Thursday, August 25, 2016

புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்கால கல்வெட்டு பொறிக்கப்படும் முறையை வெளிப்படுத்தும் அரிய சான்றுகள் கண்டுபிடிப்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்கால கல்வெட்டு பொறிக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட வரைவு செங்கோடுகள் மற்றும் வரைவு எழுத்துகள் அடங்கிய அரிய சான்றுகள் கந்தர்வகோட்டை ஒன்றியம் நொடியூர் சிவன் கோயில் குளத்தூர் தாலுக்கா நார்த்தாமலை கடம்பர் கோயில் புதுக்கோட்டை வட்டம் திருவிடையாப்பட்டி சிவன் கோவில்களில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிர்வாகிகள் மேலப்பனையூர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் மங்கனூர் மணிகண்டன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான மணிகண்டன் கூறியதாவது,
வரலாற்று ஆவணங்கள்
உலகின் பாரம்பரிய வரலாற்று உண்மைகளை தற்கால மக்கள் அறியும் வகையில் குகைகளில் வரையப்பட்ட செங்கோட்டு ஓவியங்களும்,  ஓலைச்சுவடிகளும் , களிமண் உருவங்களும் , பானைகளில் கீறப்பட்ட முற்கால எழுத்துருக்களும் , செப்பேடுகளும் ,  புடைப்பு சிற்பங்களும் சான்றுகளாக அமைந்துள்ளன.  இதன் பிற்கால வளர்ச்சியாக இரண்டாயிரம் ஆண்டுகளில் அசோகர் கால கல்வெட்டு முதல் தமிழகத்தின் பழமையான விழுப்புரம் ஜம்பை, புதுகோட்டை பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் வரை தன்னகத்தே பல்வேறு செய்திகளை தாங்கி நிற்கின்றன.

கல்வெட்டுகள்
கல்வெட்டுகள் பல்வேறு வரலாற்று உண்மைகளை நமக்கு தெரியப்படுத்தும் முக்கிய ஆவணமாக இருந்துவருகிறது மொழியானது எழுத்து வடிவம் பெற்று சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பழங்கால கல்வெட்டு எழுதும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் கல்வெட்டின் காலம் , கல்வெட்டு எந்த ஊரில் என்ன காரணத்திற்காக பொறிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும் அத்துடன் கல்வெட்டில் யாரால் பொறிக்கப்பட்டது என்கிற விவரங்களும் அடங்கியிருக்கும்.

கல்வெட்டு குறித்த அரிய சான்று

கல்வெட்டுகள் எவ்வாறு ஒரே வரி வடிவில் பொறிக்கப்பட்டன என்பதற்குரிய சான்றுகள் இதுவரை எந்த கல்வெட்டுக்களிலோ பழங்கால ஆவணங்களிலோ தெரிவிக்கப்படாத நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்கால கல்வெட்டு பொறிக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட வரைவு செங்கோட்டு எழுத்துகள் அடங்கிய அரிய சான்றுகள் கந்தர்வகோட்டை ஒன்றியம் நொடியூர் சிவன் கோயில் , குளத்தூர் தாலுக்கா நார்த்தாமலை கடம்பர் கோயில் , புதுக்கோட்டை வட்டம் திருவிடையாப்பட்டி சிவன் கோவில்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு எழுதிய முறை

கோயில் உள்ளிட்ட பொதுவான இடங்களிலேயே கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன .  குறிப்பாக கல்வெட்டு பொறிக்கப்பட வேண்டிய கற்களை , கட்டுமானத்தில் நிர்மாணித்த பிறகே , தாம் சொல்லவந்த செய்தியை கல்வெட்டுகளில் பொறித்துள்ளனர். இதில் ஒரே கோயிலில் , வெவ்வேறு மன்னர்களின் கல்வெட்டுகளை காண முடிகிறது .

நொடியூரில் அதிட்டானம் வரை மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டும் ,  பித்தி எனும் சுவர் பகுதிகளில் மாறவர்மன் குலசேகரத்தேவன் கல்வெட்டுகளோடு கோயிலின் கருவறையின் பின்புற சுவரின் மேற்பகுதியில் கல்வெட்டு பொறிக்கப்படுதுவதற்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகளுடன் காவி கொண்டு மயிரிழை அளவில் நீள்வாக்கிலான 5 சென்டிமீட்டர் இடைவெளிகளுடன் கூடிய நெடுக்கு கோடுகளும் ,  மேலிருந்து கீழாக 5.5 சென்டிமீட்டர் இடைவெளிகளுடன் கூடிய  குறுக்கு கோடுகளும் , வரையப்பட்டுள்ளன .  அதனுள் உள்ள நீள் சதுர கட்டங்களில் காவி கொண்டு செங்கோட்டு எழுத்துக்களை முன்வரைவு செய்துள்ளதையும் ,
 அதே போன்று நார்த்தாமலை கடம்பர் கோயில் , திருவிடையாப்பட்டி சிவன் கோயில்களில் குறுக்கு கோடுகள் மட்டும் போடப்பட்டு அதனுள் கல்வெட்டு பொறிக்கப்பட வேண்டிய முன் வரைவு எழுத்துகள் காவி (பெரஸ் ஆக்சைடு) கொண்டு எழுதப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளோம் . இதன் மீது உளி கொண்டு எழுத்துக்களை பொறிக்கும் பணி நடப்பது போர் உள்ளிட்ட வேறு சில காரணங்களால் தடைப்பட்டிருக்க வேண்டும் .  
இதனால் சுமார் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில்  முன்வரைவு செய்யப்பட்டு இதுநாள் வரை பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் , ஆங்காங்கே அழிந்து மறைந்த நிலையில் இருந்தாலும் , மிகநுட்பான காவிக்கோடுகள் உள்ளிட்டவைகளுடன்,  தெளிவாக கிடைத்துள்ளது . காவி கொண்டு எழுதப்பட்ட இந்த எழுத்துருக்கள் கல்வெட்டியல் வரலாற்றின் கல்வெட்டு எழுதப்பட்ட முறைக்கு மிக அரிய ஆவணமாக உள்ளதோடு  பல்வேறு தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.







No comments:

Post a Comment

தொல்லியல் கழகத்தின் 30, 31 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆவணம் ஆய்விதழ் வெளியீட்டு விழா ( புதுக்கோட்டை)

மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. கவிதாராமு , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு . வை....