் கோவில் யாரால் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. மேற்கண்ட கோவில்களில் முசுகுந்தேசுவரர் கோவில்
முழுமையாகவும், மூவர் கோவில்களில் இரண்டு கோயில்கள் கருவறையுடன் கூடிய விமானத்துடன்
முழுமையாகவும் உள்ளன. மூவர் கோவிலில்
வடதளி மற்றும் தற்போதுள்ள இரண்டு கோவில்களின் அர்த்தமண்டபங்கள் மற்றும் மூன்று
கோவில்களுக்கும் பொதுவான மகாமண்டபம், மூவர் கோவிலின் பரிவாரதேவதைகளின் ஆலயங்கள்; ஆகியவை முற்றிலும்
அழிந்துவிட்டன. ஐந்தளி அதிட்டானம்,
முப்பட்டை குமுதம்
வரையுள்ள அடிமானம் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.
மற்றவை காலவெள்ளத்தில் கரைந்துவிட்டன. மூவர் கோவிலில் ஒவ்வொரு கோவிலின் கருவறையும்
21 அடி சதுரமாகவும்,
அர்த்த மண்டபங்கள்
ஒவ்வொன்றும் 18 அடி சதுரமாகவும், மூன்று கோவிலுக்கும் பொதுவான மகாமண்டபம் 91 அடி நீளமும் 41 அடி அகலமும் கொண்டவையாகவும்
உள்ளன. மூவர் கோவிலில் தற்போதுள்ள இரண்டு
கோயில்களின் ஒரே மாதிரியான அளவையும் அமைப்பையும் வைத்து அழிந்துவிட்ட மூவர்
கோவிலிலுள்ள வடக்கு தளியின் அமைப்பை ஒருவாறு ஊகிக்கலாம்.
மாதராப்பட்டியில் கொடும்பாளூர் கோவில் சிற்பங்களும்
கல்வெட்டுகளும்
கொடும்பாரில் காலவெள்ளத்தில் அழிந்துவிட்ட மேற்சொன்ன கோவில்களின்
கட்டுமான கற்கள், கொடும்பார் முசுகுந்தேசுவரர் கோவில் முன் உள்ள ஊரணியின் நான்கு கரைகளிலும் சுவர்கற்களாக
அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதே போல
கொடும்பார் பெருமாள் கோவிலில் வைத்து கட்டப்பட்டுள்ள கொடுங்கைகள்,
கொடும்பார்
பெரியகுளம், தாழைக்குளம் முதலான பாசனக் குளங்களின் கலிங்கில் உள்ள இக்கோவில்களின் கட்டுமான
கற்கள், கொடும்பாளூர் சாவடி என்ற கட்டிடத்தில் உள்ள சுமார் 6½ உயரமுடைய முற்கால சோழர் கலைப்பாணியில் அமைந்த இரண்டு தூண்கள், கொடும்பார்
சத்திரம் என்ற இடத்திலுள்ள கொடும்பாளுர் சத்திரம் என்ற கட்டிடத்தில் உள்ள சுமார்
ஐந்தடி உயரமுள்ள முற்கால சோழர்கலைப் பாணி தூண் ஆகியவைகளும் கொடும்பாளூருக்குக்
கிழக்கில் சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள மாதராப்பட்டி என்ற ஊருக்கு வடபுறமுள்ள ஊரணியின் நான்கு
கரைகளிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கோவில் கட்டுமான கலைப் படைப்புகள் அங்குள்ள
கல்வெட்டுக்கள் ஊரணிக்குள் கிடக்கும் உடைந்த சிற்பங்கள் ஆகியன அழிந்துவிட்ட
கொடும்பாளூர் கோவில்களின் அழகையும் அற்புதத்தையும்
தெரிவிப்பனவாகும்.
மாதராப்பட்டி ஊரணிக் கரையில் உள்ள கோவில் கட்டுமான கற்களில் கோவில் அதிட்டான
பாகங்களான உபானம், மகாபத்மம், குமுதகம், கணடம், வியாழவரி ஆகியவைகளும் கருவரை பாதவரிகள், பிரஸ்தரத்தின் பூத, கபோதக வியாழவரிகள், முதல் நிலை சாலாகரம் அதன்
பிரஸ்தரம், கண்டம், சிகரம் ஆகியவைகளின் பாகங்களும் உடைந்த சிலைகளும் கி.பி. 10ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் முழுமையான இரண்டு தமிழ்க்
கல்வெட்டுக்களும், அழிந்து விட்ட கொடும்பாளுர் கோவில் கட்டுமானக் கற்கள் என்பதை உறுதி செய்வனவாக
உள்ளன. மூவர் கோவிலில் நடுக்கோவிலுள்ள
பூதிவிக்கிரம கேசரியின் வடமொழி கல்வெட்டினைப் போன்ற கிரந்த எழுத்தமைதியில்
மாதராப்பட்டி ஊரணியிலுள்ள இரண்டு துண்டுக் கிரந்தக் கல்வெட்டுக்களும் மூவர்
கோவிலின் நடுத்தளியின் தென்புறச்சுவரின் தென்மேற்கு மூலையில் காணப்படும் கிரந்த
எழுத்தாலான இரண்டு துண்டுக்கல்வெட்டுக்கள் ஆகியன மூவர் கோவிலின் கட்டுமானக் கற்களை
ஒத்தவையாக உள்ளன.
மாதாரப்பட்டி ஊரணியின் தென்கரையில் தரையில் கிடக்கும் தூணில் உள்ள கல்வெட்டு
ஒன்றில்
1) ஸ்வஸ்திஸ்ரீ உர
2) ததூர் கொடும்
3) பார் மின்னா
4) மழைஈச்சவர
5) மும் கபாலத்து
6) ஏற்றுப் பெற்று அசி
7) தி பண்டிதர் வீ
8) ரமுருக்கி நங்கை
9) கோயில் பிரதிட்
10) டை செய்து ஆன
11) தின்பு அரள
12) வர் பாதி ஸிங்
13) பண்டிதர் எ
14) டுபிச்சமண்ட(ப)மு
15) ந்த் திருநிலை...
என்று கூறுகிறது4.
அடுத்து தெற்குக் கரையிலுள்ள மதகின் கீழுள்ள முப்பட்டைக் குமுதக் கல்லில்
1) ஸ்வ ஸ்தி ஸ்ரீ வேந்தாரு .................... கொடும்பை
2) வளரு வடசேய் .........................
3) சாந்து கொடுவாரி பறப்பித் திக்
4) கோயிலெடுப்பித்தவன் .............. யூரெனபட்ட
5) கலியின் வலியை முருக்குஞ் சீர்
6) அந்தராம ராவினான் ஆசிரி . தார் கவசம்
எனபடித்தரியப்பட்டது. மேலும் இந்த இரண்டாவது கல்வெட்டுள்ள கல்லின் மேல் பெரிய
பாராங்கல் வைக்கப்பட்டுள்ளதால் சில எழுத்துக்கள் கண்டறியப்படவில்லை, முதல் கல்வெட்டில் கொடும்பார் என்றும் இரண்டாவது கல்வெட்டில் கொடும்பை என்றும்
சொல்லாட்சிகள் காணப்படுகிறது. முதல்
கல்வெட்டில் கொடும்பார் மின்னா மழை ஈஸ்வரம் என்றும் காபாலத்து ஏற்று பெற்று
அசிதிபண்டிதர் வீரமுருக்கி நங்கை கோயில் பிரதிட்டை செய்து ஆனபின்பு எனச் சொல்வதால்
மின்னாமழை என்ற சிவன் கோவிலில் உள்ள வீரமுருக்கி நங்கை கோயில் ஒரு துர்க்கை
கோயிலை குறிப்பதாகக் கொள்ளலாம். மின்னா
மழை என்பது பூதி விக்கிரமகேசரியின் பட்டப் பெயர்களில் ஒன்று என்பதை பூதியின் மூவர்
கோவில் வடமொழிக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
அதனால் மின்னாமழை ஈஸ்வரம் என்பது மூவர்கோவிலில் உள்ள ஒரு கோவில் எனக் கருதலாம். அடுத்து மாதராப்பட்டி ஊரணிக்கரையிலுள்ள கற்கள்
அதாவது கோவில் கட்டுமான உறுப்புக்கற்கள் மூவர் கோவில் கட்டுமான உறுப்புக்களை
ஒத்துள்ளதால் இங்குள்ளவை கொடும்பார் கோவில் கட்டுமான கற்களே என்பதில் ஐயமில்லை.
கொடும்பாளுரில் வணிகக் குழுக்கள்
கொடும்பாளுர் கல்வெட்டொன்று “கொடும்பாளூர் இரண்டு வகை
நகரத்தாரும்” என்ற குறிப்பைத் தருகிறது. கொடும்பாரில் இருந்த இரண்டு வகை நகரத்தார்
யார் எனப் பார்க்கிற போது இக்கட்டுரை ஆசிரியரால் கொடும்பார் பெரியகுளத்து
மடைத்தூணில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் “ஷஸ்வஸ்திஸ்ரீ ஐநூற்றுவர் ரக்சை செய்வித்தான் சாத்தன்
நீலன்” என்ற சொற்றொடர் காணப்படுகிறது.
அடுத்து கொடும்பார் மணிக் கிராமத்தார் என பிரான்மலை கல்வெட்டு
கூறுவதால் இங்கு ஐநூற்றுவர், மணிக் கிராமத்தார் என்ற இருவகை வணிகக் குழுக்கள் இருந்ததை உணரமுடிகிறது.
கொடும்பாரில் முப்பெரும் கோவில்கள் மூன்று இடங்களில் இருந்தன
என யாவரும் அறிவோம். கொடும்பார்
கல்வெட்டு ஒன்றில் கொடும்பார் ஆலங்கோவில் என ஒரு கோவிலை குறிப்பிடுகிறது.
கொடும்பாளுரிலுள்ள முசுகுந்தேசுவரர் கோவில், மூவர்கோவில், ஐந்தளி ஆகியவற்றில் எது
ஆலங்கோயில் என்பது தெரியவில்லை.
இருக்கு வேளிர்கள் வேளாளர் இனத்தவரே
கொடும்பாளூர் மூவர் கோவிலில் உள்ள பூதி விக்கிரம கேசரியின் வடமொழிக்
கல்வெட்டுப் பூதி விக்கிரம கேசரியின் முன்னோரைப் பற்றிச் சொல்லும் போது பூதி தன்னை
‘யது குலதிலகன் “என்று கூறுவதைப்
பார்க்கிறோம். இதை வைத்து பூதியை யாதவ
குலத்தவர் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
அம்மைய நாயக்கனூர் நாயக்கர்கள் நாயக்கர் மரபைச் சேர்ந்தவர்கள். அம்மைய
நாயக்கனூர் ஜமீந்தார்களான அம்மைய நாயக்கர்களில் ஒருவர் கி.பி. 1802ல் மதுரை மாவட்டம் தனிச்சியம் கண்மாய் மடையினைச்
செய்து கல்வெட்டியதில் அதில் தன் வம்சாவழியை கூறும்போது தன்னை யதுகுலன் என்று குறித்துள்ளார்.
அடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அன்னதானமடம் லிங்கம நாயக்கன்கோட்டை
கல்வெட்டில் முத்துலிங்கநாயக்கர் கல்வெட்டில்.
“சுபதினத்தில் யாதவகோத்திர...ரெபவராகிய தொந்திலங்க நாயக்கர் புத்திரன்
முத்திலங்க நாயக்கரய்யன்” என்று குறிப்பிடுகிறார். மேற்கண்ட கல்வெட்டுக்களில் நாயக்கர்கள் தங்களை
யது குலத்தவர் என குறித்துள்ளதைப் பார்க்கிறோம். அடுத்து புதுக்கோட்டை மாவட்டம்
குளத்தூர் வட்டம் வெள்ளை மண்டபத்திற்கு கிழக்கில் நடப்பட்டுள்ள கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த
குளத்தூர் ராமசாமித் தொண்டைமான் என்பவர் லெட்சுமண ஐயங்கார் என்பவருக்கு குளத்தூர்
வரதராசப் பெருமாள் கோவில் மண்டகப்படித் தர்மத்துக்காகக் கொடுக்கப்பட்ட கல்வெட்டில்
லெட்சுமண ஐயங்காரைக் குறிக்கிற போது பரத்துவாச கோத்திரரான ஆபஸ்தம்ப சூத்திரரான
யெதுசாகா அத்தியாயரான சோமாஜி லெட்சுமண ஐயங்காருக்கு எனக் குறிக்கப்பட்டுள்ளது. சோமாஜி என்றால் சோமயாகத்தை முறைப்படி கற்றவர்
என முனைவர். ஒய். சுப்பராயலு அவர்கள் குறித்துள்ளார்கள். பிராமணரில் ஐயங்கார் என்பவர்கள் விஷ்ணு
மதத்தைச் சேர்ந்தவர்கள். நாயக்கர்கள்
மற்றும் ஐயங்கார் ஆகியவர்கள் விஷ்ணு மதத்தைச் சார்ந்தவர்கள். விஷ்ணுவின் ஒரு அவதாரம் கண்ணன். கண்ணனுக்கும் யாதவர் குடிக்கும் உள்ள தொடர்பை
வைத்து கண்ணனைத் தெய்வமாக வழிபட்டவர்கள் தங்களை யது வம்சம் என கூறிக் கொண்டதையே
இது காட்டுகிறது.
கொடும்பாளூர் இருக்கு வேளிர்களில் பூதி விக்கிரம கேசரி தன்னை யது
குல திலகன் எனக் கூறிக் கொண்டாலும் கொடும்பாளூர் தலைவர்கள் பலரும் தங்களது
பெயருக்கு அடுத்து வரும் பின்னொட்டில் வேளான் அல்லது வேளார் என்றே
கூறுகின்றனர். அதனால் கொடும்பாளூர்
வேளிர்கள் வேளாளர் மரபைச் சேர்ந்தவர்களாவர். கண்ணனை வழிபட்டு அதன் காரணமாக அவர்கள்
தங்களை யதுகுல திலகன் என கூறினர் போலும் என்றார்.
No comments:
Post a Comment